Wednesday, January 18, 2012

306. ஒண்ணுதல் அரிவை!

306. ஒண்ணுதல் அரிவை!

பாடியவர்: அள்ளூர் நன்முல்லையார். இவர் ஒரு பெண்பாற் புலவர். இவர் பாண்டிய நாட்டில் இருந்த அள்ளூர் என்னும் ஊரைச் சார்ந்தவர் என்று கருதப்படுகிறது. இவர் புறநானூற்றில் இயற்றிய ஒருபாடலும், குறுந்தொகையில் பத்துப் பாடல்களும் அகநானூற்றில் ஒருபாடலும் இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: மறக்குலப் பெண் ஒருத்தி நாள்தோறும் தன் முன்னோர்களின் நடுகல்லுக்குச் சென்று, தம் கணவன் போரில் வெறி பெறவேண்டும் என்றும், தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர்கள் வரவேண்டும் என்றும், தன் அரசன் போர்புரிவதற்கு பகைவர்கள் இருக்க வேண்டும் என்றும் வழிபட்டாள். அவள் வழிபடுவதைக் கண்ட புலவர் நன்முல்லையார், தான் கண்ட காட்சியை இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

இப்பாடலில் சில சொற்கள் கிடைக்கவில்லை.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

களிறுபொரக் கலங்கு கழல்முள் வேலி
அரிதுஉண் கூவல் அங்குடிச் சீறூர்
ஒலிமென் கூந்தல் ஒண்ணுதல் அரிவை
நடுகல் கைதொழுது பரவும் ஒடியாது;
விருந்து எதிர் பெறுகதில் யானே; என்ஐயும் 5


ஒ .. .. .. .. .. .. வேந்தனொடு
நாடுதரு விழுப்பகை எய்துக எனவே.

அருஞ்சொற்பொருள்: 1. கூவல் = பள்ளம், கிணறு (சிறிதளவே நீருள்ள நீர்த்துறை). 2. அம்குடி = அழகிய குடி. 3. ஒலித்தல் = தழைத்தல். 4. பரவல் = வணங்கல், வாழ்த்துதல்; ஒடியாது = இடைவிடாமல், நாள்தோறும். 7. விழுப்பகை = சிறந்த பகை.

உரை: யானைகள் படிந்ததால் கலங்கிச் சேறாகி, உண்ணும் நீர் சிறிதளவே உள்ள நீர்த்துறையையும், முள்ளையுடைய கழற்கொடிகளாலாகிய வேலி சூழ்ந்த அழகிய சிறுகுடிகளையுமுடைய சிற்றூரில் வாழும், தழைத்த மெல்லிய கூந்தலையும் ஒளி பொருந்திய நெற்றியையும் உடைய பெண் ஒருத்தி, நாளும் தவறாமல் தன் முன்னோர்களின் நடுகல்லைத் தொழுது, ”நாள்தோறும் விருந்தினர் என் இல்லத்திற்கு வர வேண்டும்; என் கணவனும் ….. அவன் தலைவனாகிய வேந்தனும் பிற நாடுகளை வென்று பொருள் பெற உதவும் பெரும்பகையை அடைவானாகுக” என்று அவள் நடுகல்லை வழிபட்டாள்.

சிறப்புக் குறிப்பு: தன் இல்லத்திற்கு நாள் தோறும் விருந்தினர் வரவேண்டும் என்று இப்பாடலில் ஒருபெண் வேண்டுவது, விருந்தோம்பல் மிகவும் சிறந்த நற்பண்பாகவும், இல்லற வாழ்க்கையைப் பின்பற்றுபவர்களுக்கு விருந்தோம்பல் இன்றியமையாத ஒழுக்கமாகவும் சங்க காலத்தில் கருதப்பட்டது என்பதைக் காட்டுகிறது.

305. சொல்லோ சிலவே!

305. சொல்லோ சிலவே!

பாடியவர்: மதுரை வேளாசான். மதுரையில் பார்ப்பனர்களிடையே வேள்வித் தொழிலுக்கு ஆசானாக இருந்ததால் இவர் வேளாசான் என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார். இவர் இயற்பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணி: இளம் பார்ப்பனன் ஒருவன் ஒருவேந்தனிடம் சென்று ஒரு சில சொற்களே சொல்லி, நடக்கவிருக்கும் போரை நிறுத்தியதை இப்பாடலில் புலவர் மதுரை வேளாசான் கூறுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை: பார்ப்பன வாகை. கேட்கத் தக்கவை கேட்டுத் தலைமை பெற்ற பார்ப்பானின் வெற்றியைப் புகழ்ந்து பாடுதல்.


வயலைக் கொடியின் வாடிய மருங்குல்
உயவல் ஊர்திப் பயலைப் பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது புக்குச்
சொல்லிய சொல்லோ சிலவே; அதற்கே
5 ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினை யானையும் மணிகளைந் தனவே.

அருஞ்சொற்பொருள்: 1. வயலை = பசலை; மருங்குல் = இடை. 2. உயவல் = வருத்தம், தளர்வு; பயலை = இளமை. 3. எல்லி = இரவு. 5. சீப்பு = மதில் கதவுக்கு வலியாக உள்வாயிற்படியில் நிலத்தே வீழ விடும் மரம். 6. மாண் = மாட்சிமையுடைய.

உரை: பசலைக் கொடி போன்ற இடையையும் தளர்ந்த நடையையும் உடை ய இளம் பார்ப்பனன் ஒருவன் தடையின்றி, இரவில் வந்து அரசனிடம் சொல்லிய சொற்கள் சிலவே. அதன் விளைவாக, மதில்மேல் சாத்திய ஏணியும், கதவுக்கு வலிமை சேர்ப்பதற்காக வைத்திருந்த சீப்பும், சிறப்பாகப் போர்புரியும் யானைகள் அணிந்திருந்த மணிகளும் களையைப்பட்டன. அதாவது, பார்ப்பனன் கூறிய சொற்களைக் கேட்டுப் போர் கைவிடப்பட்டது.

சிறப்புக் குறிப்பு: “சொல்லிய சொல்லோ சிலவே” என்பது போருக்கான ஏற்பாடுகள் அதிகமாகச் செய்யப்பட்டிருந்தன என்பதையும், அவன் சொல்லிய சொற்கள் சிலவாக இருந்தாலும் அதனால் பெற்ற பயன் அதிகம் என்ற பொருளிலும் கூறப்பட்டுள்ளது. மதில் மீது ஏறுவதற்கு ஏணியும், மதிற் கதவுகளை வலிமைப் படுத்துவதற்கு சீப்பும் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிகிறது. மணியணிந்த யானை என்பது அரசன் ஏறிச் செல்லும் யானையைக் குறிக்கிறது.

304. எம்முன் தப்பியோன்!

304. எம்முன் தப்பியோன்!

பாடியவர்: அரிசில் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 146-இல் காண்க.
பாடலின் பின்னணி: வீரன் ஒருவனின் தமையனைப் பகையரசனின் வீரன் ஒருவன் கொன்றான். கொல்லப்பட்டவனின் தம்பி, கொன்றவனோடும் அவன் தம்பியோடும் போரிடுவதற்காக வருகிறான் என்ற செய்தியைக் கேட்டுப் பகையரசனின் பாசறையில் உள்ளவர்கள் நடுங்குகிறார்கள். இக்காட்சியை, இப்பாடலில் அரிசில் கிழார் குறிப்பிடுகிறார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: குதிரை மறம். குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.

கொடுங்குழை மகளிர் கோதை சூட்டி
நடுங்குபனிக் களைஇயர் நாரரி பருகி
வளிதொழில் ஒழிக்கும் வண்பரிப் புரவி
பண்ணற்கு விரைதி நீயே; நெருநை
எம்முன் தப்பியோன் தம்பியொடு ஒராங்கு 5


நாளைச் செய்குவென் அமரெனக் கூறிப்
புன்வயிறு அருத்தலும் செல்லான் பன்மான்
கடவும் என்ப பெரிதே; அதுகேட்டு,
வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்
இலங்கிரும் பாசறை நடுங்கின்று; 10


இரண்டுஆ காதுஅவன் கூறியது எனவே.

அருஞ்சொற்பொருள்: 1. கொடு = வளைவு; குழை = காதணி; கொடுங்குழை = வளைந்த காதணி; கோதை = மாலை. பனி = குளிர்; களைதல் = போக்குதல்; நாரரி = நார்+அரி = நாரால் வடிகட்டப்பட்ட. 3. வளி = காற்று; ஒழிக்கும் = குறைக்கும்; வண் = மிகுதி; பரிதல் = ஓடுதல்; புரவி = குதிரை. 4, நெருநை = நேற்று. 5. தப்பியோன் = கொன்றவன். 7. அருத்தல் = உண்பித்தல்; மான் = குதிரை. 8. கடவும் = செலுத்தும். 9. வலம் = வெற்றி. 10. இலங்குதல் = விளங்குதல்; இரு = பெரிய; நடுங்கின்று = நடுக்கம் கொண்டது.

உரை: வளைந்த காதணிகளை அணிந்த மகளிர் மலை சூட்டி உன்னை மகிழ்விக்க, நடுங்கவைக்கும் குளிரைப் போக்குவதற்காக நாரால் வடிகட்டப்பட்ட மதுவை உண்டு,

காற்றைவிட விரைவாகச் செல்லும் குதிரைகளைப் போருக்குத் தகுந்தவையாகச் (தயார்) செய்வதற்கு நீ விரைந்து சென்றுகொண்டிருக்கிறாய். ”நேற்று, என் தமையனைக் கொன்றவனோடும் அவன் தம்பியோடும் நாளை ஒருசேரப் போர்புரிவேன்” என்று கூறி நீ சிறிதளவும் உணவு உண்ணாமல் பல குதிரைகளைப் பெரிதும் ஆராய்கின்றாய் என்று கேள்விப்பட்டு, வெற்றியை உண்டாக்கும் முரசையும் வெல்லும் போரையும் உடைய பகைவேந்தனின் விளங்கும் பெரிய பாசறையில் உள்ளவர்கள் உன் சொல்லும் செயலும் வேறு வேறல்ல என்பதை எண்ணி நடுங்குகின்றார்கள்.

சிறப்புக் குறிப்பு: “செய்குவன் அமர்” என்றது போரில் கொல்வேன் என்ற கருத்தில் கூறப்பட்டுள்ளது. “புன்வயிறு அருத்தல்” என்பதில் உள்ள “புன்” என்ற சொல் ”சிறிதளவு” என்ற பொருளில் வயிற்றைக் குறிக்காமல் உணவைக் குறிக்கிறது. பகை வேந்தனை “வலம்படு முரசின் வெல்போர் வேந்தன்” என்றது இகழ்ச்சிக் குறிப்பு என்று ஒளவை சு. துரைசாமிப்பிள்லை தம் நூலில் கூறுகிறார். “இரண்டு ஆகாது அவன் கூறியது” என்றது அவனுடைய சொல்லும் செயலும் இரண்டாக வேறுபட்டில்லாமல், அவன் சொன்னதைச் செய்வான் என்ற பொருளில் கூறப்பட்டுள்ளது.

303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!

303. மடப்பிடி புலம்ப எறிந்தான்!

பாடியவர்: எருமை வெளியனார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 273-இல் காண்க.
பாடலின் பின்னணி: போர்க்களத்தில் வீரன் ஒருவனின் மறச் செயல்களைக் கண்ட புலவர் எருமை வெளியனார், இப்பாடலில் தாம் கண்ட காட்சியைக் குறிப்பிடுகிறார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: குதிரை மறம். குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.


நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ
உள்ளம் அழிக்கும் கொட்பின் மான்மேல்
எள்ளுநர்ச் செகுக்கும் காளை கூர்த்த
வெந்திறல் எஃகம் நெஞ்சுவடு விளைப்ப
ஆட்டிக் காணிய வருமே; நெருநை, 5


உரைசால் சிறப்பின் வேந்தர் முன்னர்க்
கரைபொரு முந்நீர்த் திமிலின் போழ்ந்தவர்
கயந்தலை மடப்பிடி புலம்ப
இலங்கு மருப்பு யானை எறிந்த எற்கே.

அருஞ்சொற்பொருள்: 1. பிறக்கிடுதல் = பின்வாங்குதல் (பின்னிடுதல்); குளம்பு = விலங்குகளின் பாதம்; கடையூஉ = ஊன்றி. 2. கொட்பு = சுழற்சி; மான் = குதிரை. 3. எள்ளுதல் = இகழ்தல்; செகுத்தல் = அழித்தல்; கூர்த்த = கூரிய. 4. வெப்பு = கொடுமை; திறல் = வலி; எஃகம் = வேல்; வடு = புண். 5. காணிய = காண்பதற்கு; நெருநை = நேற்று. 6. உரை = புகழ்; சால் = நிறைவு (மிகுதி). 7. முந்நீர் = கடல்; திமில் = படகு (தோணி); போழ்தல் = பிளத்தல். 8. கயம் = பெருமை. 9. இலங்குதல் = விளங்குதல்; மருப்பு = கொம்பு (தந்தம்); எற்கு = எனக்கு.

கொண்டுகூட்டு: நெருநை வேந்தர் முன்னர், போழ்ந்து, எறிந்த எற்கு மான்மேல் காளை எஃகம் ஆட்டிக் காணிய வருமே எனக் கூட்டுக.

உரை: நேற்று, புகழ் மிக்க வேந்தர்கள் கண்முன்னே, கரையை மோதும் கடலைப் பிளந்துகொண்டு செல்லும் படகைப்போல் பகைவர் படையைப் பிளந்து அவர்களுடைய பெரிய தலையையுடைய இளம் பெண்யனைகள் தனிமையுற்று வருந்துமாறு, விளங்கும் கொம்புகளையுடைய களிறுகளை (ஆண்யானைகளை) நான் கொன்றேன். நிலம் பின்னோக்கிப் போவது போலக் குளம்பை ஊன்றிக் காண்போரைக் கலங்கவைக்கும் குதிரைமேல் வரும் வீரன் தன்னை இகழும் பகைவரைக் கொல்லும் காளை போன்றவன். அவன் கூரிய, கொடிய, வலிய வேலால் எதிர்த்தவர்களின் மார்பைக் குத்திப் புண்படுத்தி அதிரச் செய்பவன். அவன் என்னை நோக்கி வருகின்றான்.

சிறப்புக் குறிப்பு: குதிரை வேகமாகச் செல்லும் பொழுது நிலம் பின்னோக்கிச் செல்வதுபோல் தோன்றுவதை ”நிலம் பிறக்கிடுதல்” என்று புலவர் குறிப்பிடுகிறார்.

“உரை” என்பது புலவரால் பாடப்படும் புகழைக் குறிக்கும் சொல்.

302. வேலின் அட்ட களிறு?

302. வேலின் அட்ட களிறு?

பாடியவர்: வெறிபாடிய காமக்காணியார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல்

271-இல் காண்க.
பாடலின் பின்னணி: குதிரையில் விரைந்து சென்று பகைவர்களையும் அவர்களுடைய யானைகளையும் அழிக்கும் வீரன் ஒருவனின் மறச்செயல்களை, இப்பாடலில் வெறிபாடிய காமக்காணியார் வியந்து பாடுகிறார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

குதிரை மறம்: குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.


வெடிவேய் கொள்வது போல ஓடித்
தாவுபு உகளும் மாவே; பூவே
விளங்கிழை மகளிர் கூந்தற் கொண்ட;
நரந்தப் பல்காழ்க் கோதை சுற்றிய
ஐதுஅமை பாணி வணர்கோட்டுச் சீறியாழ்க் 5

கைவார் நரம்பின் பாணர்க்கு ஓக்கிய
நிரம்பா இயவின் கரம்பைச் சீறூர்;
நோக்கினர்ச் செகுக்கும் காளை ஊக்கி
வேலின் அட்ட களிறுபெயர்த்து எண்ணின்
விண்ணிவர் விசும்பின் மீனும் 10

தண்பெயல் உறையும் உறையாற் றாவே.

அருஞ்சொற்பொருள்: 1. வேய் = மூங்கில். 2. தாவுபு = தாவும்; மா = குதிரை; உகளுதல் = திரிதல். 3. விளங்குதல் = ஒளிர்தல். 4. நரந்தம் = மணம், நரந்தப் பூ; காழ் = முத்துவடம் (வடம்); கோதை = கூந்தல். 5. ஐது = மெல்லிது; பாணி = தாளம்; வணர் = வளைவு; கோடு = யாழின் தண்டு; சீறீயாழ் = சிறிய யாழ். 6. வார்தல் = யாழில் சுட்டு விரலால் செய்யும் தொழில்; ஓக்குதல் = தருதல். 7. நிரம்பு = மிகுதியாக; இயவு = வழி; நிரம்பா இயவு = குறுகிய வழி; கரம்பை =சாகுபடி செய்யக்கூடிய நிலம். செகுத்தல் = அழித்தல், கொல்லுதல். 9. அட்ட = கொன்ற. 10. இவர்தல் = செல்லுதல், உலாவுவுதல்; விசும்பு = ஆகாயம். 11. தண் = குளிர்ச்சி; பெயல் = மழை; உறை = மழைத்துளி; உறையாற்ற = அளவிட முடியாத.

கொண்டுகூட்டு: மா உகளும், பூ கூந்தற் கொண்ட; சீறூர் பாணர்க் கோக்கிய; காளை அட்ட களிறு எண்ணின் மீனும் உறையும் உறையாற்ற எனக் கூட்டுக.

உரை: வளைத்த மூங்கில் விடுபட்டதும் கிளர்ந்து எழுவது போலக் குதிரைகள் தாவி ஒடித் திரிந்தன. ஒளிரும் அணிகலன்களை அணிந்த விறலியரின் கூந்தலில் நரந்தம் பூவால் பலவடங்களாகத் தொடுக்கப்பட்ட மாலை சுற்றப்பட்டிருந்தது. அந்தக் கூந்தலில் பொன்னாலான பூக்கள் இடம் பெற்றன. மெல்லிய தாளத்திற்கேற்ப தம் கையால் யாழின் வளைந்த தண்டில் உள்ள நரம்புகளை மீட்டி இசையெழுப்பும் பாணர்களுக்குக் குறுகிய வழிகளையுடைய, சாகுபடி செய்யக் கூடிய நிலங்கள் உள்ள சிற்றூர்கள் வழங்கப்பட்டன. தன்னைப் பகைத்துப் பார்த்த பகைவரைக் கொல்லும் காளை போன்ற வீரன் ஒருவன் ஊக்கத்தோடு தன் வேலால் கொன்ற களிறுகளை ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்தால், மேகங்கள் பரந்து உலவும் ஆகாயத்திலுள்ள விண்மீன்களும் குளிர்ந்த மழைத்துளிகளும் அவற்றை அளவிடற்கு ஆகா. அதாவது, அவன் கொன்ற களிறுகளின் எண்ணிக்கை வானத்தில் உள்ள விண்மீன்களையும் குளிர்ந்த மழைத்துளிகளையும்விட அதிகம்.