273. கூடல் பெருமரம்!
பாடியவர்: எருமை வெளியனார் (273). இவரது இயற்பெயர் வெளியன். சங்க காலத்தில், மைசூர் நகரம் எருமையூர் என்று அழைக்கப்பட்டது. இவர் எருமையூரைச் சார்ந்தவராதலால் எருமை வெளியனார் என்று அழைக்கப்பட்டார். இவர் பாடிய பாடல் அகநானூற்றிலும் ஒன்று (73) உள்ளது.
பாடலின் பின்னணி: ஒருகால், வீரன் ஒருவன் தும்பைப் பூவை அணிந்து பகைவருடன் போரிடுவதற்காகக், குதிரையில் சென்றான். அவனோடு போருக்குச் சென்ற வீரர்கள் அனைவரும் தங்கள் ஊருக்குத் திரும்பினர். ஆனால், அந்த வீரன் மட்டும் திரும்பி வரவில்லை. அதனால், கலக்கமுற்ற அந்த வீரனின் மனைவி, தன் கணவனின் குதிரை மட்டும் இன்னும் வரவில்லையே என்று புலம்புகிறாள். அதைக் கண்ட புலவர் எருமை வெளியனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.
திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.
துறை: குதிரை மறம்.குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவன் குதிரையின் வீரத்தையோ கூறுதல்.
மாவா ராதே; மாவா ராதே;
எல்லார் மாவும் வந்தன; எம்இல்
புல்லுளைக் குடுமிப் புதல்வற் றந்த
செல்வன் ஊரும் மாவா ராதே;
5 இருபேர் யாற்ற ஒருபெருங் கூடல்
விலங்கிடு பெருமரம் போல,
உலந்தன்று கொல்அவன் மலைந்த மாவே.
அருஞ்சொற்பொருள்
1. மா = குதிரை; 3. உளை = பிடரி மயிர்; புல் உளை = சிறிதளவே உள்ள பிடரி மயிர். 6. விலங்குதல் = குறுக்கிடுதல் (குறுக்கே நிற்றல்). 7. உலத்தல் = அழித்தல்; உலந்தன்று = அழிந்தது; மலைத்தல் = போரிடல்.
கொண்டு கூட்டு: எல்லார் மாவும் வந்தன; செல்வனூரும் மாவாராது; ஆகலான் அவன் மலைந்த மா உலந்தன்று கொல் எனக் கூட்டுக.
உரை: குதிரை வரவில்லையே! குதிரை வரவில்லையே! மற்ற வீரர்கள் அனைவருடைய குதிரைகளும் வந்தன. எம் வீட்டில் உள்ள (சிறிதளவே குடுமியுள்ள) இளமகனைத் தந்த என் கணவன் ஊர்ந்து சென்ற குதிரை வரவில்லையே! இரண்டு பெரிய ஆறுகள் கூடும் பெரிய இடத்தில் குறுக்கே நின்ற பெருமரம் போல், அவன் ஊர்ந்து சென்று போரிட்ட குதிரை சாய்ந்ததோ?
சிறப்புக் குறிப்பு: “புல்லுளைக் குடுமி” என்பது இளம் சிறுவன் என்பதைக் குறிக்கிறது. பெற்றோர்க்கு, அவர்களின் புதல்வர் செல்வம் என்று கருதப்படுவதால், புதல்வனைப் பெற்ற தந்தையை, “புதல்வன் தந்த செல்வன்” என்று புலவர் குறிப்பிடுகிறார். இருபெரும் ஆறுகளின் இடையே நிற்கும் மரம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும், அது காலப்போக்கில் வேருடன் சாய்வது உறுதி. அதனால்தான், புலவர் “விலங்கிடு பெருமரம் போல” என்று கூறுவதாகத் தோன்றுகிறது.
No comments:
Post a Comment