Tuesday, October 4, 2011

272. கிழமையும் நினதே!

272. கிழமையும் நினதே!

பாடியவர்: மோசி சாத்தனார் (272). மோசி என்பது பாண்டிய நாட்டிலிருந்த ஓரூர். இப்புலவர் அவ்வூரைச் சார்ந்தவராக இருந்ததால் மோசி சாத்தனார் என்று அழைக்கப்பட்டார். சங்க இலக்கியங்களில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.

பாடலின் பின்னணி: பகைவர்களை எதிர்த்து, நொச்சிப் பூவைச் சூடிப் போரிட்ட வீரன் ஒருவன் அப்போரில் இறந்தான். அவன் அணிந்திருந்த நொச்சி மாலை அவனுடன் கிடந்தது. அதைக்கண்டு வருந்திய புலவர் சாத்தனார், நொச்சியின் தனிச் சிறப்பை நினைத்து இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: நொச்சி. நொச்சி மலர்களை அணிந்து மதிலைக் காத்து நிற்றல்.

துறை: செருவிடை வீழ்தல். அகழியையும் காவற் காட்டையும் காத்து, அதனால் சாவினைப் பெற்ற வீரனின் வெற்றியைக் கூறுதல்.

மணிதுணர்ந் தன்ன மாக்குரல் நொச்சி,
போதுவிரி பன்மர னுள்ளும் சிறந்த
காதல் நன்மரம் நீமற் றிசினே;
கடியுடை வியன்நகர்க் காண்வரப் பொலிந்த
5 தொடியுடை மகளிர் அல்குலும் கிடத்தி;
காப்புடைப் புரிசை புக்குமாறு அழித்தலின்
ஊர்ப்புறம் கொடாஅ நெடுந்தகை
பீடுகெழு சென்னிக் கிழமையும் நினதே.

அருஞ்சொற்பொருள்

1. துணர் = கொத்து; மா = கருமை; குரல் = கொத்து. 2. போது = மலரும் பருவத்துள்ள அரும்பு. 3. காதல் = அன்பு. 4. கடி = காவல்; வியன்நகர் = பெரிய நகரம்; காண் = அழகு. 5. தொடி = கைவளை,தோள்வலை; அல்குல் = இடை. 6. புரிசை = மதில்; மாறு = பகை. 8. பீடு = பெருமை; கெழு = பொருந்திய; சென்னி = தலை; கிழமை = உரிமை.

கொண்டு கூட்டு: மாக்குரல் நொச்சி, போதுவிரி பன்மரனுள்ளும் சிறந்த காதல் மரம் நீ, அல்குலும் கிடத்தி; நெடுந்தகை சென்னிக்கிழமையும் நினதே எனக் கூட்டுக.

உரை: மணிகள் கொத்துக் கொத்தாய் அமைந்தாற் போன்ற கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியே! பூக்கள் மலரும் பலவிதமான மரங்களுள் நீதான் மிகுந்த அன்பிற்குரிய நல்ல மரம். காவலையுடைய பெரிய நகரில் அழகுடன் விளங்கிய வளையல் அணிந்த இளமகளிர் இடுப்பில் தழையுடையாக இருப்பாய்; காவலுடைய மதிலில் நின்று பகைவர்களை அழிப்பதால், நகரைக் கைவிடாது காக்கும் வீரர்களின் பெருமைக்குரிய தலையில் மாலையாக அணியப்படும் உரிமையும் உன்னுடையதாகும்.

சிறப்புக் குறிப்பு: வீரர்களால் காக்கப்படுவது மட்டுமல்லாமல், வேறுபல பொறிகளும் காவலுக்காக மதில்களில் வைக்கப்பட்டிருப்பதைக் குறிப்பதற்காகப் புலவர் “காப்புடைப் புரிசை” என்று கூறுகிறார்.

No comments: