Monday, October 24, 2011

291. மாலை மலைந்தனனே!

291. மாலை மலைந்தனனே!

பாடியவர்: நெடுங்களத்துப் பரணர். இவர் பெயர் பரணர். இவர் திருச்சிராப்பள்ளிக்கு கிழக்கே காவிரிக்கரையின் தென்கரையிலுள்ள நெடுங்களம் என்ற ஊரைச் சார்ந்தவர் என்றும், பரணர் என்ற பெயருடைய புலவர் மற்றொருவர் சங்க காலத்தில் இருந்ததால், இவரை அவரிடமிருந்து வேறுபடுத்துவதற்காக இவர் நெடுங்களத்துப் பரணர் என்று அழைக்கப்பட்டதாகவும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார். ஏடுகளில் நெடுங்களத்து என்பது நெடுங்கழத்து என்றும் பின்னர் நெடுங்கழுத்து என்றும் திரிந்தது என்று கருதப்படுகிறது. காலப்போக்கில், இவர் நெடிய கழுத்துடையவராக இருந்ததால் இவர் நெடுங்கழுத்துப் பரணர் என்ற அழைக்கப்பட்டதாக ஒருகதையும் தோன்றத் தொடங்கியது என்றும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை குறிப்பிடுகிறார்.
பாடலின் பின்னணி: ஒருகால், அரசன் ஒருவன் தன் பகைவர்கள் கவர்ந்து சென்ற ஆநிரைகளை மீட்பதற்குப் படை திரட்டினான். அரசன் ஆணைப்படி வீரர்கள் பலரும் கரந்தைப் போருக்குப் புறப்பட்டனர். வீரர்கள் போருக்குப் போகுமுன், அவர்களுள் சிறப்புடைய வீரன் ஒருவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டு தான் அணிந்திருந்த பலவடங்களுடைய மாலையை அவ்வீரனுக்கு அரசன் அணிவித்தான். அதைக்கண்டவர்கள் அவ்வீரனின் மனைவியிடம் அரசன் அவள் கணவனுக்குத் தன் மாலையை அணிவித்ததைத் தெரிவித்தனர். பின்னர், அவ்வீரன் போரில் இறந்தான். அவன் மனைவி அவனைக் காணப் போர்க்களத்திற்குச் சென்றாள். அரசன் அணிவித்த மாலையை அவள் கணவன் அணிந்திருப்பதைக் கண்டாள். தன் கணவன் இறந்ததால் தான் வருந்துவதைப் போலவே அரசனும் வருந்துவானாக என்று அவள் கூறுவதாக இப்பாடலில் நெடுங்களத்துப் பரணர் கூறுகிறார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: வேத்தியல். வீரர்கள் அரசனுடைய பெருமையைக் கூறுதல்.

சிறாஅஅர்! துடியர்! பாடுவன் மகாஅஅர்
தூவெள் அறுவை மாயோற் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்; யானும்
விளரிக் கொட்பின் வெண்ணரி கடிகுவென்;
5 என்போற் பெருவிதுப்பு உறுக வேந்தே;
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
மணிமருள் மாலை சூட்டி அவன்தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே.

அருஞ்சொற்பொருள்:

1. சிறாஅஅர் = சிறுவர்; துடியர் = துடி என்னும் பறயை அடிப்பவர்; மகாஅஅர் = மக்கள். 2. தூ = தூய்மை; வெள் = வெண்மையான; அறுவை = ஆடை; மாயோன் = பெரியவன் (கரியவன்). 3. இரு = பெரிய; இரும்புள் = பெரிய பறவை; பூசல் = ஆரவாரம்; ஓம்புதல் = தவிர்தல், நீக்கல். 4. விளரி = ஒரு பண்; கொட்பு = சுழற்சி; கடிதல் = ஓட்டுதல். 5. விதுப்பு = நடுக்கம்; கொன் = பயனின்மை (எதுவும் இல்லாமல் இருத்தல்). 7. மருள் = மயக்கம் (கலத்தல்). 8. காழ் = மணிவடம்; மலைதல் = அணிதல்.

உரை: சிறுவர்களே! துடி அடிப்பவர்களே! பாடும் வல்லமைபெற்ற பாணர்களே! தூய வெள்ளாடை உடுத்திய கரிய நிறமுடைய என் கணவனை நெருங்கியுள்ள பெரிய பறவைக் கூட்டத்தின் ஆரவாரத்தை நீக்குவீர்களாக; நானும் விளரிப் பண்ணைப் பாடிச் சுற்றிவந்து, வெள்ளை நிறமுள்ள நரிகள் அவனுடலை நெருங்கவிடாமல் ஓட்டுவேன். வேந்தனுக்காக எந்தக் காரணமுமின்றித் தன் உயிரைத் தர விரும்பும் என் தலைவனுக்கு, அவ்வேந்தன் தன் மார்பில் இருந்த பலமணிகள் கலந்த மாலையை அணிவித்து என் கணவன் அணிந்திருந்த ஒற்றைவட மாலையைத் தான் அணிந்துகொண்டான். என் தலைவன் இறந்ததால் நான் வருத்தத்தோடு நடுங்குவதைப்போல் அவ்வேந்தனும் வருந்தி நடுங்கட்டும்.

சிறப்புக் குறிப்பு: போருக்குச் செல்லும் வீரர்கள் வெண்ணிற ஆடை அணிந்து செல்வது மரபு என்பது இப்பாடலிலிருந்தும், ”வெளிது விரித்து உடீஇ” என்று ஒக்கூர் மாசாத்தியார் பாடல் 279-இல் கூறியிருப்பதிலிருந்தும் தெரியவருகிறது.

No comments: