282. புலவர் வாயுளானே!
பாடியவர்: சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ (282). இவன் முடிசூடிய மூவேந்தருள் ஒருவனாக சிறந்து விளங்கியது மட்டுமல்லாமல், சிறந்த தமிழ்ப் புலமை உடையவனாகவும் விளங்கினான். இவன் புறநானூற்றில் 282 - ஆம் பாடலையும், அகநானூற்றில் 11 செய்யுட்களையும் (5, 99, 111, 155, 185, 223, 261, 267, 291, 313, 379), குறுந்தொகையில் 10 பாடல்களையும் (16, 37, 124, 135, 137, 209, 231, 263, 283, 398), நற்றிணையில் 10 செய்யுட்களையும் (9, 48, 118, 202, 224, 256, 318, 337, 384, 391), கலித்தொகையில் பாலைக்கலி முழுவதையும் (1-35) இயற்றிய பெரும்புலவன். இவன் பாலைத் திணைப் பாடல்களை இயற்றுவதில் மிகுந்த புலமையுடையவனாக இருந்தான். இவன் பாடல்கள் அனைத்தும் இலக்கிய நயமும், கருத்துச் செறிவும் உடையவை. புறநானூற்றின் 11 – ஆம் பாடலில் புலவர் பேய்மகள் இளவெயினி இவனைப் புகழ்ந்து பாடியுள்ளார்.
பாடலின் பின்னணி: போர்புரியும் ஆற்றலில் சிறந்து விளங்கிய வீரன் ஒருவன் போரில் புண்பட்டு இறந்தான். அவனைக் காணச் சான்றோர் ஒருவர் சென்றார். அச்சான்றோர் அவ்வூரில் இருந்தவர்களிடம் அவன் எங்கே உள்ளான் என்று கேட்டார். அவ்வூரில் உள்ளவர்கள், “அவ்வீரன் போரில் செய்தற்கரிய சாதனைகளைச் செய்தவன். மார்பில் வேல்கள் ஊடுருவினாலும் அவன் தொடர்ந்து போர்செய்தான். அவன் செய்த செயற்கரிய செயல்களால் அவன் பெரும்புகழடைந்தான். அவன் எங்கு உள்ளான் என்று நீங்கள் கேட்கிறீர்கள். அவன் புலவர்களின் வாயில் உள்ளான்” என்று பதிலளித்தார்கள். இக்காட்சியைப் புலவர் பாலைபாடிய பெருங்கடுங்கோ இப்பாடலில் கூறுகிறார். இப்பாடலில், சில பகுதிகள் கிடைக்கவில்லை.
திணை: தெரியவில்லை.
துறை: தெரியவில்லை.
எஃகுஉளம் கழிய இருநில மருங்கின்
அருங்கடன் இறுத்த பெருஞ்செய் ஆளனை
யாண்டுள னோவென வினவுதி ஆயின்
. . . . . . . . . . . .
வருபடை தாங்கிக் கிளர்தார் அகலம்
5 அருங்கடன் இறுமார் வயவர் எறிய
உடம்பும் தோன்றா உயிர்கெட் டன்றே;
மலையுநர் மடங்கி மாறுஎதிர் கழியத்
. . . . . . . . . . . . . . . .
அலகை போகிச் சிதைந்து வேறாகிய
பலகை அல்லது களத்து ஒழியாதே;
10 சேண்விளங்கு நல்லிசை நிறீஇ
நாநவில் புலவர் வாய் உளானே.
அருஞ்சொற்பொருள்:
1. எஃகு = வேல், வாள்; உளம் = உள்ளம் = நெஞ்சு, மார்பு; இரு = பெரிய; மருங்கு = பக்கம். 2. கடன் = கடமை; இறுத்தல் = முடித்தல்; பெருஞ்செய்யாளன் = செய்தற்கரிய செயல் செய்தவன். 3. ஆய்தல் = நுணுகி அறிதல் (ஆராய்தல்). 4. கிளர் = மேலெழும்பு; தார் = மாலை; அகலம் = மார்பு. 5. வயவர் = படைவீரர்; எறிதல் = வெட்டல், ஊறுபடுத்தல், வெல்லுதல். 7. மலைதல் = போர் செய்தல்; மடங்குதல் = திரும்புதல்; மாறு = பகை. 8. அலகை = அளவு. 9. பலகை = கேடயம். 10. சேண் = தொலை தூரம், நெடுங்காலம்; இசை = புகழ்; நிறீஇ = நிறுவி. 11. நவிலல் = சொல்லுதல், கற்றல்.
கொண்டு கூட்டு: பெருஞ்செய்யாளனை வினவுதி, ஆயின் அவன் உடம்பும் உயிரும் கெட்டன; பலகை அல்லது ஒழியாது; அவன் புலவர் வாயுளான் எனக் கூட்டுக.
உரை: மார்பை வேல் ஊடுருவிச் செல்ல, இப்பெரிய உலகில் செய்தற்கரிய கடமைகளைச் செய்த வீரன் எவ்விடத்து உள்ளான் என்று கேட்கின்றீர். ஆராயுமிடத்து,….. தம் அரிய கடமைகளை நிறைவேற்றும் வகையில் பகைவர்கள் போரிட்டதால், தன்னைக் குறிபார்த்து வரும் பகைவர்களின் படையை எதிர்த்து நின்று தடுத்த, மாலை அணிந்த மார்புடன் கூடிய அவனுடல் அடையாளம் தெரியாமல் அழிந்தது; உயிரும் நீங்கியது. போரிடும் பகைவர் புறமுதுகு காட்டி ஓடினார்கள். உருத்தெரியாமல் அளவின்றிச் சிதைந்து பலவேறு துண்டுகளாகிய அவனுடைய கேடயம் போல் போர்க்களத்தில் அழியாமல், அவன் நெடுங்காலம் நிலைபெறும் நல்ல புகழை நிறுவி, நல்லுரைகளைக் கூறும் நாக்குடைய புலவர்களின் வாயில் உள்ளான்.
சிறப்புக் குறிப்பு: எஃகு என்பது ஆகுபெயராகி, வேலையும் வாளையும் குறிக்கிறது.
No comments:
Post a Comment