Tuesday, February 15, 2011

225. வலம்புரி ஒலித்தது!

பாடியவர்: ஆலத்தூர் கிழார் (34. 36, 69, 225, 324). ஆலத்தூர் சோழநாட்டில் உள்ள ஓரூர். அவ்வூரைச் சார்ந்தவராகவும் வேளாண் மரபினராகவும் இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனையும், சோழன் நலங்கிள்ளியையும் பாடியுள்ளார்.
பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 27-இல் காண்க.
பாடலின் பின்னணி: சோழன் நலங்கிள்ளி வாழ்ந்த காலத்தில், மற்ற மன்னர்கள் தம்மிடம் உள்ள வலம்புரிச் சங்கை முழங்குவதில்லை. சங்கை முழங்கினால் அவர்கள் தம் வெற்றியை அறிவிக்கச் சங்கை முழங்குவதாக எண்ணிச் சோழன் நலங்கிள்ளி படையெடுத்துப் போருக்கு வருவான் என்று மற்ற மன்னர்கள் அஞ்சியதால்தான் அவர்கள் தங்கள் சங்குகளை முழங்காமல் இருந்தனர். அவ்வளவு வலிமை உள்ளவன் இப்பொழுது இறந்துவிட்டான். இப்பொழுது அரசர்களைக் காலையில் துயில் எழுப்புவதற்காகச் சங்குகள் முழங்கப்படுகின்றன, அதைக் கேட்டு, புலவர் ஆலத்தூர் கிழார், சோழன் நலங்கிள்லியை நினைத்து வருந்துகிறார். இப்பாடலில், அவர் தன்னுடைய செயலற்ற நிலையை வெளிப்படுத்துகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

தலையோர் நுங்கின் தீஞ்சோறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ
5 வேந்துபீ டழித்த ஏந்துவேல் தானையொடு
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள்இனிக்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளுடை வியன்காட் டதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென
10 இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்
தூக்கணங் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்ப
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன்றினும் நோகோ யானே.

அருஞ்சொற்பொருள்:
1. மிசைதல் = உண்ணுதல். 2. மாந்துதல் = உண்ணுதல். 3. பிசிர் = ஒட்டிய தோல்; நுகர்தல் = அனுபவித்தல், புசித்தல். 5. பீடு = பெருமை. 7. களரி = பாழ்நிலம்; பறந்தலை = பாழிடம். 8. வியன் = அகன்ற, பெரிய. 10. நுவலுதல் = சொல்லுதல்; ஏய்தல் = ஒத்தல். 11. குரீஇ = குருவி. 12. சிறை = பக்கம்; கொளீஇய = கொள்ள வேண்டி; திரி = வளைந்த. 13. ஞாலம் = உலகம்; கடைத்தலை = தலைவாயில்.

கொண்டு கூட்டு: முன்பு நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென ஒரு சிறைக் கொளீஇய வலம்புரி இன்று வென்றி நுவலா நிற்க, பறையொடு காலைத் தோன்றினும் யான் நோவேன் எனக் கூட்டுக.

உரை: முன்னே செல்லுகின்ற படையினர் நுங்கின் இனிய பதத்தினை உண்ணுவர்; படையின் இடைப்பகுதியில் உள்ளோர், பனம்பழத்தின் இனிய கனியை உண்ணுவர்; படையின் கடைப்பகுதியில் உள்ளோர் தோலுடன் கூடிய சுட்ட பனங்கிழங்கினை உண்பர். பரந்த நிலப்பரப்பையுடைய உலகத்தை வலமாகச் சுற்றிப் பகைமன்னர்களின் பெருமிதத்தை அழித்த வேல் ஏந்திய படையோடு கூடிய, வலிமையின் விளைவை இப்பொழுது கேட்பாயாக. அவன் இறந்த பிறகு, அவன் நாடு கள்ளிச் செடிகள் வளர்ந்திருக்கும் களர் நிலமாகிய பாழிடத்து முள்ளுடைய பெரிய காடாகியது.

முன்பு, மற்ற வேந்தர்களின் அரண்மனைகளில் இருந்த வலம்புரிச் சங்குகளை முழங்கினால், அவர்கள் முரசுடன் பெற்ற வெற்றியைக் குறித்து முழங்குகிறார்கள் என்று நலங்கிள்ளி நினைப்பான் என்று அஞ்சி, தூக்கணங்குருவிக் கூடுகளைப்போல் ஒருபக்கம் தூங்கிய (தொங்கிக்கொண்டிருந்த) வலம்புரிச் சங்குகள் இப்பொழுது உலகாளும் மன்னர்களின் அரண்மனை வாயில்களில், அவர்களைத் துயில் எழுப்புவதற்காக ஒலித்தாலும் நான் அதனைக் கேட்டு, இன்னும் இறவாமல் இருக்கிறேனே என்று வருந்துகிறேன்.

224. இறந்தோன் அவனே!

பாடியவர்: கருங்குளவாதனார் . பல நூல்களில், இப்பாடலின் ஆசிரியர் கருங்குழல் ஆதனார் என்று காணப்படுகிறது. இருப்பினும், உரைவேந்தர் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்கள் அது தவறு என்றும், இப்பாடலை இயற்றியவர் கருங்குளவாதனார் என்றும் குறிப்பிடுகிறார். ஆதனார் என்பது இப்புலவரின் இயற்பெயர். இப்பொழுது தமிழ் நாட்டின் தென்பகுதியில் உள்ள கருங்குளம் என்னும் ஊர் கரிகாலனால் ஆதனாருக்கு அளிக்கப்பட்டதற்குச் சான்றாக, “கருங்குள வளநாட்டுக் கரிகால் சோழ நல்லூரான கருங்குளம்” என்று ”Annual Report on Epigraphy, Madras 269 of 1928” என்னும் ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டிருப்பதை அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை சுட்டிக் காட்டுகிறார். புறநானூற்றில் இப்புலவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான். இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 7-இல் காண்க.
பாடலின் பின்னணி: இப்பாடலில், புலவர் கருங்குளவாதனார் கரிகாலனின் பெருமைக்குரிய செயல்களையும் அவன் புகழையும் கூறுகிறார். மற்றும், அவன் இறந்த பிறகு, அவன் மனைவியர் தங்கள் அணிகலன்களை கழற்றிப் பொலிவின்றிருந்ததை இலைகளும் பூக்களும் இல்லாத வேங்கை மரத்திற்கு ஒப்பிடுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

அருப்பம் பேணாது அமர்கடந் ததூஉம்,
துணைபுணர் ஆயமொடு தசும்புடன் தொலைச்சி
இரும்பாண் ஒக்கல் கடும்பு புரந்ததூஉம்,
அறம்அறக் கண்ட நெறிமாண் அவையத்து
5 முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த
தூவியற் கொள்கைத் துகளறு மகளிரொடு
பருதி உருவின் பல்படைப் புரிசை
எருவை நுகர்ச்சி யூப நெடுந்தூண்
வேத வேள்வித் தொழில்முடித் ததூஉம்,
10 அறிந்தோன் மன்ற அறிவுடை யாளன்;
இறந்தோன் தானே; அளித்துஇவ் வுலகம்;
அருவி மாறி அஞ்சுவரக் கடுகிப்
பெருவறன் கூர்ந்த வேனிற் காலைப்
பசித்த ஆயத்துப் பயன்நிரை தருமார்
15 பூவாள் கோவலர் பூவுடன் உதிரக்
கொய்துகட்டு அழித்த வேங்கையின்
மெல்லியல் மகளிரும் இழைகளைந் தனரே.

அருஞ்சொற்பொருள்:
1. அருப்பம் = அரண்; அமர் = போர்; கடத்தல் = வெல்லுதல் (அழித்தல்). 2. புணர்தல் = சேர்தல்; ஆயம் = கூட்டம்; தசும்பு = குடம்; தொலைத்தல் = அழித்தல், முற்றுப்பெறச் செய்தல். 3. ஒக்கல் = சுற்றம்; கடும்பு = சுற்றம்; புரத்தல் = பாதுகாத்தல். 4. அற = முழுவதும்; நெறி = வழி. 5. அறியுநர் = அறிந்தோர். 6. தூவியல் = தூ+இயல்; தூ = தூய்மை; துகள் = குற்றம். 7. பருதி = வட்டம். 8. எருவை = பருந்து. 8. யூபம் = வேள்வி. 11. அளித்து = இரங்கத்தக்கது. 12. கடுகுதல் = குறைதல்; கடுகி = குறைந்து; மன்ற = நிச்சய்மாக. 13. வறன் = வறம் = பஞ்சம், வறட்சி; கூர்தல் = மிகுதல். 14. ஆயம் = பசுக்களின் கூட்டம். 15. பூவாள் = ஒருவகை வாள். 16. கட்டு = கிளை. 17. இழை = அணிகலன்.

கொண்டு கூட்டு: அறிவுடையாளன் இறந்தான்; மகளிரும் இழை களைந்தனர்; இவனை இழந்த உலகம் அளித்து என கூட்டுக.

உரை: பகைவர்களின் அரண்களை மதியாது, அவற்றைப் போரில் அழித்தான்; துணையாகக் கூடிய இனத்துடன் சேர்ந்து, அவர்கள் குடிப்பதற்கு மதுவைக் குடம் குடமாக அளித்தான்; பாணர்களின் பெரிய சுற்றத்தைப் பாதுகாத்தான்; அறத்தை முழுமையாகக் கற்ற சான்றோர்களின் சிறந்த அவையில் வழிமுறைளை நன்கு அறிந்தவர்கள் முன்னின்று பாராட்டிய வட்டவடிவமான பல மதில்களால் சூழப்பட்ட வேள்விச் சாலையுள், பருந்து விழுங்குவதுபோல் செய்யப்பட்ட இடத்து, நாட்டிய வேள்வித் தூணாகிய நீண்ட கம்பத்து, தூய்மையான இயல்பும், கற்பொழுக்கமாகிய கொள்கையுமுடைய குற்றமற்ற குல மகளிரோடு வேதவேள்வியை முடித்தான். இத்தகைய செயல்களின் பயனை நிச்சயமாக அறிந்த அறிவுடையோன் இறந்தான். ஆகவே இவ்வுலகம் இரங்கத் தக்கது.

அருவியில் நீர் குறைந்து, உலகத்தார் அஞ்சும் வறட்சி மிகுந்த வேனிற்காலத்தில் பசியால் வாடும் பசுக்களின் கூட்டத்தைப் பாதுகாப்பதற்காக, கூர்மையான கொடுவாளால் இடையர்கள் இலைகளையும் பூக்களையும் உதிர்த்த பிறகு களையிழந்து காணப்படும் வேங்கை மரத்தைப்போல் கரிகாலனின் மெல்லிய இயல்புடைய மனைவியர் தங்கள் அணிகலன்களைக் களைந்து காட்சி அளித்தனர்.

சிறப்புக் குறிப்பு: கரிகால் வளவன் சிறுவனாக இருந்தபொழுது, ஒருவழக்கில் நீதி சொல்வதற்கு, நரைமுடி தரித்து முதியவர்போல் வந்து நீதிவழங்கியதாக ஒருகதை உள்ளது. இப்பாடலில், “முறைநற்கு அறியுநர் முன்னுறப் புகழ்ந்த” என்பதற்கு இச்செய்தியைப் பொருளாகக் கொள்வது சிறந்தது என்று அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

223. நடுகல்லாகியும் இடங் கொடுத்தான்!

பாடியவர்: பொத்தியார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 217-இல் காண்க.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 212 -இல் காண்க.
பாடலின் பின்னணி: முந்திய பாடலில், பொத்தியார் தனக்கு வடக்கிருப்பதற்குரிய இடம் எது என்று கோப்பெருஞ்சோழனின் நடுகல்லைப் பார்த்துக் கேட்கிறார். அச்சமயம், அவருக்குக் கோப்பெருஞ்சோழன் உயிருடன் வந்து அவர் வடக்கிருப்பதற்கு ஏற்ற இடத்தைச் சுட்டிக் காட்டியது போல் தோன்றியது. சோழன் காட்சி அளித்துத் தனக்கு இடம் காட்டியதை வியந்து, இப்பாடலில், பொத்தியார் அவனுடைய நட்பைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

பலர்க்குநிழ லாகி உலகம்மீக் கூறித்
தலைப்போ கன்மையிற் சிறுவழி மடங்கி
நிலைபெறு நடுகல் ஆகியக் கண்ணும்
இடங்கொடுத்து அளிப்ப மன்ற உடம்போடு
5 இன்னுயிர் விரும்பும் கிழமைத்
தொன்னட் புடையார் தம்உழைச் செலினே!

அருஞ்சொற்பொருள்:
1. நிழல் ஆதல் = அருள் செய்தல்; மீக்கூறல் = புகழ்தல், வியத்தல், மிகவும் சொல்லப்படுதல். 2. தலைப்போதல் = அழிதல், முடிதல்; சிறுவழி மடங்கி = சிறிய இடத்தின்கண் அடங்கியிருந்து. 4. மன்ற = நிச்சயமாக. 5. கிழமை = உரிமை. 6. உழை = பக்கம்.

கொண்டு கூட்டு: தொன்னட்புடையோர் தம்முழைச் செலின் இடம் கொடுத்து அளிப்ப எனக் கூட்டுக.

உரை: பலருக்கும் அருள் செய்யும் நிழலாகி, உலகத்தாரால் மிகவும் பெருமையாகப் பேசப்படும் வகையில் அரசாளும் பணியை முற்றிலும் முடிக்காமல் ஒருசிறிய இடத்தில் அடங்கி நிலைபெறும் நடுகல் ஆனாய்; அவ்வாறு நீ நடுகல்லானாலும், உடம்பும் உயிரும் இணைந்தது போன்ற உரிமையுடைய, பழைய நட்பினர் உன்னிடம் வந்தால், நிச்சயமாக நீ அவருக்கு இடம் கொடுத்து உதவி செய்வாய் என்பதைத் தெரிந்துகொண்டேன்.

சிறப்புக் குறிப்பு: நெருங்கிய நட்புக்கு உதாரணமாக உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பைத் திருவள்ளுவர்,

உடம்பொ டுயிரிடை என்னமற் றன்ன
மடந்தையொ டெம்மிடை நட்பு. (குறள் – 1122)

என்று கூறியிருப்பதை இங்கு ஒப்பு நோக்குக.

222. என் இடம் யாது?

பாடியவர்: பொத்தியார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 217-இல் காண்க.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 212 -இல் காண்க.
பாடலின் பின்னணி: கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்த பொழுது பொத்தியாரும் அவனுடன் வடக்கிருக்க விரும்பினார். ஆனால், கோப்பெருஞ்சோழன், “உன் மனைவி கருவுற்றிருக்கிறாள். அவளுக்குக் குழந்தை பிறந்த பிறகு நீ என்னோடு வடக்கிருக்கலாம்” என்று கூறியதற்கேற்ப, பொத்தியார் வடக்கிருக்கும் எண்ணத்தைக் கைவிட்டார். அவர் மனைவிக்குக் குழந்தை பிறந்த பிறகு கோப்பெருஞ்சோழனோடு வடக்கிருக்க வந்தார். ஆனால், அதற்குள் கோப்பெருஞ்சோழன் இறந்துவிட்டான். அவனுக்கு நடுகல்லும் நட்டுவைக்கப்பட்டிருந்தது. அதைக் கண்ட பொத்தியார், அவன் வாழ்ந்த காலத்தையும் அவன் நட்பையும் நினைவு கூர்ந்தார். “மன்னா! நான் வடக்கிருக்க வந்திருக்கிறேன். எனக்குரிய இடம் எது?” என்று இப்பாடலில் பொத்தியார் கேட்கிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

அழல்அவிர் வயங்கிழைப் பொலிந்த மேனி
நிழலினும் போகாநின் வெய்யோள் பயந்த
புகழ்சால் புதல்வன் பிறந்தபின் வாவென
என்இவண் ஒழித்த அன்பி லாள!
5 எண்ணாது இருக்குவை அல்லை;
என்னிடம் யாதுமற்று இசைவெய் யோயே!

அருஞ்சொற்பொருள்:
1. அழல் = தீ; அவிர் = விளங்கும்; வயங்கிழை = விளங்கும் ஒளியுடைய அணிகலன்கள். 2. வெய்யோள் = விரும்பத்தக்கவள்; பயந்த = தந்த. 6. யாது = எது; இசை வெய்யோய் = புகழை விரும்புபவனே.

கொண்டு கூட்டு: புதல்வன் பிறந்தபின் வா என, இவண் ஒழித்த அன்பிலாளா, என் இடம் யாது எனக் கூட்டுக.

உரை: ”தீயைப்போல் விளங்கும் பொன்னாலான அணிகலன்களை அணிந்த அழகிய வடிவுடையவளாய், உன் நிழலைக்கூட ஒருபொழுதும் நீங்காத, உன்னை மிகவும் விரும்பும் உன் மனைவி புகழ் நிறைந்த புதல்வனைப் பெற்றபின் வா” எனக் கூறி என்னை இங்கிருந்து போகச் சொன்ன அன்பில்லாதவனே! நம் நட்பினை நீ எண்ணிப் பார்க்காமல் இருந்திருக்கமாட்டாய். புகழை விரும்பும் மன்னா! நான் மீண்டும் வந்துள்ளேன்; எனக்குரிய இடம் எது என்று கூறுவாயாக.

221. வைகம் வாரீர்!

பாடியவர்: பொத்தியார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 217-இல் காண்க.
பாடப்பட்டோன்: கோப்பெருஞ்சோழன். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 212 -இல் காண்க.
பாடலின் பின்னணி: வடக்கிருந்த கோப்பெருஞ்சோழன் இறந்ததும் அவன் திறமையையும், அறிவையும், பெருமையையும் கருதி அவனுக்கு ஒருநடுகல் நடப்பட்டது. அந்த நடுகல்லில், அவன் பெயரும், புகழும் குறிப்பிடப்பட்டிருந்தது. மற்றும், அந்த நடுகல் மயில் இறகு சூடப்பட்டு, மாலைகளுடன் அலங்கரிக்கப்பட்டிருந்தது, அதைக்கண்ட பொத்தியார், மனம் கலங்கி, இத்தகைய சிறந்த மன்னனின் உயிரைப் பறித்த கூற்றுவனை வைகுவோம் என்று அங்குள்ள மற்ற சான்றோர்களை அழைப்பதை இப்பாடலில் காண்கிறோம்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்.

பாடுநர்க்கு ஈத்த பல்புக ழன்னே;
ஆடுநர்க்கு ஈத்த பேரன் பினனே;
அறவோர் புகழ்ந்த ஆய்கோ லன்னே;
திறவோர் புகழ்ந்த திண்நண் பினனே;
5 மகளிர் சாயல்; மைந்தர்க்கு மைந்து;
துகளறு கேள்வி உயர்ந்தோர் புக்கில்;
அனையன் என்னாது அத்தக் கோனை
நினையாக் கூற்றம் இன்னுயிர் உய்த்தன்று;
பைதல் ஒக்கல் தழீஇ அதனை
10 வைகம் வம்மோ; வாய்மொழிப் புலவீர்!
நனந்தலை உலகம் அரந்தை தூங்கக்
கெடுவில் நல்லிசை சூடி
நடுகல் ஆயினன் புரவலன் எனவே.

அருஞ்சொற்பொருள்:
3. கோல் = செங்கோல். 4. திறவோர் = சான்றோர்; திண் = வலி. 5. சாயல் = மென்மை; மைந்து = வலிமை. 6. துகள் = குற்றம்; புக்கில் = புகலிடம். 9. பைதல் = துன்பம்; தழீஇ = உள்ளடக்கிக் கொண்டு. 10. வைகம் = வைகுவோம்; வம்மோ = வாருங்கள். 11. நனந்தலை = அகன்ற இடம்; அரந்தை = துயர்; தூங்க = அடைய.

கொண்டு கூட்டு: வாய்மொழிப் புலவீர், அத்தக்கோனைக் கூற்றம் இன்னுயிர் உய்த்தது; அதனால், புரவலன் கல்லாயினன் என ஒக்கல் தழீஇ அதனை வைகம் வம்மோ எனக் கூட்டுக.

உரை: வாய்மையே பேசும் புலவர்களே! பாடி வருபவர்களுக்கு வரையாது வழங்கிப் புகழ் பல கொண்டவன்; ஆடும் விறலியர்க்கும் கூத்தர்களுக்கும் பொருள் பல அளித்த மிகுந்த அன்புடையவன்; அறவோர் புகழ்ந்த செங்கோலன்; சான்றோர் புகழ்ந்த நெருங்கிய நட்புடையவன்; மகளிரடத்து மென்மையானவன்; வலியோர்க்கு வலியோன்; குற்றமற்ற கேள்வி அறிவுடையவர்களுக்குப் புகலிடமானவன்; அத்தகைய தன்மைகள் உடையவன் எனக் கருதாது, சிந்திக்கும் திறனற்ற கூற்றுவன், அவன் உயிரைக்கொண்டு சென்றான். அகன்ற இடமுள்ள இந்த உலகு துன்பம் அடைய, கேடில்லாத நல்ல புகழ்மாலையைச் சூடி, எம்மைப் பாதுகாத்தவன் நடுகல்லாகிவிட்டான் என்று வருந்தும் நம் சுற்றத்தாரோடு சேர்ந்து அக்கூற்றுவனை வைகுவம்; வாரீர்.