Monday, October 24, 2011

289. ஆயும் உழவன்!

289. ஆயும் உழவன்!

பாடியவர்: கழாத்தலையார். இவரைப்பற்றிய குறிப்புக்களைப் பாடல் 62 - இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், ஒருவேந்தன் வெட்சிப்போர் நடத்துவதற்காகப் ( மற்றொரு நாட்டிலுள்ள பசுக்களைக் கவர்வதற்காகப்) போர்ப்பறை ஒலித்தது. அந்நாட்டிலுள்ள வீரர்கள் பலரும் வந்து கூடினர். வேந்தன் வீரர்களுடன் கூடி விருந்துண்டான். அப்போது, வீரர்களுக்குக் கள் வழங்கப்பட்டது. மறக்குடியில் தோன்றி வீரச் செயல்களைச் செய்த வீரர்களை அவரவர் தகுதிக்கேற்ப அரசன் புகழ்ந்தான். அங்கு, வீரர்கள் மட்டுமல்லாமல் சான்றோர் பலரும் இருந்தனர். வேந்தன் தனக்குப் பொற்கலத்தில் வழங்கப்பட்ட கள்ளை சிறப்புடைய வீரன் ஒருவனுக்கு அளித்து அவனைச் சிறப்பித்தான். இந்தக் காட்சியைக் கண்டு பாணன் ஒருவன் வியந்தான். கழாத்தலையார், அப்பாணனை நோக்கி, “பாணனே, வேந்தன் செய்யும் சிறப்பைக் கண்டு வியத்தலை விட்டுவிட்டு, போர்க்குரிய பூவைப் பெற்றுக்கொள்ளுமாறு புலையன் தண்ணுமைப் பறையை அடிக்கின்றான். அதைக் கேட்பாயாக.” என்று கூறுவதாக இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: தெரியவில்லை

துறை: தெரியவில்லை.

ஈரச் செவ்வி உதவின ஆயினும்
பல்எருத் துள்ளும் நல்லெருது நோக்கி
வீறுவீறு ஆயும் உழவன் போலப்
பீடுபெறு தொல்குடிப் பாடுபல தாங்கிய
5 மூதி லாளர் உள்ளும் காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும்பொன் மண்டை
இவற்குஈக என்னும் அதுவும்அன் றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறைப்
பூக்கோள் இன்றென்று அறையும்
10 மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே.


அருஞ்சொற்பொருள்:

1. செவ்வி = பருவம் (தக்க சமயம்). 3. வீறு = தனிமை, பகுதி; வீறுவீறு = வேறுவேறு. 4. பீடு = பெருமை; பாடு = கடமை. 5. காதலின் = அன்பினால். 6. முகத்தல் = மொள்ளல்; மண்டை = கள்குடிக்கும் பாத்திரம். 7. அன்றுதல் = மறுத்தல்; சின் - முன்னிலை அசை. 10. மடிவாய் = தோல் மடித்துக் கட்டப்பட்ட வாய்; இழிசினன் = பறையடிப்பவன்.

கொண்டு கூட்டு: நல்லெருது ஆயும் உழவன் போல வேந்தன் இவனை ஆய்ந்து தேர்ந்து தனக்கு முகந்தேந்திய மண்டையை இவற்கீக என்னுமது அன்றிசின்; பாண, தண்ணுமைக் குரலைக் கேட்டி எனக் கூட்டுக.

உரை: ஈரமுள்ள பருவம் மாறுவதற்குமுன், முன்பு உழுவதற்கு உதவிய ஏறுகளில் சிறந்த ஏறுகளை உழவர்கள் வேறுவேறு விதமாய் ஆராய்ந்து தேர்ந்தெடுப்பது வழக்கம். அதுபோல், பெருமைபெற்ற பழமையான குடியில் பிறந்த, வழிவழியாகத் தங்கள் கடமைகளை நன்கு ஆற்றிய சிறந்த வீரர்களுள் ஒருவீரனுக்குத், தனக்காக முகந்து எடுத்துப் பொற்கலத்தில் தந்த கள்ளை “இவனுக்கு ஈக” என்று அரசன் அன்போடு கொடுத்துச் சிறப்பிப்பதைக் கண்டு வியப்பதை விடு; பாணனே, இன்று போர்க்குரிய பூக்கள் வழங்கப்படுகின்றன என்று இழிசினன் எழுப்பும் தண்ணுமைப் பறையின் ஓசையைக் கேட்பாயாக.

No comments: