Monday, October 10, 2011

285. தலைபணிந்து இறைஞ்சியோன்!

285. தலைபணிந்து இறைஞ்சியோன்!

பாடியவர்: அரிசில் கிழார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 146 – இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், ஒரு தலைவனுக்கும் அவன் பகைவர்களுக்கும் இடையே போர் நடைபெற்றுக்கொண்டிருந்தது. பகைவர் எறிந்த வேல் அவன் மார்பில் பாய்ந்தது. தலைவனின் நிலைமையை வீரன் ஒருவன் பாசறைக்குத் தெரிவித்தான். அவ்வீரன் அச்செய்தியைத் தெரிவிக்கும் பொழுது, “பாசறையில் உள்ளவர்களே! நம் தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது. அவன் கேடயம் பாணனின் கையில் உள்ளது. பகைவர் எறிந்த வேல் அவன் மார்பை ஊடுருவியது; அவன் நிலத்தில் வீழ்ந்தான். சான்றோர் பலரும் அவனைச் சூழ்ந்து நின்று தலைவனைப் பாராட்டினர். அவர்களின் பாராட்டுக்களைக் கேட்டு அவன் நாணித் தலைகுனிந்தான்.” என்று அறிவித்தான். இதைக் கேட்ட அரிசில் கிழார் இப்பாடலை இயற்றியுள்ளார். இப்பாடலில் சில பகுதிகள் கிடைக்கவில்லை.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தலைப் பற்றிய பாடல்கள் வாகைத் திணையில் அடங்கும்.

துறை: சால்பு முல்லை. சான்றோர்களின் சால்பைக் கூறுதல்.


பாசறை யீரே! பாசறை யீரே!
துடியன் கையது வேலே; அடிபுணர்
வாங்குஇரு மருப்பின் தீந்தொடைச் சீறியாழ்ப்
பாணன் கையது தோலே; காண்வரக்
5 கடுந்தெற்று மூடையின் ………..
வாடிய மாலை மலைந்த சென்னியன்
வேந்துதொழில் அயரும் அருந்தலைச் சுற்றமொடு
நெடுநகர் வந்தென விடுகணை மொசித்த
மூரி வெண்டோள் ……..
10 சேறுபடு குருதிச் செம்மலுக் கோஒ!
மாறுசெறு நெடுவேல் மார்புளம் போக
நிணம்பொதி கழலொடு நிலஞ்சேர்ந் தனனே.
அதுகண்டு, பரந்தோர் எல்லாம் புகழத் தலைபணிந்து
இறைஞ்சி யோனே குருசில் பிணங்குகதிர்
15 அலமரும் கழனித் தண்ணடை ஒழிய
இலம்பாடு ஒக்கல் தலைவற்குஓர்
கரம்பைச் சீறூர் நல்கினன் எனவே.

அருஞ்சொற்பொருள்:

1. பாசறை = படை தங்குமிடம். 2. துடியன் = துடி என்னும் பறையை அடிப்பவன்; புணர் = சேர்த்த. 3. வாங்கு = வளைவு; இரு = கரிய, மருப்பு = யாழின் தண்டு; தொடை = யாழின் நரம்பு. 4. தோல் = கேடயம். 5. கடுதல் = மிகுதல்; தெற்று = அடைப்பு; மூடை = மூட்டை. 6. மலைதல் = அணிதல்; சென்னி = தலை. 7. அயர்தல் = செய்தல். 8. மொசித்தல் = மொய்த்தல். 9. மூரி = வலிமை; 10. உகு = சொரி, உதிர். 11. செறுதல் = சினங்கொள்ளுதல். 13. பரந்தோர் = பரந்த அறிவுடைய சான்றோர். 14. இறைஞ்சுதல் = தாழ்தல், வணங்குதல், கவிழ்தல்; குருசில் = குரிசில் = தலைவன்; பிணங்குதல் = பின்னுதல். 15. அலமரல் = அசைதல்; தண்ணடை = மருத நிலத்தூர். 16. இலம்பாடு = வறுமை; ஒக்கல் = சுற்றம். 17. கரம்பை = சாகுபடி செய்யக்கூடிய நிலம்; நல்குதல் = அளித்தல்.

கொண்டு கூட்டு: பாசறை யீரே, துடியன் கையது வேல், பாணன் கையது தோல்; சென்னியன், செம்மல், நிலம் சேர்ந்தனன்; கண்டு, எல்லாம் நல்கினன் எனப் புகழ, குருசில், இறைஞ்சியோன் எனக் கூட்டுக.

உரை: பாசறையில் உள்ளவர்களே! பாசறையில் உள்ளவர்களே! தலைவனின் வேல் துடியனின் கையில் உள்ளது; அவன் கேடயம், யாழின் அடியில் இணைக்கப்பட்ட வளைந்த கரிய தண்டோடு, இனிய இசையை எழுப்பும் நரம்புகளுடன் கூடிய சிறிய யாழையுடைய பாணனின் கையில் உள்ளது. மிகவும் நெருக்கமாக அடுக்கிய மூட்டைகள் போல … வாடிய மாலை அணிந்த தலைவன், வேந்தனுக்கு வேண்டிய செயல்களைச் செய்யும் அரிய சுற்றத்தாரோடு நெடிய அரண்மனைக்கு வந்தான். பகைவர்கள் எய்த அம்புகள் மொய்த்த வலிய தோள்…. நிலத்தைச் சேறாக்கும் குருதி சொரிந்தான். ஐயோ! பகைவர்கள் சினத்துடன் எறிந்த நெடிய வேல் அவன் மார்பை ஊடுருவிப் புதைந்து நின்றது. பிணங்களிடையே நின்று போர்புரிதலால், மாமிசம் படிந்த கழலுடன் நிலத்தில் வீழ்ந்தான். அவன் வீழ்ந்ததைக் கண்டு, அங்கிருந்த சான்றோரெல்லாம், “கதிர்கள் தம்முள் பின்னிக்கொண்டு அசையும் நெற்கழனிகளையுடைய மருதநிலத்தூர்களை முன்னே இரவலர்க்குக் கொடுத்தான். இரவலராகிய சுற்றத்தின் தலைவனுக்கு எஞ்சியிருந்த, சாகுபடி செய்யக்கூடிய நிலத்தைப் பரிசாகக் கொடுத்தான்.” என்று புகழ்ந்தார்கள். அதைக் கேட்ட தலைவன் நாணித் தலைகுனிந்தான்.

No comments: