271. மைந்தன் மலைந்த மாறே!
பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார். இவர் பெயர் காமக்கண்ணி, காமக்கணி என்றும் காணப்படுகிறது. ஆனால் காமக்காணி என்பதுதான் சரி என்றும் அது ஏடு எழுதியவர்களால் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும் ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் தம் நூலில் கூறுகிறார். இவர் ஒரு பெண்பாற் புலவர் என்று கருதப்படுகிறது. இவர் வெறியாடலைப்பற்றிப் பாடிய பாடல்கள் அகநானூற்றிலும் (22, 98), நற்றிணையிலும் (268) காணப்படுகின்றன.
வெறியாட்டு: தலைவி, களவொழுக்கத்தில் ஈடுபட்டிருக்கும்பொழுது, திருமணம் நடப்பதற்குக் கால தாமதம் ஆனால், உண்ணாமல், உறங்காமல் உடல் மெலிந்து வாடுவது வழக்கம். அவள் அவ்வாறு வாடும்பொழுது, அவள் தாய், தன் பெண்ணின் மீது தெய்வம் (முருகன்) ஏறியதால்தான் அவள் அவ்வாறு வாடுகிறாள் என்று எண்ணி முருகன் கோயில் பூசாரியை அழைத்து முருகனுக்குப் பூசை நடத்துவாள். பூசாரி, ஒரு வேலை நட்டு, அதை முருகனாகப் பாவித்து, குருதியைக் கலந்த தினையை அந்த வேல்மீது எறிந்து பூசை நடத்தி முருகனை அழைப்பான்; தலைவியின் வாடிய நிலைக்கு முருகன்தான் காரணம் என்று கூறி, முருகனைத் தலைவியின் உடலிலிருந்து விரட்டுவதற்காகப் பூசாரி ஆவேசமாகக் கூத்தாடுவான். இந்த நிகழ்ச்சிக்கு வெறியாட்டு என்று பெயர்.
பாடலின் பின்னணி: ஒருகால், இரு அரசர்களிடையே போர் மூண்டது. ஒருவன் மற்றொருவனுடைய அரண்மனையை முற்றுகையிட்டான். முற்றுகையிடப்பட்ட அரண்மனையின் மதிலிடத்தே நின்று, நொச்சிப் பூவைச் சூடி வீரர்கள் அம்மதிலைக் காத்தனர். அப்பொழுது, ஒரு வீரனைப் பகைவர் வாளால் வெட்டி வீழ்த்தினர். வெட்டப்பட்டு வீழ்ந்த பொழுது, அவன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு அவனுடைய குருதியில் கலந்து உருமாறிக் கீழே கிடந்தது. அதை ஊன்துண்டு என்று கருதிப், பருந்து ஒன்று எடுத்துக்கொண்டு உயரப் பறந்து சென்றதைப் புலவர் வெறிபாடிய காமக்காணியார் கண்டார். அந்தக் காட்சியைக் கண்டதும், முன்பு ஒருமுறை இளம்பெண்கள் நொச்சித் தழையாலான உடையைத் தங்கள் இடையில் அணிந்திருந்ததைப் பார்த்தது அவருக்கு நினைவுக்கு வந்தது. இப்பாடலில், அவ்விரண்டு நிகழ்ச்சிகளையும் அவர் குறிப்பிடுகிறார்.
திணை: நொச்சி. நொச்சி மலர்களை அணிந்து மதிலைக் காத்து நிற்றல்.
துறை: செருவிடை வீழ்தல். அகழியையும் காவற் காட்டையும் காத்து, அதனால் சாவினைப் பெற்ற வீரனின் வெற்றியைக் கூறுதல்.
நீரறவு அறியா நிலமுதற் கலந்த
கருங்குரல் நொச்சிக் கண்ணார் குரூஉத்தழை
மெல்இழை மகளிர் ஐதுஅகல் அல்குல்
தொடலை ஆகவும் கண்டனம்; இனியே
5 வெருவரு குருதியொடு மயங்கி உருவுகரந்து
ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப்
பருந்துகொண்டு உகப்பயாம் கண்டனம்,
மறம்புகல் மைந்தன் மலைந்த மாறே.
அருஞ்சொற்பொருள்
1. அறவு = அறுதல், தொலைதல். 2. குரல் = கொத்து; நொச்சி = ஒரு செடி; ஆர் = நிறைவு; குரூஉ = நிறம். 3. இழை = அணிகலன்கள்; ஐது = அழகிய; அல்குல் = இடை. 4. தொடலை = மாலை; இனி = இப்பொழுது. 5. வெரு = அச்சம்; குருதி = இரத்தம்; மயங்கி = கலந்து; கரத்தல் = மறைத்தல். 6. ஒறுவாய்ப்பட்டு = துண்டிக்கப்பட்டு; தெரியல் = மாலை; செத்து = கருதி. 7. உகத்தல் = உயரப் பறத்தல். 8. புகல் = விருப்பம்; மைந்தன் = வீரன், ஆண்மகன்; மலைதல் = அணிதல்.
கொண்டு கூட்டு: நொச்சிக் குரூஉத் தழை, முன்பு, தொடலையாகவும் கண்டனம்; இனி, மைந்தன் மலைந்தமாறு, ஒறுவாய்ப் பட்ட தெரியல் ஊன்செத்துப் பருந்து கொண்டு உகப்பவும் யாம் கண்டனம் எனக் கூட்டுக.
உரை: முன்பு, நீர் குறையாத நிலத்தோடு ஒன்றி நிற்கும் கரிய பூங்கொத்துக்களையுடைய, கண்ணுக்கு இனிய நிறமுடைய நொச்சியின் தழையை, மெல்லிய அணிகலன்கள் அணிந்த அழகிய, பெண்கள் தம் அகன்ற இடையில் உடையாக அணிவதைக் கண்டோம். இப்பொழுது, நொச்சி மாலையை அணிந்து, மதிலைக் காக்கும், வீரத்தை விரும்பும் ஆண்மகன் ஒருவன் வெட்டப்பட்டுக் கிடக்கிறான். அவன் அணிந்திருந்த நொச்சி மாலை துண்டிக்கப்பட்டு, அச்சம்தரும் குருதியில் கலந்து, உருமாறிக் கிடக்கிறது. அதை ஊன்துண்டு என்று கருதிப் பருந்து ஒன்று கவர்ந்துகொண்டு உயரப் பறந்து சென்றதை இப்பொழுது யாம் கண்டோம்.
No comments:
Post a Comment