Monday, May 21, 2012


331. இல்லது படைக்க வல்லன்!

பாடியவர்: உறையூர் முதுகூத்தனார். இவர் பெயர்  உறையூர் முதுகூற்றனார் என்றும் முதுகூத்தனார் என்றும் ஏடுகளில் காணப்படுகிறது. இவர் அகநானூற்றில் இரண்டு (137, 329) குறுந்தொகையில் நான்கு (221, 353, 37, 390) பாடல்களும், நற்றிணையில் இரண்டு (29, 58) பாடல்களும், புறநானூற்றில் ஒரு (331) பாடலும் இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: வறுமையில் இருந்தாலும் செல்வந்தனாக இருந்தாலும் குறையாது வழங்கும் சிற்றூர்த் தலைவன் ஒருவனின் கொடைத் தன்மையைப் இப்பாடலில் புலவர் உறையூர் முதுகூத்தனார் கூறுகிறார்.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.


கல்லறுத்து இயற்றிய வல்லுவர்க் கூவல்
வில்ஏர் வாழ்க்கைச் சீறூர் மதவலி
நனிநல் கூர்ந்தனன் ஆயினும் பனிமிகப்
புல்லென் மாலைச் சிறுதீ ஞெலியும்
கல்லா இடையன் போலக் குறிப்பின்                              5

இல்லது படைக்கவும் வல்லன்; உள்ளது
தவச்சிறிது ஆயினும் மிகப்பலர் என்னாள்
நீள்நெடும் பந்தர் ஊண்முறை ஊட்டும்
இற்பொலி மகடூஉப் போலச் சிற்சில
வரிசையின் அளிக்கவும் வல்லன்; உரிதினின்                           10

காவல் மன்னர் கடைமுகத்து உகுக்கும்
போகுபலி வெண்சோறு போலத்
தூவவும் வல்லனவன் தூவுங் காலே.

அருஞ்சொற்பொருள்: 1. கூவல் = கிணறு. 2. மதம் = வலிமை; மதவலி = பெருவலிமை. 3. நல்கூர்தல் = வறுமையுறுதல்,; நனி = மிக; பனி = குளிர். 4. புல்லென் = பொலிவிழந்த; ஞெலிதல் = தீக்கடைதல். 7. தவ = மிக. 9. மகடூ = பெண், மனைவி. 10. வரிசை = தகுதி. 11. கடை = வாயில்; உகுத்தல் = சொரிதல். போகுபலி = அள்ளிக் கொண்டு செல்லும் உணவு. 13. தூவுதல் = வழங்குதல்.

கொண்டு கூட்டு: மதவலி நல்கூர்ந்தானாயினும் படைக்கவும் வல்லன்; சிறிதாயினும் அளிக்கவும் வல்லன்; உரிதெனின் தூவவும் வல்லன் எனக் கூட்டுக.

உரை: இவன் கல்லையுடைத்துக் கட்டிய வலிய உவர்நீர் உள்ள கிணறும், வில்லால் வேட்டையாடி வாழ்க்கை நடத்தும் மக்களும் உள்ள சிற்றூருக்குத் தலைவன்; மிகுந்த வலிமையுடையவன். இவன் மிகவும் வறுமையுற்றால், குளிர் மிகுந்த, இருள் மயங்கும் மாலை நேரத்தில் சிறிய தீக்கடைக் கோலால் கடைந்து தீ உண்டாக்கும் இடையன் போலத், தன் இல்லத்தில் இல்லாததைக் குறிப்பால் அறிந்து அவற்றை உண்டாக்கிக் கொள்ளவும் வல்லவன்.  தன்னிடம் இருப்பது மிகவும் சிறிய அளவினதானால் அதைப் பரிசிலர் பலருக்கும் அளிக்க வேண்டுமே என்று மனம் கலங்காமல், நீண்ட நெடிய பந்தலின் கீழ் விருந்தினர்களை இருத்தி உணவை முறையாக அளித்து உண்பிக்கும் குடும்ப விளக்காகிய மகளிரைப்போல் பரிசிலர்களின் தகுதியை அறிந்து கொடுக்கவும் வல்லவன். செல்வம் மிகுதியாக இருந்தால் நாட்டைக் காக்கும் பெருவேந்தர்களின் வாயிலில் அளிக்கப்படும் உணவுபோல பலரும் கொள்ளுமாறு வாரி வழங்கக் கூடியவன்.

சிறப்புக் குறிப்பு: சங்க காலத்தில், வேந்தர்களின் அரண்மனையில் வந்தோர்க்கெல்லாம் வரையாது சோறு வழங்கப்பட்டதாக இப்பாடலிலிருந்து தெரிகிறது.

330. பெருங்கடற்கு ஆழி அனையன்!

பாடியவர்: மதுரை கணக்காயனார்(330). இவர் சங்க இலக்கியத்தில் பல பாடல்களை இயற்றிய பெரும்புலவர் நக்கீரனாரின் தந்தை. இவர் மூவேந்தர்களாகிய சேர, சோழ, பாண்டிய மன்னர்களைப் பாடியுள்ளார்.  இவர் அகநானூற்றில் மூன்று (27, 338, 342) செய்யுட்களும், நற்றிணையில் ஒரு (23)செய்யுளும், புறநானூற்றில் ஒரு (330) செய்யுளும் இயற்றியுள்ளார்.  

பாடலின் பின்னணி: இப்பாடலில், ஒரு சிற்றூர்த் தலைவனின் வண்மையையும் வீரத்தையும் மதுரை கணக்காயனார் புகழ்ந்து பாடுகிறார்.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.


வேந்துடைத் தானை முனைகெட நெரிதர
ஏந்துவாள் வலத்தன் ஒருவன் ஆகித்
தன்இறந்து வாராமை விலக்கலின், பெருங்கடற்கு
ஆழி அனையன் மாதோ; என்றும்,
பாடிச் சென்றோர்க்கு அன்றியும் வாரிப்                                    5

புரவிற்கு ஆற்றாச் சீறூர்த்
தொன்மை சுட்டிய வண்மை யோனே.

அருஞ்சொற்பொருள்:
1, முனை = போர்முனை (முன்னணிப் படை); நெரிதரல் = உடைதல், நொறுங்குதல். 2. வலத்தன் = வலிமையுடையவன். 4. ஆழி = கடற்கரை; மாதோ - அசை. 5. வாரி = வருவாய். 6. புரவு = ஒருவகை நிலவரி.

கொண்டு கூட்டு: ஒருவனாகி விலக்கலில் பெருங்கடற்கு ஆழி அனையன்; வண்மையோன்.

உரை: தன் வேந்தனுடைய முன்னணிப் படை சிதைந்து அழியுமாறு, பகைவர்களின் படை முன்னேறியபொழுது, இவன் தனியனாக வாளை ஏந்தி வலிமையுடன் போர்புரிந்து பகைவரின் படை, தன்னைக் கடந்து வராமல் தடுத்தான்.  ஆகவே, இவன் பெருங்கடலுக்குக் கரை போன்றவன்.  வள்ளல் தன்மையுடைய பரம்பரையைச் சார்ந்த இவ்வூர்த் தலைவன், எந்நாளும், தன்னைப் பாடிச் சென்ற பரிசிலர்களுக்கு  வரையாது கொடுப்பது மட்டுமல்லாமால், வரி செலுத்துவதற்குக்கூட வருவாய் இல்லாத இவ்வூரையும் தன் வள்ளன்மையால் காப்பாற்றி வருகிறான்.

சிறப்புக் குறிப்பு: ’பெருங்கடற்கு ஆழியனையன்’  என்றது பகைவர்களின் படையைத் தடுத்து நிறுத்துவதைக் குறிப்பதுபோல்,  பரிசிலர்களையும், வருவாய் இல்லாத  அவ்வூர் மக்களையும் தலைவன் பாதுகாப்பதையும் குறிப்பதாகத் தோன்றுகிறது.

329. அரவுறை புற்றத்து அற்றே!

பாடியவர்: மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் (329). அறுவை என்ற சொல் “சீலை, ஆடை, உடை” போன்ற பொருள்களைக் குறிக்கும் ஒருசொல். இவரது இயற்பெயர் இளவேட்டன்.  இவர் மதுரையில் அறுவை வாணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் மதுரை அறுவை இளவேட்டனார் என்று அழைக்கப்பட்டார். இவர் அகநானூற்றில் ஆறு செய்யுட்களும் (56, 124, 230, 254, 272, 302) குறுந்தொகையில் ஒரு (215) செய்யுளும், நற்றிணையில் நான்கு (33, 157, 221, 344) செய்யுட்களும் , புறநானூற்றில் ஒரு (329) செய்யுளும் இயற்றியுள்ளார்.

பாடலின் பின்னணி: ஒருகால், மதுரை அறுவை வாணிகன் இளவேட்டனார் ஒருசிற்றூரில் வாழும் தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அவன் அவ்வூர் மக்களின் நலத்தில் மிகவும் அக்கறையோடு அவர்களைப் பாதுகாத்துவந்ததைக் கண்டு மகிழ்ந்தார். இப்பாடலில் அவர் அத்தலைவனைப் புகழ்கிறார்.


திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

இல்லடு கள்ளின் சில்குடிச் சீறூர்ப்
புடைநடு கல்லின் நாட்பலி யூட்டி
நன்னீர் ஆட்டி நெய்ந்நறைக் கொளீஇய
மங்குல் மாப்புகை மறுகுடன் கமழும்
அருமுனை இருக்கைத்து ஆயினும் வரிமிடற்று                          5

அரவுறை புற்றத்து அற்றே; நாளும்
புரவலர் புன்கண் நோக்காது இரவலர்க்கு
அருகாது ஈயும் வண்மை
உரைசால் நெடுந்தகை ஓம்பும் ஊரே.

அருஞ்சொற்பொருள்: 1. அடுதல் = சமைத்தல். 2. புடை = பக்கம்; நாள் = விடியற்காலை; பலி = யாகம் முதலியவற்றில் தேவர், மறுகு = தெரு . 5. முனை = முதன்மை; இருக்கை = இருப்பிடம், குடியிருப்பு, ஊர்; வரி = கோடு; மிடறு = கழுத்து. 6. அரவு = பாம்பு. 7. புன்கண் = இடுக்கண், துன்பம். 8. அருகாது = குறையாது. 9. உரை = புகழ்.

கொண்டு கூட்டு: ஊர் அரவுறை புற்றத்தற்று எனக் கூட்டுக.

உரை: அது ஒரு சிற்றூர். அங்குச் சில குடிகளே உள்ளன. அங்குள்ள மக்கள், தங்கள் வீடுகளில் கள்ளைக் காய்ச்சுவார்கள்.  அச்சிற்றூரின் பக்கத்தில், நடப்பட்ட நடுகல்லுக்கு, அவ்வூர் மக்கள் விடியற் காலையில் படையல் செய்து, நல்ல நீரால் நீராட்டி, நெய்விளக்கேற்றியதால் உண்டாகிய புகை தெருவெல்லாம் மணக்கும். பகைவர்கள் வந்து தாக்குவதற்கு முதன்மையான இடமாக அவ்வூர் இருந்தாலும், அது பகைவர்களால் கொள்ளற்கரிய இடமாகும்.  வரிகள் பொருந்திய கழுத்தையுடைய பாம்பு வாழும் புற்று போன்றது அவ்வூர்.  நாள்தோறும், செல்வந்தர்களுக்கு உண்டாகும் துன்பத்தைப் பாராமல் (ஒரு பொருளாகக் கருதாமல்), இரவலர்களுக்குக் குறையாது கொடுக்கும் வள்ளல் தன்மை உடைய புகழ் மிகுந்த பெருந்தகையால் அவ்வூர் பாதுகாக்கப்படுகிறது. 

சிறப்புக் குறிப்பு: ஊர் அருகில் உள்ள நடுகல்லை வழிபடுவதைப் பற்றி பாடலில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அவ்வூரில், மறக்குடியைச் சார்ந்த மக்கள் வாழ்ந்தார்கள் என்பது தெரிகிறது. ஆகவே, அது பகைவர்களால் தாக்குதற்கு அரிய இடம் என்பதைக் உணர்த்த, புலவர் ‘அருமுனை இருக்கை’ என்று அவ்வூரைக் குறிப்பிடுகிறார்.  தலைவன் வெகு சிறப்பாக அவ்வூரைப் பாதுகாப்பதால், அவ்வூர் ‘அரவுறை புற்று’க்கு ஒப்பிடப்பட்டுள்ளது.

328. இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன!

பாடியவர்: பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணி: ஒரு சிற்றூர் மன்னனைப் பாடிச் சென்றால், நல்ல உணவும் பரிசில்களும் அளிப்பான் என்று கூறி, ஒரு பாணனைப் புலவர் ஆற்றுப்படுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. இப்பாடலில் சில வரிகள் சிதைந்துள்ளன.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.


.. ..புல்லென் அடைமுதல் புறவுசேர்ந் திருந்த
புன்புலச் சீறூர் நெல்விளை யாதே;
வரகும் தினையும் உள்ளவை யெல்லாம்
இரவன் மாக்களுக்கு ஈயத் தொலைந்தன;
. . . . . .. .. .. .. .. .. .. .. .. .. டமைந் தனனே;                                5

அன்னன் ஆயினும் பாண, நன்றும்
வள்ளத் திடும்பால் உள்ளுறை தொடரியொடு. ..
களவுப் புளியன்ன விளைகள்.. .. .. ..
.. .. .. .. .. .. .. வாடூன் கொழுங்குறை
கொய்குரல் அரிசியொடு நெய்பெய்து அட்டுத்                10

துடுப்பொடு சிவணிய களிக்கொள் வெண்சோறு
உண்டு இனிது இருந்த பின். .. .. .. .. .. ..
.. .. .. …   .. .. .. ..  தருகுவன் மாதோ
தாளிமுதல் நீடிய சிறுநறு முஞ்ஞை
முயல்வந்து கறிக்கும் முன்றில்                               15

சீறூர் மன்னனைப் பாடினை செலினே.

அருஞ்சொற்பொருள்: 1. புல் = அற்பம்; அடை = இலை; முதல் = அடிப்பாகம்; புறவு = புன்செய் நிலம், காடு, முல்லை நிலம். 2. புன்புலம் = தரிசு நிலம். 7. வள்ளம் = கிண்ணம்; உள்ளுறை = உள்ளே உறைந்த; தொடரி = தொடரிப் பழம். 8. களவு = களாப் பழம். 9. வாடூன் = வெந்த ஊன் உணவு; குறை = ஊன் துண்டு. 10 குரல் = கதிர். 11. சிவணிய = துழாவிய; களிகொள் = களிப்பைத் தருகின்ற. 12. பின்றை = பின்; 14. தாளி = தாளிப் பனைமரம் (ஒருவகைப் பனைமரம்); நறுமை = மணம், நன்மை; முஞ்ஞை = முன்னைக் கொடி.

கொண்டு கூட்டு: பாண, சீறூர், நெல் விளையாது; எல்லாம் ஈயத் தொலைந்தன; அமைந்தனன்; அன்னனயினும் பாடினை செலின் தருகுவன் எனக் கூட்டுக.

உரை: அது ஒரு சிற்றூர். அந்தச் சிற்றுர் மன்னனின் வீட்டு முற்றத்திலுள்ள, தாளிமரத்தின் அடியில் படர்ந்த, சிறிய மணமிக்க முன்னைக் கொடியை முயல் வந்து தின்னும்.  அவ்வூர், பொலிவற்ற இலைகளும் அடிப்பாகமும் உடைய மரங்கள் உள்ள காடாகிய முல்லை நிலத்தைச் சேர்ந்த புன்செய் நிலங்களில் உள்ளது. அங்கே நெல் விளையாது.  அங்கு விளையும் வரகையும் தினையையும் இரவலர்க்குக் கொடுத்ததால் அவை தீர்ந்து போயின.  பாணனே! நீ அவ்வூர் மன்னனைப் பாடிச்சென்றால், கிண்ணத்தில் ஊற்றிவைத்த பாலில் உறையிடுவதற்காக வைத்திருந்த தயிரையும்,  தொடரிப் பழத்தையும், களாப் பழத்தின் புளிப்பைப் போலப் புளிப்பேறிய கள்ளையும், வெந்த ஊன்துண்டுகளையும், அறுவடை செய்த வரகிலிருந்து எடுத்த அரிசியில் நெய்யிட்டுச் சமைத்துத், துடுப்பால் துழாவப்பட்ட களிப்பைத் தருகின்ற உணவை உண்டு இனிது இருந்தபின் உனக்கு அவன் வேறு பரிசுகளும் அளிப்பான். 

சிறப்புக் குறிப்பு:  இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் சிற்றூரில் நெல்விளையாததால், அரிசி என்று கூறப்பட்டிருப்பது வரகிலிலிருந்து எடுக்கப்படும் அரிசியை குறிப்பதாகத் தோன்றுகிறது.

327. அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே!

பாடியவர்: பெயர் தெரியவில்லை.
பாடலின் பின்னணி: ஒரு சிற்றூரில் வரகு மிகவும் குறைவாகவே விளைந்தது.  அவ்வூர்த் தலைவன், விளைந்த வரகில் கடன்காரர்களுக்குக் கொடுத்தது போக எஞ்சியிருப்பதை பசியுடன் வந்த பாணர்களுக்கு அளித்தான். பாணர்கள் சென்ற பிறகு, வறுமையுடன் வந்த சுற்றத்தாருக்கு வரகைக் கடனாகி வாங்கி அளித்தான். இவ்வளவு வறுமையில் இருந்தாலும், அத்தலைவன் பேரரசர்கள் போருக்கு வந்தால் அவர்களை எதிர்த்துப் போரிடும் பேராண்மை உடையவன். இப்பாடலில், புலவர் அத்தலைவனைப் புகழ்ந்து பாடுகிறார்.

திணை:  வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.


எருதுகால் உறாஅது இளைஞர் கொன்ற               
சில்விளை வரகின் புல்லென் குப்பை
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டுகடை தப்பலின்
ஒக்கல் ஒற்கம் சொலியத் தன்னூர்ச்                        5

சிறுபுல் லாளர் முகத்தளவ கூறி
வரகுடன் இரக்கும் நெடுந்தகை
அரசுவரின் தாங்கும் வல்லா ளன்னே.

அருஞ்சொற்பொருள்: 1. எருதுகால் உறல் = மாடுகட்டி மிதித்தல் (போரடித்தல்). 2. புல்லென் = பொலிவு இல்லாத; குப்பை = குவியல். 3. தொடுத்தல் = பற்றல், வளைத்தல்; கடவர் = கடன்காரர்; மிச்சில் = எஞ்சியிருப்பது. 4. கடைதப்பல் = வெளியேறல். 5. ஒக்கல் = சுற்றம்; ஒற்கம் = வறுமை; சொலிய = நீங்க. 6. புல்லாளர் = அற்பர்கள் (நல்ல உள்ளம் இல்லாதவர்கள்).

உரை: வரகு நிறைய விளையாததால், எருதுகளைப் பூட்டிப் போரடிக்காமல் இளைஞர்கள் காலால் மிதித்து எடுத்த, சிறிதளவே விளைந்த வரகைக் கடன்காரர்கள் எடுத்துக்கொண்டது போக எஞ்சியிருப்பதைப் பாணர்கள் உண்டனர்.  பாணர்கள் உண்டு வெளியேறிய பிறகு, தலைவனின் சுற்றத்தாரின் வறுமையைக் களைவதற்காக அவன் தன்னூரில் வாழும் நல்ல உள்ளம் இல்லாதவர்களிடத்தில் தனக்கு வேண்டும் அளவைக் கூறி வரகைக் கடனாகப் பெற்றான். அத்தகைய பெருந்தகை வறுமையில் இருந்தாலும் பெருவேந்தர்கள் படையெடுத்து வந்தால் எதிர்த்து நின்று வெற்றிகொள்ளும் வலிமையுடையவன்.

சிறப்புக் குறிப்பு: வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல் மூதின் முல்லை என்று பல அறிஞர்கள் கூறுகின்றனர். ஒரு சிலர், மறக்குடி மகளிரின் மறப்பண்பினை எடுத்துரைப்பது மூதின் முல்லை என்பர். இப்பாடலுக்கும் மூதின் முல்லைக்கு கொடுக்கப்படும் விளக்கங்களுக்கும் எந்தத் தொடர்பும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒருமறவனுடைய ஊர், குடி, பண்பு முதலியவற்றைப் பாராட்டி அவனுடைய ஆண்மையை விதந்து கூறுவது ‘வல்லாண் முல்லை’ எனப்படும். இப்பாடலின் கருத்தை ஆராய்ந்து பார்த்தால் இப்பாடல் வல்லாண்மை முல்லையைச் சார்ந்ததாகக் கருதுவதே சிறப்பானதாகத் தோன்றுகிறது. இதுபோலவே, அடுத்துவரும் எட்டுப் பாடல்களும் (328 – 335) மூதின் முல்லையைச் சார்ந்தவையா என்பது ஆய்வுக்குரியது.