288. மொய்த்தன பருந்தே!
பாடியவர்: கழாத்தலையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 62 - இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், பெரும்போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போரில் வீரன் ஒருவனின் மார்பில் வேல் பாய்ந்தது. வேல் பாய்ந்த மார்புடன் அவன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் மனைவி அவனைத் தழுவும் நோக்கத்தோடு அவன் அருகில் வந்தாள். அவளைத் தழுவவிடாமல் அவன் உடலைப் பருந்துகள் மொய்த்தன. இக்காட்சியைப் புலவர் கழாத்தலையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.
கழாத்தலையார் 62-ஆம் பாடலில் சேரன் இமயவரம்பன் நெடுஞ்சேரலாதனுக்கும் சோழன் வேற்பஃறடக்கைப் பெருவிறற்கிள்ளிக்கும் இடையே நடந்த போரில் அவ்விருவரும் இறந்ததைப் பாடியுள்ளார். இப்பாடலில் இவர் கூறும் வீரனைப் பற்றிய செய்திகளை அப்போரோடு சிலர் தொடர்புபடுத்துகிறார்கள். இப்பாடலில் குறிப்பிடப்படும் போருக்கும் பாடல் 62-இல் குறிப்படப்படும் போருக்கும் தொடர்பு இருப்பதற்கான சான்றுகள் எதுவும் இப்பாடலில் காணப்படவில்லை.
இப்பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.
திணை தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.
மண்கொள வரிந்த வைந்நுதி மருப்பின்
அண்ணல் நல்ஏறு இரண்டுடன் மடுத்து
வென்றதன் பச்சை சீவாது போர்த்த
திண்பிணி முரசம் இடைப்புலத்து இரங்க
5 ஆர்அமர் மயங்கிய ஞாட்பின் தெறுவர
நெடுவேல் பாய்ந்த நாணுடை நெஞ்சத்து
அருகுகை .. .. .. .. .. .. மன்ற
குருதியொடு துயல்வரும் மார்பின்
முயக்கிடை ஈயாது மொய்த்தன பருந்தே.
அருஞ்சொற்பொருள்:
1. வரிந்த = வரி அமைந்த; வை = கூர்மை; நுதி = நுனி; மருப்பு = விலங்கின் கொம்பு. 2. அண்ணல் = பெருமை; தலைமை; மடுத்தல் = குத்துதல். 3. பச்சை = தோல். 4. திண்பிணி = திண்ணியதாய்க் கட்டப்பட்ட; புலம் = இடம்; இடைப்புலம் = போர்க்களத்தின் நடுவிடம்; இரங்கல் = ஒலித்தல். 5. ஆர் = அருமை; அமர் = போர்; ஞாட்பு = போர்; தெறு = சினம்; 7. மன்ற = நிச்சயமாக. 8. துயல்வரும் = அசையும். 9. முயக்கு = முயங்கல் = தழுவல்; இடை = இடம்.
உரை: மண்ணைக் குத்தியதால் வரிவரியாகக் கோடுகள் உள்ள கூரிய கொம்பினையுடைய பெருமைபொருந்திய நல்ல ஏறுகள் இரண்டைப் போரிடச் செய்து, வெற்றிபெற்ற ஏற்றின் தோலை உரித்து, மயிர் சீவாத அத்தோலால் போர்த்தப்பட்ட முரசு போர்க்களத்தின் நடுவே ஒலித்தது. தடுத்தற்கரிய போர் நடந்த அப்போர்க்களத்தில் சினம் தோன்ற, பகைவர் எறிந்த நெடியவேல் வந்து பாய்ந்ததால் ஒரு வீரன் நாணமுற்றான். குருதியோடு துடிக்கும் அவனது மார்பைத் தழுவவந்த அவன் மனைவியைத் தழுவவிடாமல் பருந்துகள் அவன் உடலை மொய்த்தன.
சிறப்புக் குறிப்பு: கேடயம் கையிலிருந்தும், தன்னை நோக்கிவந்த வேலைத் தடுத்துத் தன்னைப் பாதுகாத்துக்கொள்ளாததால், “நாணுடை நெஞ்சத்து” என்று புலவர் கழாத்தலையார் குறிப்பிடுகிறார் போலும்.
போர் முரசு செய்வதற்குப் பயன்படுத்தப்படும் தோல், வீரம் மிகுந்த ஏற்றினின்று எடுக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது பழங்கால மரபு என்று இப்பாடலிலிருந்தும், “கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த, மாக்கண் முரசம்” என்ற மதுரைக் காஞ்சியின் வரிகளிலிருந்தும் (752-3) தெரியவருகிறது. ஏற்றின் தோல் மயிர் சீவாது பயன்படுத்தப்பட்டிருப்பதும் தெரியவருகிறது.
No comments:
Post a Comment