Tuesday, October 4, 2011

274. நீலக் கச்சை!

274. நீலக் கச்சை!

பாடியவர்: உலோச்சனார். இவரைப்பற்றிய குறிப்புக்களை பாடல் 258-இல் காண்க.
பாடலின் பின்னணி: இரு பெருவேந்தர்களுக்கிடையே போர் மூண்டது. அப்போரில், வீரன் ஒருவனை ஒரு யானை தாக்க வந்தது. அவ்வீரன், தன் வேலை யானையின் நெற்றியை நோக்கி எறிந்தான். அந்த யானை பின்நோக்கிச் சென்றது. பகைவரின் வீரர்கள் பலரும் அந்த வீரனை நோக்கி வந்தனர். அவர்கள் எறிந்த வேலைத் தடுத்து, அவர்களின் தோளைப்பற்றி நிலத்தில் மோதி, அவர்களை அந்த வீரன் கொன்றான். அவனுடைய வீரச் செயல்களைக் கண்ட புலவர் உலோச்சனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: எருமை மறம். படைவீரர் முதுகிட்ட நிலையிலும், தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் எதிரிட்டு நிற்றல்.

நீலக் கச்சைப் பூவார் ஆடைப்
பீலிக் கண்ணிப் பெருந்தகை மறவன்
மேல்வரும் களிற்றொடு வேல்துரந்து இனியே
தன்னும் துரக்குவன் போலும்; ஒன்னலர்
5 எஃகுடை வலத்தர் மாவொடு பரத்தரக்
கையின் வாங்கித் தழீஇ
மொய்ம்பின் ஊக்கி மெய்க்கொண் டனனே.


அருஞ்சொற்பொருள்

1. கச்சை = இறுகக் கட்டிய இடுப்புடை; ஆர் = நிறைவு; பீலி = மயில் தோகை; கண்ணி = தலையில் அணியும் மாலை. 3. துரந்து = செலுத்தி; இனி = இப்பொழுது. 4. ஒன்னலர் = பகைவர். 5. பரத்தர = பரவிவர. 7. மொய்ம்பு = வலிமை; ஊக்கல் = எழுப்பல்.

உரை: நீல நிறமுடைய கச்சையையும், பூவேலைப்பாடுகள் நிறைந்த ஆடையையும், மயில் தோகையால் தொடுக்கப்பட்ட மாலையையும் உடைய பெரியோனாகிய வீரன், தன்னைக் கொல்ல வந்த யானையை நெற்றியில் வேலால் தாக்கினான். அவன், இப்பொழுது, தன் உயிரையும் கொடுத்துப் போரிடுவான் போல் தோன்றுகிறது. பகைவர் தங்கள் வலக்கரங்களில் வேலை ஏந்தி யானைகளுடன் பரவி வந்து அவன் மீது எறிந்த வேலைப் பிடுங்கி, பகைவரின் கூட்டத்தை அழித்து, அவர்களைத் தோளோடு தழுவித் தன்னுடைய உடல் வலிமையால் அவர்களை உயரத் தூக்கி, நிலத்தில் மோதி, உயிர் நீங்கிய அவர்களின் உடலைத் தூக்கிக்கொண்டு நிற்கின்றான்.

No comments: