Tuesday, October 4, 2011

280. வழிநினைந்து இருத்தல் அரிதே!

280. வழிநினைந்து இருத்தல் அரிதே!

பாடியவர்: மாறோக்கத்து நப்பசலையார். இவரைப்பற்றிய குறிப்புக்களைப் பாடல் 37-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், மாறோக்கத்து நப்பசலையார் ஒரு வீரனின் இல்லத்திற்குச் சென்றார். அங்கு, அவன் போர்ப்புண்பட்டு இறக்கும் நிலையில் இருந்தான். அவன் இறப்பது உறுதி என்று அவன் மனைவி கருதினாள். அவனுடைய ஆதரவில் வாழ்ந்துவந்த துடியன், பாணன், விறலி முதலியோர் வாழ்க்கை என்ன ஆகுமோ என்று அவள் வருந்தினாள். அவர்களை நோக்கி, “தலைவன் மார்பில் உண்டாகிய புண்கள் பெரிதாக உள்ளன. எல்லா அறிகுறிகளும் அவன் இறப்பது உறுதி என்பதைக் கூறுகின்றன. இனி உங்கள் நிலை என்ன ஆகுமோ: நான் அறியேன். இனி, நீங்கள் இங்கே வாழ்வது அரிது; நான் கைம்மை நோன்பை மேற்கொண்டு வாழ்வேன் என்று நினைப்பது அதைவிட அரிது.” என்று கூறுகிறாள். அம்மனையோளின் துயரம் தோய்ந்த சொற்களைக் கேட்ட புலவர் மாறோக்கத்து நப்பசலையார் இப்பாடலில் அவள் கூறியவற்றைத் தொகுத்துக் கூறுகிறார்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.

துறை: ஆனந்தப்பையுள். கணவன் இறந்த போது மனைவி துன்புறுதலைக் கூறுதல் அல்லது இறந்தாரைக் கண்டு சுற்றத்தார் வருந்துதல் ஆகிய இரண்டும் ஆனந்தப்பையுள் என்ற துறையில் அடங்கும்.

என்னை மார்பிற் புண்ணும் வெய்ய;
நடுநாள் வந்து தும்பியும் துவைக்கும்;
நெடுநகர் வரைப்பின் விளக்கும் நில்லா;
துஞ்சாக் கண்ணே துயிலும் வேட்கும்;
5 அஞ்சுவரு குராஅல் குரலும் தூற்றும்;
நெல்நீர் எறிந்து விரிச்சி ஓர்க்கும்
செம்முது பெண்டின் சொல்லும் நிரம்பா;
துடிய! பாண! பாடுவல் விறலி!
என்ஆ குவிர்கொல்? அளியிர்; நுமக்கும்
10 இவண்உறை வாழ்க்கையோ அரிதே; யானும்
மண்ணுறு மழித்தலைத் தெண்ணீர் வாரத்
தொன்றுதாம் உடுத்த அம்பகைத் தெரியல்
சிறுவெள் ஆம்பல் அல்லி உண்ணும்
கழிகல மகளிர் போல,
15 வழிநினைந்து இருத்தல் அதனினும் அரிதே.

அருஞ்சொற்பொருள்:

1. என்னை = என்+ஐ = என் தலைவன் (கணவன்); வெய்ய = கொடியது. 2. தும்பி = வண்டு; துவை = ஒலி. 3. வரைப்பு = எல்லை. 4. துஞ்சுதல் = உறங்கல்; வேட்கும் = விரும்பும். 5. குராஅல் = கூகை; தூற்றல் = பழிகூறல். 6. விரிச்சி = சகுனம்; ஓர்க்கும் = கேட்கும். 7. நிரம்பா = நிறைவில்லாத. 9. அளியிர் = இரங்கத் தக்கவர்கள். 10. இவண் = இங்கே. 11. மண்ணுதல் = கழுவுதல்; மழித்தல் = மொட்டையடித்தல். 12. தொன்று = பழைய நாள். 13. அல்லி = அல்லியரிசி. 15. வழிநினைந்து = எதிர் காலத்தை நினைத்து வருந்தி.

கொண்டு கூட்டு: புண்ணும் வெய்ய; தும்பியும் துவைக்கும்; விளக்கும் நில்லா; கண் துயில் வேட்கும்; குராஅல் குரலும் தூற்றும்; விரிச்சி ஓர்க்கும் பெண்டின் சொல்லும் நிரம்பா; ஆதலால், துடிய! பாண! பாடுவல் விறலி! என்னாகுவிர்கொல்? அளியிர்; நுமக்கும் இவண் உறை அரிது; யானும் இருத்தல் அதனினும் அரிது.

உரை: என் கணவனின் மார்பில் உள்ள புண் மிகவும் கொடியது. நடுப்பகலில் வண்டுகள் வந்து ஒலிக்கின்றன; என்னுடைய பெரிய அரண்மனையில் ஏற்றிவைத்த விளக்குகள் நின்று நிலைத்து எரியாமல் அவிந்துவிடுகின்றன; என் கணவன் துன்பத்திலிருக்கும் பொழுது நான் உறங்க விரும்பாவிட்டாலும் என் கண்கள் உறக்கத்தை விரும்புகின்றன; அச்சத்தைத் தரும் கூகை தன் குரலால் அலறுகிறது; நெல்லும் நீரும் சொரிந்து விரிச்சி கேட்கும் சிறந்த முதிய பெண்டிரின் சொற்களும் பொய்யாயின. துடியனே! பாணனே! பாடலில் சிறந்த விறலியே! நீங்கள் என்ன ஆவீர்களோ? நீங்கள் இரங்கத்தக்கவர்கள். இதுவரை இருந்ததுபோல் இனிமேல் இவ்விடத்து இருந்து வாழலாமென்பது உங்களுக்கு அரிது. நீராடிய பிறகு மொட்டைத் தலையில் இருந்து தெளிந்த நீர் ஒழுக, முன்பு இளமைக் காலத்தில் உடுத்திய அழகிய பசுமையான தழையாக உதவிய சிறிய வெள்ளாம்பலில் உண்டாகும் அல்லியரிசியை உண்டு, அணிகலன்கள் அணியாத கைம்பெண்கள் போலத் தலைவன் இறந்த பின்னர் வாழ்வதை நினைத்து வருந்தி இங்கு நான் உயிர் வாழ்வது அதனினும் அரிது.


சிறப்புக் குறிப்பு:
கணவன் உறக்கமில்லாமல் வருந்தும் பொழுது மனைவி உறங்காள். அதனால்தான், அவள் கண்களைத் “துஞ்சாக் கண்” என்று புலவர் குறிப்பிடுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

ஒன்றைப் பெறுவதற்காகக் கடவுளை வேண்டி வழிபடும்பொழுது, அங்கு யாராவது நற்சொற்களைக் கூறினால் வேண்டியது நடைபெறும் என்றும் நம்பிக்கைதரும் சொற்களை யாரும் கூறாவிட்டால், நினைத்தது நடைபெறாது என்றும் சங்க காலத்தில் மக்கள் நம்பினர். இந்த நம்பிக்கைக்கு “விரிச்சி” அல்லது “விரிச்சி கேட்டல்” என்று பெயர்.

No comments: