Tuesday, October 4, 2011

279. செல்கென விடுமே!

279. செல்கென விடுமே!

பாடியவர்: ஒக்கூர் மாசாத்தியார் (279). இவரது இயற்பெயர் மாசாத்தியார். இவர் ஒக்கூர் என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஒக்கூர் மாசாத்தியார் என்று அழைக்கப்பட்டார். இவர் புறநானூற்றில் இயற்றிய இப்பாடல் மட்டுமல்லாமல், அகநானூற்றில் இரண்டு பாடல்களையும் ( 324, 384), குறுந்தொகையில் ஐந்து பாடல்களையும் (126, 139, 186, 220, 275) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: ஒருகால், ஓரூரில் போர் நடைபெற்றது. அவ்வூரில் இருந்த முதிய வயதுடைய பெண்மணி ஒருத்தியின் கணவன், நேற்று நடைபெற்ற போரில், பகைவர்களால் கவரப்பட்ட ஆநிரைகளை மீட்கும்பொழுது இறந்தான். அதற்கும் முதல் நாள் நடைபெற்ற போரில், அவள் தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான். போர் தொடர்ந்து நடைபெறுகிறது. ஊரில் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக் கேட்ட அப்பெண்மணி மகிழ்ச்சியுடன் தன் ஒரே மகனைப் போருக்கு அனுப்பத் துணிந்தாள். அவனோ மிகவும் சிறியவன்; தானாகத் தன் தலையைச் சீவி முடிந்துகொள்ளக்கூடத் தெரியாத சிறுவன். அவள் அவனை அழைத்து, அவனுக்கு ஆடையை உடுத்தி, தலையில் எண்ணெய் தடவிச் சீவி முடித்து, அவன் கையில் வேலைக் கொடுத்துப் போருக்கு அனுப்புகிறாள். இக்காட்சியைக் கண்ட புலவர் ஒக்கூர் மாசாத்தியார் அப்பெண்மணியின் வீரத்தை இப்பாடலில் வியந்து பாடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: மூதின்முல்லை. வீரர்க் கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.


கெடுக சிந்தை; கடிதுஇவள் துணிவே;
மூதின் மகளிர் ஆதல் தகுமே;
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து களத்துஒழிந் தனனே;
5 நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே;
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
10 ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கஎன விடுமே.


அருஞ்சொற்பொருள்:

1. கடிது = கடுமையானது. 2. மூதில் = முதுமையான குடி. 3. செரு = போர். 6. விலங்குதல் = குறுக்கிடுதல். 7. செருப்பறை = போர்ப்பறை. 8. வெளிது = வெள்ளிய (வெண்மையான); உடீஇ = உடுத்தி. 9. பாறுதல் = ஒழுங்கறுதல், சிதறுதல்; பாறுமயிர் = உலர்ந்து விரிந்த மயிர்.

உரை: இவளது சிந்தை கெடுக; இவளது துணிவு மிகவும் கடுமையானது. முதுமையான மறக்குலப் பெண் என்று சொன்னால் அதற்கு இவள் தகுதியானவள். முந்தாநாள், இவளுடைய தந்தை, யானையை எதிர்த்துப் போரிட்டு, அப்போரில் இறந்தான். நேற்று நடைபெற்ற போரில், இவள் கணவன் ஆநிரைகளை பகைவர்களிடமிருந்து மீட்கும் போரில் இறந்தான். இன்று மீண்டும் போர்ப்பறை ஒலிக்கிறது. அதைக்கேட்டுப், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால் அறிவு மயங்கித் தன்னுடைய ஒரே மகனாகிய சிறுவனை அழைத்து, அவனுக்கு வெண்ணிற ஆடையை உடுத்தி, அவனுடைய பரட்டைத் தலையில் எண்ணெய் தடவி, சீவி முடித்து, கையில் வேலைக் கொடுத்துப் “போர்க்களத்தை நோக்கிச் செல்க” என்று அனுப்பினாள்.

சிறப்புக் குறிப்பு: “கெடுக சிந்தை, கடிது இவள் துணிவு” என்று கூறியது இகழ்வதுபோல் புகழ்வது என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் குறிபிடுகிறார். தந்தையையும், கணவனையும் போரில் இழந்தாலும், போரில் வெற்றிபெற வேண்டும் என்ற விருப்பத்தால், தன் ஒரே மகனை – மிகவும் சிறிய வயதுடைய ஒரே மகனை – போருக்கு அனுப்புவதால் அவள் “மூதில் மகள்” என்ற அடைமொழிக்குத் தகுதியானவள்தான் என்பதைப் புலவர் நன்கு எடுத்துரைக்கிறார்.

இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதைப் போன்ற வீரமுள்ள தமிழ்ப் பெண்டிர், சங்க காலத்தில் மட்டுமல்லாமல் தற்காலத்திலும் இருக்கிறார்கள் என்பதற்கு, அண்மையில் ஈழத்தில் நடந்த இனப்போரில் தம் தந்தை, உடன் பிறந்தோர் ஆகியோரையும், தம் பிள்ளைகளையும், பெண்களையும் இழந்து, தாங்களே போருக்குச் சென்ற பெண்களின் வீரச்செயல்கள் சான்றாகத் திகழ்கிறது.

5 comments:

Venkat Bala said...

வாழ்த்துக்கள்

பாஸ்கர் கந்தசாமி said...

மிக மிக அருமை, உயர்ந்த பணிக்கு நிறைந்த வாழ்த்துக்கள். 😍😍😍🙏

முனைவர். பிரபாகரன் said...

அன்பிற்குரிய பாஸ்கர் கந்தசாமி அவர்களுக்கு,
வணக்கம்.
நீங்கள் என்னுடைய வலைத்தளத்திற்குச் சென்று புறநானூற்றுப் பாடலைப் படித்ததற்கும், அதற்காக நீங்கள் என்னைப் பாராட்டியதற்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல். தமிழ்ப்பெண்கள் போர்க்களத்திற்குச் சென்று போர் புரியாவிட்டாலும், உள்ளத்தளவில் அவர்கள் வீரமுடையவர்களாக இருந்தார்கள்; இன்றும் அவ்வாறு இருக்கிறார்கள். அண்மையில் ஈழத்தில் நடைபெற்ற போரில்,பல பெண்கள் போரில் ஈடுபட்டார்கள் என்பது தமிழ்ப்பெண்களின் வீரத்திற்குச் சான்று. இதுபற்றி நான் பல மேடைகளில் பலமுறை கூறியிருக்கிறேன்.

மீண்டும் உங்களுக்கு என் நன்றி.

அன்புடன்,
பிரபாகரன்

Unknown said...

மிகவும் அருமை நன்றி

முனைவர். பிரபாகரன் said...


Dear Unknown,

Thanks.

Prabhakaran