Tuesday, October 4, 2011

270. ஆண்மையோன் திறன்!

270. ஆண்மையோன் திறன்!

பாடியவர்: கழாத்தலையார். இவரைப்பற்றிய குறிப்புக்களைப் பாடல் 62-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஓரூரில் இருந்த பசுக்களைப் பகைவர் கவர்ந்து சென்றனர். அதை மீட்பதற்கு அவ்வூர் வீரர்கள் கரந்தைப் பூச்சூடி போருக்குச் சென்றனர். அவ்வீரர்களில் ஒருவன் கோடரியால் வெட்டப்பட்டு வீழ்த்தப்பட்ட மரம் போல இறந்து விழுந்து கிடந்தான். அவன் விழுந்து கிடப்பதைச் சான்றோர் சூழ, வேந்தன் சென்று கண்டு வியந்து பாராட்டிக் கண்ணீர் வடித்தான். அதைக் கண்ட புலவர் கழாத்தலையார், அக்காட்சியை அவ்வீரனின் தாய்க்குக் கூறுவதுபோல் இப்பாடல் அமைந்துள்ளது.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்; கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

பன்மீன் இமைக்கும் மாக விசும்பின்
இரங்கு முரசின், இனம்சால் யானை
நிலந்தவ உருட்டிய நேமி யோரும்
சமங்கண் கூடித் தாம்வேட் பவ்வே
5 நறுவிரை துறந்த நாறா நரைத்தலைச்
சிறுவர் தாயே! பேரிற் பெண்டே!
நோகோ யானே; நோக்குமதி நீயே;
மறப்படை நுவலும் அரிக்குரல் தண்ணுமை
இன்னிசை கேட்ட துன்னரும் மறவர்
10 வென்றிதரு வேட்கையர், மன்றம் கொண்மார்
பேரமர் உழந்த வெருவரு பறந்தலை
விழுநவி பாய்ந்த மரத்தின்
வாண்மிசைக் கிடந்த ஆண்மையோன் திறத்தே.

அருஞ்சொற்பொருள்:

1. பன்மீன் = பல்+மீன்; மீன் = விண்மீன்; மாக = வானம், ஆகாயம், மேலிடம்; விசும்பு = ஆகாயம்; இமைக்கும் = ஒளிவிடும். 2. இரங்கல் = ஒலித்தல்; இனம் = கூட்டம்; சால் = நிறைவு, மிகுதி. 3. தவ = மிக ( நீண்ட காலமாக); நேமி = ஆட்சிச் சக்கரம். 4. சமம் = போர்; வேட்பு = விருப்பம். 4. நறுமை = நன்மை; விரை = மணம், மணமுள்ள பொருள். 7. ஓ, மதி – அசை நிலை. 8. நுவலுதல் = சொல்லுதல். 9. துன்னுதல் = நெருங்குதல். 11. வெரு = அச்சம்; பறந்தலை = போர்க்களம். 12. நவி = கோடரி; மிசை = மேல்; திறம் = திறமை.

கொண்டு கூட்டு: தாயே! பெண்டே! யான் நோகு, நீயே நோக்கு; மறவர் வேட்கையராய் மன்றம் கொண்மார், உழந்த பறந்தலையில், வாண்மிசைக்கிடந்த ஆண்மையோன் திறத்து நேமியோரும் வேட்ப எனக் கூட்டுக.

உரை: நறுமணப் பொருள்களைத் துறந்தமையால் நறுமணம் கமழாத, நரைத்த தலையையுடைய பெருங்குடிப் பெண்ணே! இளைய வீரனுக்குத் தாயே! பல விண்மீன்கள் ஒளிரும் உயர்ந்த வானத்தில் முழங்கும் முரசு கொட்டுவோரும், யானைக் கூட்டத்தைச் செலுத்துவோரும், நில உலகில் நெடுங்காலம் ஆட்சிச் சக்கரத்தைச் செலுத்தும் வேந்தரும் போர்க் களத்தில் ஒன்று கூடி அன்பால் வருந்தி நின்றனர். இங்கு நடந்ததை நினைத்து நான் வருந்துகிறேன். வீரர்களைப் போர்க்கழைக்கும் போர்ப்பறையின் இனிய ஓசையைக் கேட்ட, பகைவர்களால் நெருங்குதற்கரிய மறவர், வெற்றிபெறும் வேட்கையுடன் போர்க்களத்தைத் தமதாக்கிக் கொள்வதற்காகப், பெரும் போரைச் செய்த அச்சம்தரும் போர்க்களத்தில், பெரிய கோடரியால் வெட்டப்பட்டு விழுந்த மரம்போல் வாளின்மேல் விழுந்து கிடந்த, ஆண்மையுடைய உன் மகனின் ஆற்றலை நீயே பார்ப்பாயாக.

சிறப்புக் குறிப்பு: படைச் செருக்கு என்னும் அதிகாரத்தில், வேந்தனின் கண்களில் நீர் பெருகுமாறு வருந்துமளவுக்கு வீரத்தோடு போர் புரிந்து அப்போரில் இறக்கும் வாய்ப்பு ஒரு வீரனுக்குக் கிடைக்குமானால் அது கெஞ்சிக் கேட்டும் பெற்றுக் கொள்ளத் தக்க பெருமையுடையது என்ற கருத்தை,

புரந்தார்கண் நீர்மல்கச் சாகிற்பின் சாக்காடு

இரந்துகோள் தக்க துடைத்து. (குறள் – 780)

என்ற குறளில் வள்ளுவர் கூறுகிறார். இப்பாடலில் குறிப்பிடப்பட்டிருக்கும் வீரன் இறந்த பிறகு, வேந்தனும் அன்புடன் வருந்தினான் என்று புலவர் கழாத்தலைவர் கூறுவது வள்ளுவர் கருத்தோடு ஒப்பு நோக்கத் தக்கது.

No comments: