292. சினவல் ஓம்புமின்!
பாடியவர்: விரிச்சியூர் நன்னாகனார். விரிச்சியூர் என்பது பாண்டிய நாட்டில் இருந்த ஓரூர். அரசனுக்காக விரிச்சி கூறிய பெண் ஒருத்திக்கு அரசன் இவ்வூரை நன்கொடையாக வழங்கியிருக்கக்கூடும் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். நன்னானாகனார் என்று அழைக்கப்பட்ட மற்றொரு புலவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக, இவர் விரிச்சியூர் நன்னாகனார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: ஒருகால், உண்டாட்டு ஒன்று நடைபெற்றது. அவ்விடத்து, வீரன் ஒருவன் முறை தவறி, அரசனுக்குக் கொடுத்த கள்ளைத் தனக்குக் கொடுக்கவேண்டுமென்று கூறி வாளைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான். அவன் செயலால், அங்கிருந்தவர்கள் சினமுற்றனர். அதைக் கண்ட புலவர் விரிச்சியூர் நன்னாகனார், “அவ்வீரன் கள் குடிப்பதில் மட்டும் முந்திக் கொள்பவன் அல்லன்; அவன் போரிலும் அப்படித்தான். ஆகவே, அவன் மீது சினம் கொள்ள வேண்டா.” என்று அங்கிருந்தவர்களுக்கு அறிவுரை கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.
திணை: வஞ்சி. வஞ்சிப் பூவைத் தலையில் சூடிப் பகைவரின் நாட்டைக் கைக்கொள்ளக் கருதிச் செல்லுதல்.
துறை: பெருஞ்சோற்று நிலை. போருக்குச் செல்லும் அரசன் அவனுடன் போருக்குச் செல்லும் வீரர்களுக்குப் பெரிய விருந்தளித்தல்.
வேந்தற்கு ஏந்திய தீந்தண் நறவம்
யாம்தனக்கு உறுமுறை வளாவ விலக்கி
வாய்வாள் பற்றி நின்றனென் என்று
சினவல் ஓம்புமின்; சிறுபுல் லாளர்!
5 ஈண்டே போல வேண்டுவன் ஆயின்
”என்முறை வருக” என்னான்; கம்மென
எழுதரு பெரும்படை விலக்கி
ஆண்டு நிற்கும் ஆண்தகை யன்னே.
அருஞ்சொற்பொருள்:
1. ஏந்திய = எடுத்த; தீ = இனிமை; தண் = குளிர்ந்த; நறவம் = மது. 2. முறை = வரிசை, ஒழுங்கு; வளாவல் = கலத்தல். 3. வாய்வாள் = தப்பாமல் வெட்டும் வாள். 4. ஓம்புதல் = தவிர்தல்; புல்லாளர் = குறைந்த ஆண்மையுடைவர்கள் ( வீரம் குறைந்தவர்கள்). 5. ஈண்டு = இவ்விடம். 6. கம் – விரைவுக் குறிப்பு.
கொண்டு கூட்டு: சிறுபுல்லாளர், சினவல் ஓம்புமின்; வேண்டுவன் ஆயின், ”என்முறை வருக” என்னான், கம்மென விலக்கி நிற்கும் ஆண்தகை யன்னே எனக் கூட்டுக.
உரை: ”அரசனுக்குக் கொடுப்பதற்காக முகந்து எடுத்த இனிய குளிர்ந்த கள்ளை நாங்கள் முறைப்படிக் கலந்து கொடுத்தோம். இவன், அதை மறுத்துத், தன் குறிதவறாத வாளைக் கையில் எடுத்துக்கொண்டு நின்றான்” என்று அவன் மீது சினம் கொள்ளாதீர்கள். வீரத்தில் அவனைவிடக் குறைந்தவர்களே! இங்கே எவ்வாறு வீரத்தோடு அவன் வாளைப் பற்றினானோ அதுபோல் போர்க்களத்திலும் செய்வான்; ”எனக்குரிய முறை வரட்டும்.” என்று காத்திருக்காமல், விரைந்து முன்னே எழுகின்ற பெரிய படையைத் தடுத்து விலக்கி அங்கே நிற்கும் வீரம் (ஆண்மை)உடையவன் அவன் என்பதை அறிவீர்களாக.
சிறப்புக் குறிப்பு: “அரசனுக்கு முன்னதாக, எனக்குக் கள்ளைத் தருக.” என்று கூறியவன் வலிமையிலும் வீரத்திலும் சிறந்தவன். அவன் போர்க்களத்தில் விரைந்து சென்று எதிர்த்துவரும் பெரும்படையை விலக்கிப் போரிடும் பேராண்மையுடையவன். அவன் சிறப்பை அறியாமல் அவன் மீது சினம் கொண்டவர்களின் அறியாமையைக் கருதி, அவர்களைச் ”சிறுபுல்லாளர்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.
1 comment:
மிக்க நன்று.
Post a Comment