Tuesday, October 4, 2011

277. ஈன்ற ஞான்றினும் பெரிதே !

277. ஈன்ற ஞான்றினும் பெரிதே !

பாடியவர்: பூங்கண் உத்திரையார் (277). இவரது இயற்பெயர் உத்திரை. உத்திரம் என்னும் விண்மீன் நிலவிய நாளில் பிறந்ததால் இவர் உத்திரையார் என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் பூங்கண் என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் பூங்கண் உத்திரையார் என்று அழைக்கப்பட்டார். இவர், புறநானூற்றில் ஒரு செய்யுளும் குறுந்தொகையில் இரண்டு செய்யுட்களும் (48, 171) இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: ஒரு வீரன் அவனுடைய அரசனின் அழைப்பிணற்கு இணங்கிப் போருக்குச் சென்றான். அவன் போரில் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான். அவன் இறந்த செய்தி அவனுடைய முதிய வயதினளாகிய தாய்க்குத் தெரியவந்தது. அவள் தன் மகன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன், அவனைப் பெற்றபொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிக மகிழ்ச்சி அடைந்தாள். அவளுடைய செயல்களைக் கண்டு வியந்த புலவர் பூங்கண் உத்திரையார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: உவகைக் கலுழ்ச்சி. வாளால் புண்பட்ட உடம்பையுடைய கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடித்தல்; மகன் புண்ணுற்று இறந்தது கண்டு தாய் மகிழ்தல்.


மீன்உண் கொக்கின் தூவி அன்ன
வால்நரைக் கூந்தல் முதியோள் சிறுவன்
களிறுஎறிந்து பட்டனன் என்னும் உவகை
ஈன்ற ஞான்றினும் பெரிதே; கண்ணீர்,
5 நோன்கழை துயல்வரும் வெதிரத்து
வான்பெயத் தூங்கிய சிதரினும் பலவே.

அருஞ்சொற்பொருள்:

1. தூவி = இறகு. 2. வால் = வெண்மை. 3. உவகை = மகிழ்ச்சி. 4. ஞான்று = பொழுது, காலம். 5. நோன் = வலிய; கழை = மூங்கில்; துயல்வரும் = அசையும்; வெதிரம் = மூங்கிற் புதர். 6. வான் = மழை; தூங்கிய = தங்கிய; சிதர் = மழைத்துளி.

கொண்டு கூட்டு: உவகை ஈன்ற ஞான்றினும் பெரிது; கண்ணீர் சிதரினும் பலவெனக் கூட்டுக.

உரை: மீன் உண்ணும் கொக்கின் இறகுபோன்ற வெண்மையான, நரைத்த கூந்தலையுடைய முதிய தாய், தன் சிறுவன் யானையை எதிர்த்துப் போரிட்டு இறந்தான் என்ற செய்தியைக் கேட்டவுடன் அடைந்த மகிழ்ச்சி, அவள் தன் மகனைப்பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியைவிட அதிகம். மகிழ்ச்சியால் அவள் வடித்த கண்ணீர்த் துளிகள், மூங்கிற் புதரில் உள்ள மூங்கிலில் தங்கியிருந்து கொட்டும் மழைத்துளிகளைவிட அதிகமானவை.

சிறப்புக் குறிப்பு: “சான்றோன்” என்ற சொல்லுக்கு “வீரன்” என்று ஒரு பொருளும் உண்டு. ஆகவே,

ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்

சான்றோன் எனக்கேட்ட தாய். (குறள் – 69)

என்ற திருக்குறள், இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் கருத்துக்கும் ஒத்திருப்பதைக் காண்க.

No comments: