Monday, October 3, 2011

266. அறிவுகெட நின்ற வறுமை!

266. அறிவுகெட நின்ற வறுமை!

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 147-இல் காண்க.
பாடப்பட்டோன்: சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி. இம்மன்னனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 4-இல் காண்க.
பாடலின் பின்னணி: மிகவும் வறுமையில் வாடிய புலவர்களில் பெருங்குன்றூர் கிழாரும் ஒருவர். தன் வறுமைத் துன்பத்திலிருந்து விடுதலை பெற்று வளமான வாழ்க்கை வாழலாம் என்ற நோக்கத்தோடு அவர் சோழன் உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியைக் காணச் சென்றார். அவன் பெருங்குன்றூர் கிழாரின் புலமையைப் பாராட்டித் தன்னுடன் அவரைச் சிலகாலம் தங்க வைத்தான். அவர், தன் வறுமையை அவனுக்குப் பலமுறை குறிப்பாகக் கூறினார். ஆனால், சோழன் அவருக்குப் பரிசளிக்கவில்லை. முடிவாக, ஒருநாள், “அரசே, சான்றோர் அவையில் ஒருவன் சென்று தன் வறுமையைக் கூறி ஆதரவு கேட்டால், அவர்கள் அவனுக்கு விரைந்து உதவி செய்வார்கள். எனக்கு வேறு ஒரு குறையும் இல்லாவிட்டாலும், வறுமை மட்டும் என்னை வருத்துகிறது. விருந்தினரைக் கண்டால் அவர்களுக்கு ஒன்றும் அளிக்க முடியாததால் ஒளிந்து கொள்கிறேன். என் அறிவும் தடுமாற்றம் அடைகிறது.” என்று கூறினார். அதைக் கேட்ட சோழன் அவருக்குப் பரிசளித்து அவரை மகிழ்வித்தான். இப்பாடலில், பெருங்குன்றூர் கிழார் தன் வறுமையை சோழனுக்கு எடுத்துரைத்துத் தனக்குப் பரிசில் அளிக்குமாறு வேண்டுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.

துறை: பரிசில் கடாநிலை. பரிசில் விரும்பிப் புரவலரிடம் சென்று தன் விருப்பத்தைக் கூறுதல்.

பயங்கெழு மாமழை பெய்யாது மாறிக்
கயங்களி முளியும் கோடை ஆயினும்,
புழற்கால் ஆம்பல் அகலடை நீழல்
கதிர்கோட்டு நந்தின் சுரிமுக ஏற்றை
5 நாகுஇள வளையொடு பகல்மணம் புகூஉம்
நீர்திகழ் கழனி நாடுகெழு பெருவிறல்
வான்தோய் நீள்குடை, வயமான் சென்னி
சான்றோர் இருந்த அவையத்து உற்றோன்
ஆசாகு என்னும் பூசல்போல
10 வல்லே களைமதி அத்தை; உள்ளிய
விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்

அறிவுகெட நின்ற நல்கூர் மையே.

அருஞ்சொற்பொருள்:

1. பயம் = பயன்; கெழு = பொருந்திய; மா = பெரிய; மழை = மேகம். 2. கயம் = குளம்; களி = குழைவு; முளிதல் = வேதல். 3. புழல் = துளை; அடை = இலை. 4. கதிர் = ஒளிக்கதிர்; கோடு = கொம்பு; நத்து = நத்தை; சுரி = சுழற்சி (வளைவு); ஏற்றை = ஏறு = ஆண் விலங்கு (ஆண் நத்தை). 5. நாகு = இளமை, பெண்மை; வளை = சங்கு; புகூஉம் = கூடும். 6. திகழ்தல் = விளங்குதல்; கழனி = வயல்; கெழு = பொருந்திய; விறல் = வெற்றி. 7. வயம் = வலிமை; மான் = குதிரை. 9. ஆசு = பற்றுக்கோடு; பூசல் = பலர் அறிகை; பெரிதொலித்தல். 10. வல் = விரைவு; மதி – அசை; அத்தை – அசை; உள்ளல் = நினைத்தல். 11. திருந்துதல் = ஒழுங்காதல். 12. புணர்தல் = சேர்தல். 13. நல்கூர்மை = வறுமை.

கொண்டு கூட்டு: பெரு விறல், சென்னி, சான்றோர் இருந்த அவையத்து உற்றோன் பூசலை அவர் விரையக் களைந்தாற்போல எனது நல்கூர்மையை வல்லே களை எனக் கூட்டுக.

உரை: பயன் பொருந்திய பெரிய மேகம் மழை பெய்யாமல் இருப்பதால், குளங்களில் உள்ள குழம்பிய சேறு வெப்பமாய் இருக்கும் கோடைக் காலத்திலும் துளையுள்ள ஆம்பலின் அகன்ற இலையின் நிழலில் ஒளிக்கதிர் போன்ற கூர்மையான கொம்புகளையும் வளைந்த முகமும் உடைய ஆண் நத்தை இளம் பெண் சங்குடன் கூடும் நீர் விளங்கும் வயல்களுள்ள நாட்டையுடைய பெரிய வெற்றியுடையோய்! விண்ணைத் தொடும் நெடிய குடையும் வலிய குதிரையும் உடைய சென்னி! சான்றோர்கள் கூடியுள்ள அவையில் ஒருவன் சென்று, “ எனக்கு நீங்கள் ஆதரவு அளிக்க வேண்டும்” என்று ஆரவாரமாகக் கூறுவானாயின், அவர்கள் அவனுக்கு விரைந்து உதவி செய்வார்கள். அதைப் போல, என் வறுமையை நீ விரைவில் தீர்ப்பாயாக. என்னை நினைத்து வந்த விருந்தினரைக் கண்டதும் அவர்களுக்கு உதவ முடியாததால் ஒளிந்து வாழும் நன்மையில்லாத வாழ்க்கையையுடைய என் உடலில் ஐம்பொறிகளும் குறைவின்றி இருந்தாலும் என் வறுமை என் அறிவைக் கெடுக்கிறது.

No comments: