Monday, October 24, 2011

287. காண்டிரோ வரவே!

287. காண்டிரோ வரவே!

பாடியவர்: சாத்தந்தையார். இவரைப்பற்றிய குறிப்புக்களைப் பாடல் 80 - இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் போரவைக் கோப்பெரு நற்கிள்ளி என்பவன் தன் தந்தையோடு கொண்டிருந்த கருத்து வேறுபாட்டின் காரணமாக, தந்தையோடு வாழாமல் ஆமூரில் வாழ்ந்துவந்தான். அவன் ஆமூரை ஆண்ட மன்னனுக்குத் தானைத் தலைவனாகப் பணிபுரிந்தான். ஒருகால், பகை அரசனின் வீரர்கள் ஆமூரிலிருந்த ஆநிரைகளைக் கவர்ந்து சென்றனர். அவற்றை மீட்கும் பொறுப்பு கோப்பெரு நற்கிள்ளிக்கு உரியதாயிற்று. அவன் தன் வீரர்களுடன் கரந்தைப் போருக்குச் சென்றபொழுது, வீரர்களை ஊக்குவிப்பதற்காகக் கூறியவற்றை சாத்தந்தையார் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: நீண்மொழி. ஓருவீரன் போர்க்களத்தில் கூறிய சூளுரையைக் கூறுவது.


துடி எறியும் புலைய!
எறிகோல் கொள்ளும் இழிசின!
கால மாரியின் அம்பு தைப்பினும்
வயல் கெண்டையின் வேல் பிறழினும்
5 பொலம்புனை ஓடை அண்ணல் யானை
இலங்குவால் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதல் புரளும்
10 தண்ணடை பெறுதல் யாவது? படினே,
மாசில் மகளிர் மன்றல் நன்றும்
உயர்நிலை உலகத்து நுகர்ப; அதனால்
வம்ப வேந்தன் தானை
இம்பர் நின்றும் காண்டிரோ வரவே.

அருஞ்சொற்பொருள்:

1. துடி = ஒருவகைப் பறை; எறிதல் = அடித்தல்; புலையன் = பறை அடிப்பவன். 2. எறிகோல் = பறையடிக்கும் குறுந்தொடி; இழிசினன் = பறையடிப்பவன். 3. மாரி = மழை. 4. பிறழ்தல் = துள்ளுதல். 5. பொலம் = பொன்; புனைதல் = அணிதல், அலங்கரித்தல்; ஓடை = யானையின் நெற்றிப் பட்டம்; அண்ணல் = தலைமை. 6. இலங்குதல் = விளங்குதல்; வால் = வெண்மை; மருப்பு = விலங்கின் கொம்பு (யானையின் தந்தம்); நுதி = நுனி; மடுத்தல் = குத்துதல். 7. பீடு = பெருமை. 9. வியன் = மிகுதி; கூடு = நெற்கூடு. 10. தண்ணடை = மருத நிலத்தூர்; யாவது = எது (என்ன பயன்?); படுதல் = இறத்தல். 11. மாசு = குற்றம்; மன்றல் = திருமணம். 12. நுகர்தல் = அனுபவித்தல். 13. வம்பு = குறும்பு. 14. இம்பர் = இவ்விடம்; காண்டீரோ = காண்பீராக.

கொண்டு கூட்டு: புலைய, இழிசின, பீடுடையாளர் பெறுதல் யாவது; படின் மன்றல் நன்றும் நுகர்ப; அதனால் வரவு காண்டீர் எனக் கூட்டுக.

உரை: துடிப் பறையை அடிக்கும் பறையனே! குறுந்தடியால் பறையடிக்கும் பறையனே! கார்காலத்து மழைபோல் அம்புகள் உடம்பில் தைக்குமாயினும், வயல்களில் பிறழும் கெண்டை மீன்கள் போல வேற்படைவந்து பாயினும், பொன்னாலான நெற்றிப்பட்டம் அணிந்த பெருமை பொருந்திய யானைகள் விளங்குகின்ற, வெண்மையான தந்தங்களின் நுனியால் குத்தினாலும், அஞ்சிப் புறமுதுகுகாட்டி ஓடாத பெருமைபொருந்திய வீரர்கள் ஆழ்ந்த நீருடைய பொய்கையிலிருந்து கிளர்ந்தெழுந்த வாளைமீன் நெல்வளமிக்க வீட்டின் புறத்தே நிறுத்தப்பட்ட நெற்கூட்டில் புரளும் மருதநிலத்தூர்களைப் பெறுவதால் என்ன பயன்? வீரர்கள் போரில் இறந்தால், அவர்கள் மேலுலகத்தில் குற்றமற்ற மகளிரை மணந்து நன்கு இன்பம் அனுபவிப்பார்கள். அதனால், குறும்பு செய்யும் பகைவேந்தனுடைய படைவருவதை இங்கிருந்தே காண்பீராக.

சிறப்புக் குறிப்பு: ”போரில் இறந்தவர்கள் மேலுலக்த்திற்குச் செல்வார்கள். அங்குச் சென்று அங்குள்ள மகளிரை மணம்புரிந்து இன்பம் அனுபவிப்பார்கள்.’ என்ற நம்பிக்கை சங்க காலத்தில் இருந்ததாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.

No comments: