Monday, October 10, 2011

286. பலர்மீது நீட்டிய மண்டை!

286. பலர்மீது நீட்டிய மண்டை!

பாடியவர்: ஔவையார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒரு அரசன் பகைவரோடு போரிட்டுக் கொண்டிருந்தான். அவனுடைய படையில் இருந்த வீரர்கள் பலர் இறந்தனர். ஒரு வீரனின் தாய், அரசனுக்குத் துணையாகப் போரிட்டு இறக்கும் பேறு தன் மகனுக்குக் கிடைக்கவில்லையே என்று தன் ஏமாற்றத்தைத் தெரிவிப்பதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: வேத்தியல். வீரர்கள் அரசனுடைய பெருமையைக் கூறுதல்.


வெள்ளை வெள்யாட்டுச் செச்சை போலத்
தன்னோர் அன்ன இளையர் இருப்பப்
பலர்மீது நீட்டிய மண்டைஎன் சிறுவனைக்
கால்கழி கட்டிலிற் கிடப்பித்
5 தூவெள் அறுவை போர்ப்பித் திலதே!

அருஞ்சொற்பொருள்:

1. செச்சை = கடா (கிடாய்). 3. மண்டை = இரப்போர் கலம் (மண்டை என்ற சொல் கள் குடிக்கும் பாத்திரத்தையும் குறிக்கும். இது கள்ளுக்கு ஆகுபெயராக வந்துள்ளது). 4. கால்கழி கட்டில் = காலில்லாத கட்டில் (பாடை). 5. அறுவை = சீலை, ஆடை.

கொண்டு கூட்டு: மண்டை என் சிறுவனைப் போர்ப்பித்திலது எனக் கூட்டுக.

உரை: வெண்மையான நிறத்தையுடைய வெள்ளாட்டுக் கிடாய்கள் போலத் தன்னைப் போன்ற இளைஞர்கள் பலர் இருக்கவும், அவர்களுக்கு மேலாக என் மகனுக்குத் தரப்பட்ட கள், என் மகனைப் பாடையில் இருக்கச் செய்து தூய வெண்ணிறப் போர்வையால் போர்த்தும் நிலையைத் தரவில்லையே.

சிறப்புக் குறிப்பு: ஆடுகள் ஒன்றை ஒன்றுத் தொடர்ந்து பின் செல்வது போல், வேந்தனைப் பின் தொடர்ந்து செல்லும் வீரர்களின் ஒற்றுமையை ஒளவையார், “வெள்ளை வெள்யாட்டுச் செச்சை” என்று குறிப்பிடுகிறார். அரசனுக்காகப் போராடிப், போர்க்களத்தில் விழுப்புண்பட்டு இறப்பதுதான் வீரனுக்குப் புகழ்தரும் செயல் என்பதை இப்பாடல் மறைமுகமாகக் கூறுகிறது. மகன் இறக்காததால் தாய் ஏமாற்றமடைந்தாள் என்று நேரிடையாகப் பொருள் கொள்வது சிறந்ததன்று.

இப்பாடல் கரந்தைத் திணையையும் வேத்தியல் துறையையும் சார்ந்ததாக நூல்கள் கூறுகின்றன. ஆனால், இப்பாடலின் பொருளை ஆராய்ந்து பார்த்தால், இப்பாடல் கரந்தைத் திணையையும் வேத்தியல் துறையையும் சார்ந்ததாகக் கருதுவதற்குத் தகுந்த காரணங்கள் இருப்பதாகத் தெரியவில்லை.

No comments: