Monday, October 3, 2011

264. இன்றும் வருங்கொல்!

264. இன்றும் வருங்கொல்!

பாடியவர்: உறையூர் இளம்பொன் வாணிகனார். “இளம்பொன்” என்பது மாற்றுக் குறைந்த பொன்னைக் குறிக்கும் சொல். இப்புலவர், மாற்றுக் குறைந்த பொன் வாணிகத்தில் ஈடுபட்டிருந்ததால் இவர் இவ்வாறு அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் இயற்பெயர் தெரியவில்லை.

பாடலின் பின்னணி: ஒரு தலைவன், அவன் ஊரிலிருந்த பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவர்களிடமிருந்து அவற்றை மீட்டு வரும்போது போரில் இறந்தான். அவன் பெயரையும் பெருமையையும் பொறித்த நடுகல்லை, மயில் தோகையையும் பூமாலையையும் சூட்டி அலங்கரித்தனர். அவன் உயிரோடிருந்த பொழுது, பாணர்களுக்குப் பெருமளவில் உதவி செய்தவன். “அவன் நடுகல்லாகியது பாணர்களுக்குத் தெரியுமோ? தெரியாதோ? அவன் இறந்த செய்தி தெரியாமல் பாணர் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?” என்று இரங்கிப், புலவர் உறையூர் இளம்பொன் வாணிகனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்; கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
மரல்வகுந்து தொடுத்த செம்பூங் கண்ணியொடு
அணிமயிற் பீலி சூட்டிப், பெயர்பொறித்து
இனிநட் டனரே! கல்லும்; கன்றொடு
5 கறவை தந்து பகைவர் ஓட்டிய
நெடுந்தகை கழிந்தமை அறியாது
இன்றும் வருங்கொல், பாணரது கடும்பே.

அருஞ்சொற்பொருள்:

1. பரல் = கல்; மருங்கு = பக்கம்; பதுக்கை = மேடு. 2. மரல் = ஒருவகை நார் உள்ள மரம்; கண்ணி = மாலை. 3. அணி = அழகு; பீலி = மயில் தோகை.4. இனி = இப்பொழுது. 5. கறவை = பால் கொடுக்கும் பசு. 6. நெடுந்தகை = பெரியோன் (தலைவன்); கழிந்தமை = இறந்தது. 7. கடும்பு சுற்றம்.

உரை: கற்களுள்ள மேட்டுப்பக்கத்தின் அருகில், மரத்திலிருந்து பிரித்து எடுத்த நாரால் தொடுத்த சிவந்த பூக்களுடன் கூடிய மாலையையும் அழகிய மயில் தோகையையும் சூட்டி, அவன் பெயர் பொறித்துத் தலைவனுக்கு இப்பொழுது நடுகல் நட்டுவிட்டார்களே. கன்றுகளோடு பசுக்களையும் மீட்டு வந்த தலைவன் இறந்ததை அறியாது பாணர்கள் கூட்டம் இன்றும் அவனைக் காண வருமோ?

No comments: