Tuesday, October 4, 2011

278. பெரிது உவந்தனளே!

278. பெரிது உவந்தனளே!

பாடியவர்: காக்கைபாடினியார் நச்செள்ளையார் (278). இவர் ஒரு பெண்பாற் புலவர் என்று கருதப்படுகிறது. இவரது இயற்பெயர் செள்ளை. கீரன் என்ற பெயருடையர் நக்கீரனார் என்றும் பூதன் என்ற பெயருடையர் நப்பூதனார் என்றும் சிறப்பித்து அழைக்கப்பட்டதைப் போல, இவர் பெயருக்கு முன் “ந” என்ற எழுத்தும், பெயரின் இறுதியில் “ஆர்” விகுதியும் சேர்த்து நச்செள்ளையார் என்று அழைக்கப்பட்டார்.
“விருந்து வருமாயின் கரைந்து காட்டுக; வாராதாயின் நடந்து காட்டுக.” என்று சிறுமிகள் பண்டைக்காலத்தில் தமிழகத்தில் காக்கையை நோக்கிப் பாடுவது வழக்கிலிருந்ததாகத் தெரிகிறது. இக்கருத்தை மையமாக வைத்து, இப்புலவர் குறுந்தொகையில் ஒரு பாடல் (210) இயற்றியுள்ளார். ஆகவே, இவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் என்று அழைக்கப்பட்டார். இவர், பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழ்ந்துபாடி, தொள்ளாயிரம் பலம் பொன்னும், நூறாயிரம் பொற்காசுகளும் பரிசாகப் பெற்றதாகக் கூறப்படுகிறது.

பாடலின் பின்னணி: ஒருகால், வீரன் ஒருவன் போரில் பகைவர்களால் வாளால் வெட்டப்பட்டு இறந்தான். அவன் உடல் பல துண்டுகளாக வெட்டப்பட்டுக் கிடந்தது. அவன் எவ்வாறு இறந்தான் என்று அறியாத பலர், அவனுடைய தாயிடம் சென்று, “உன் மகன் பகைவர்க்குப் புறமுதுகு காட்டிப் போரில் இறந்தான்.” என்று பொய்யாகக் கூறினர். அவள் வயதானவளாக இருந்தாலும், தன் மகன் புறமுதுகு காட்டி இறந்திருப்பானானால் அது தன் மறக்குலத்திற்கு இழுக்கு என்று கருதி, “ என் மகன் புறமுதுகு காட்டி இறந்திருப்பானானால், அவன் பால் குடித்த என் முலைகளை அறுத்தெறிவேன்.” என்று வஞ்சினம் உரைத்தாள். அதைக் கேட்ட புலவர் காக்கைபாடினியார் நச்செள்ளையார் அவள் வீரத்தை இப்பாடலில் வியந்து பாடுகிறார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: உவகைக் கலுழ்ச்சி. வாளால் புண்பட்ட உடம்பையுடைய கணவனைக் கண்டு மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடித்தல்; மகன் புண்ணுற்று இறந்தது கண்டு தாய் மகிழ்தல்.


நரம்புஎழுந்து உலறிய நிரம்பா மென்தோள்
முளரி மருங்கின் முதியோள் சிறுவன்
படைஅழிந்து மாறினன் என்றுபலர் கூற
மண்டமர்க்கு உடைந்தனன் ஆயின் உண்டஎன்
5 முலைஅறுத் திடுவென், யான்எனச் சினைஇக்
கொண்ட வாளொடு படுபிணம் பெயராச்
செங்களம் துழவுவோள் சிதைந்துவே றாகிய
படுமகன் கிடக்கை காணூஉ
ஈன்ற ஞான்றினும் பெரிதுஉவந் தனளே.

அருஞ்சொற்பொருள்:

1. உலறிய = வாடிய; நிரம்புதல் = மிகுதல். 2. முளரி = தாமரை; மருங்கு = விலாப்பக்கம். 3. அழிதல் = நிலைகெடுதல்; மாறுதல் = புறமுதுகிடுதல். 4. மண்டுதல் = நெருங்குதல்; அமர் = போர்; உடைதல் = தோற்றோடுதல். 5. சினைதல் = தோன்றுதல். 7. துழவுதல் = தேடிப்பார்த்தல். 8. காணூஉ = கண்டு.

கொண்டு கூட்டு: முதியோள் கேட்டுச் சினைஇ, பெயரா, துழவுவோள், கிடக்கை காணூஉப் பெரிதுவந்தனள் எனக் கூட்டுக.

உரை: நரம்புகள் தோன்றிய, வற்றிய மெலிந்த தோள்களையும், தாமரை இலை போன்ற வயிற்றையும் உடைய முதியவளிடம், அவள் மகன் பகைவரின் படையைக் கண்டு நிலைகுலைந்து, புறமுதுகு காட்டி இறந்தான் என்று பலரும் கூறினர். அதைக் கேட்ட அத்தாய், தீவிரமாக நடைபெற்ற போரைக்கண்டு அஞ்சி என் மகன் தோற்றோடி இறந்தது உண்மையானால், அவன் பால் உண்ட என் முலைகளை அறுத்திடுவேன் என்று, வாளைக் கையிலேந்திப் போர்களத்திற்குச் சென்றாள். அங்கே, குருதி தோய்ந்த போர்க்களத்தில், கீழே விழுந்து கிடந்த பிணங்களைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துத், தன் மகனின் உடலைத் தேடினாள். சிதைந்து பலதுண்டுகளாகிய விழுப்புண்பட்ட அவன் உடலைக் கண்டு, அவனைப் பெற்ற பொழுது அடைந்ததைவிட பெருமகிழ்ச்சி அடைந்தாள்.

சிறப்புக் குறிப்பு: முதுமையால் மேனி பசுமை குறைந்து, நரம்புகள் மேலெழுந்து தோன்றுவதால், “நரம்பெழுந்து உலறிய தோள்” என்று புலவர் குறிப்பிட்டதாகத் தோன்றுகிறது. பலரும் அவள் மகன் புறமுதுகுகாட்டி இறந்தான் என்று கூறினாலும், அத்தாய் அவர்கள் கூறியதை நம்பாமல், தானே போர்க்களத்திற்குச் செல்ல முடிவெடுத்தது அவள் தன் மகன் மீது வைத்த்திருந்த நம்பிக்கையைக் காட்டுகிறது.போர்க்களம் குருதி தோய்ந்திருந்ததால் “செங்களம்” என்று குறிப்பிடப்பட்டது. அவ்வீரன் விழுப்புண்பட்டு இறந்ததால் பெரும்புகழ் பெற்றதோடு மட்டுமல்லாமல் தன் குடியைப் பழியினின்று போக்கினான். அவன் தாய் பெருமகிழ்ச்சி அடைந்ததற்கு அதுவே காரணம் என்று தோன்றுகிறது.

No comments: