269. கருங்கை வாள் அதுவோ!
பாடியவர்: அவ்வையார். இவரைபற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருதலைவன், பகைவருடைய ஆநிரைகளைக் கவர்வதற்குப் படை திரட்டினான். போருக்குப் போகுமுன் அங்கு ஒரு உண்டாட்டு நடைபெறுகிறது. அப்பொழுது, துடி என்னும் பறையை அடிப்பவன், அதை அடித்து, வீரர்களைப் போருக்குச் செல்லுமாறு அறிவிக்கிறான். வீரர்கள் அனைவர்க்கும் மீண்டும் மது வழங்கப்பட்டது. தலைவன் மது வேண்டாம் என்று கூறி, வாளைக் கொண்டு வருமாறு கூறினான். போரில் அவனை எதிர்த்தவர்களைக் கொன்று, தலைவன் ஆநிரைகளை வெற்றிகரமாகக் கவர்ந்து வந்தான். மீண்டும் உண்டாட்டு நடைபெற்றது. அதைக் கண்ட அவ்வையார், “முன்பு, நீ மது வேண்டா என்று கூறி வாளைக் கொண்டுவரச் சொல்லி, அந்த வாளோடு சென்று வெற்றி பெற்றாயே!” என்று அத்தலைவனை இப்பாடலில் பாராட்டுகிறார்.
திணை: வெட்சி. வீரர் அரசனுடைய ஆணையைப் பெற்றும், பெறாமலும், பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து வருதல்.
துறை: உண்டாட்டு. வீரர் மதுவையுண்டு மனங்களித்தலைக் கூறுதல்.
குயில்வாய் அன்ன கூர்முகை அதிரல்
பயிலாது அல்கிய பல்காழ் மாலை
மையிரும் பித்தை பொலியச் சூட்டிப்
புத்தகல் கொண்ட புலிக்கண் வெப்பர்
5 ஒன்றுஇரு முறையிருந்து உண்ட பின்றை
உவலைக் கண்ணித் துடியன் வந்தெனப்
பிழிமகிழ் வல்சி வேண்ட மற்றது
கொள்ளாய் என்ப கள்ளின் வாழ்த்திக்
கரந்தை நீடிய அறிந்துமாறு செருவின்
10 பல்லான் இனநிரை தழீஇய வில்லோர்க்
கொடுஞ்சிறைக் குரூஉப்பருந்து ஆர்ப்பத்
தடிந்துமாறு பெயர்த்ததுஇக் கருங்கை வாளே.
அருஞ்சொற்பொருள்:
1. முகை = மலரும் பருவத்தரும்பு (மொட்டு); அதிரல் = காட்டு மல்லிகைக் கொடி. 2. பயில்தல் = நெருங்குதல்; அல்கிய = அமைந்த; காழ் = விதை. 3. இரும் = பெரிய; மை = கரிய; பித்தை = குடுமி. 4. புத்தகல் = புதிய அனன்ற கலம்; வெப்பர் = வெப்பமான மது (முதிர்ந்த மது). 5. பின்றை = பிறகு. 6. உவலை = தழை; துடி = ஒரு வகைப் பறை. 7. மகிழ் = மது; வல்சி = உணவு. 9. கரந்தை = பசுக்களை மீட்டல்;. 10. பல்லான் = பல்+ஆன் = பல பசுக்கள்; தழீஇய = சூழ்ந்த. 11. கொடுஞ்சிறை = வளைந்த சிறகு; குரூஉ = நிறம்; ஆர்த்தல் = ஒலித்தல். 12. தடிந்து = அழித்து; மை = வலிமை.
கொண்டு கூட்டு:
உரை: குயிலின் அலகு போன்ற கூர்மையான மொட்டுக்களையுடைய காட்டு மல்லிகைக் கொடியில் உள்ள பூக்களோடும், விதைகளோடும் நெருக்கமாகத் தொடுக்கப்படாத மாலையை கரிய பெரிய தலை முடியில் அழகுடன் சூடி, புதிய அகன்ற கலத்தில், புலியின் கண்போன்ற நிறத்தையுடைய மதுவை இரண்டுமுறை இங்கே இருந்து நீ உண்ட பின், பசிய இலைகளைக் கலந்து தொடுத்த மாலையை அணிந்த துடி கொட்டுபவன் அதைக் கொட்டி “போர் வந்தது” என்று அறிவித்தான். அதைக் கேட்டவுடன், பிழிந்த மதுவாகிய உணவை உண்ணுமாறு உன்னை வேண்டியும், நீ அது வேண்டா என்று கூறி, மதுவை வாழ்த்தி, வாளை ஏந்திப், பசுக்களை மீட்பதற்கு வந்த வீரர்கள் மறைந்திருப்பதை அறிந்து, வளைந்த சிறகையும், ஒளிபொருந்திய நிறத்தையும் உடைய பருந்துகள் ஆரவாரிக்குமாறு அவர்களைக் கொன்றது வலிய உன் கையில் உள்ள இவ்வாள் தானே.
No comments:
Post a Comment