275. தன் தோழற்கு வருமே!
பாடியவர்: ஒரூஉத்தனார் (275). தன் தோழன் ஒருவனுக்கு உதவ ஓடிவரும் ஒருத்தனைப் புகழ்ந்து பாடியதால் இவர் ஒரூஉத்தன் என்ற பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. சங்க இலக்கியத்தில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணி: வீரன் ஒருவன், பகைவர்களால் சூழப்பட்ட தன்னுடைய தோழனுக்கு உதவுவதற்காகப் பகைவரை எதிர்த்து, விரைந்து சென்று அவனைக் காப்பற்றுவதைப் பாராட்டும் வகையில் இப்பாடலை ஒரூஉத்தனார் இயற்றியுள்ளார்.
திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.
துறை: எருமை மறம். படைவீரர் முதுகிட்ட நிலையிலும், தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் எதிரிட்டு நிற்றல்.
கோட்டம் கண்ணியும் கொடுந்திரை ஆடையும்
வேட்டது சொல்லி வேந்தனைத் தொடுத்தலும்
ஒத்தன்று மாதோ இவற்கே: செற்றிய
திணிநிலை அலறக் கூழை போழ்ந்து தன்
5 வடிமாண் எஃகம் கடிமுகத்து ஏந்தி
ஓம்புமின்; ஓம்புமின்; இவண்என ஓம்பாது
தொடர்கொள் யானையின் குடர்கால் தட்பக்
கன்றுஅமர் கறவை மான
முன்சமத்து எதிர்ந்ததன் தோழற்கு வருமே.
அருஞ்சொற்பொருள்
1. கோட்டம் = வளைவு; கண்ணி = தலையில் அணியும் மாலை; கொடு = வளைவு; திரை = திரைச்சீலை;. 2. வேட்டது = விரும்பியது. 3. ஒத்தன்று = ஒத்தது (பொருந்தியுள்ளது); செற்றம் = மன வயிரம், சினம், கறுவு. 4. திணி = திண்மை; திணிநிலை = போர்க்களத்தின் நடுவிடம்; கூழை = பின்னணிப் படை; போழ்தல் = பிளத்தல். 5. வடித்தல் = திருத்தமாகச் செய்தல்; எஃகம் = வேல், வாள், எறி படை; கடி = கூர்மை. 6. ஓம்புதல் = பாதுகாத்தல். 7. தொடர் = சங்கிலி; குடர் = குடல்; தட்ப = தடுக்க. 8. அமர் = விருப்பம்; மான – உவமைச் சொல்; முன்சமம் = முன்னணிப்படை.
கொண்டு கூட்டு: தோழற்கு வருமாகலின், இவற்கே ஒத்தன்று எனக் கூட்டுக.
உரை: வளைந்த மாலையும், வளைத்துக் கட்டப்பட்ட ஆடையும், அரசன் விரும்புவதைக் கூறி அவனைத் தன் வசப்படுத்தும் இயல்பும் இவனிடம் பொருந்தியுள்ளன. மனவலிமையையுடன் போர்புரியும் படைவீரர்கள் அஞ்சி அலறப் படையைப் பிளந்துகொண்டு தான் செல்லும் திசையை நோக்கி, நன்கு செய்யப்பட்ட, சிறந்த, கூரிய வேலின் இலைமுகத்தை ஏந்திச் செல்கிறான். “இவனை இங்கேயே தடுத்து நிறுத்துங்கள்.” என்று வீரர்கள் கூறித் தடுத்தாலும், அவர்கள் தடுப்பதைக் கடந்து, தளைபூட்டப்பட்ட யானைபோல், இறந்த வீரர்களின் குடல்கள் காலைத் தடுக்க, தன் கன்றை விரும்பும் பசுவைப் போல் பகைவரின் முன்னணிப் படையிரனால் சூழப்பட்டிருக்கும் தன் தோழனைக் காப்பாற்றச் செல்கிறான்.
No comments:
Post a Comment