Tuesday, October 4, 2011

276. குடப்பால் சில்லுறை!

276. குடப்பால் சில்லுறை!

பாடியவர்: மாதுரைப் பூதன் இளநாகனார் (276). இவர் மதுரையில் வாழ்ந்த பூதன் என்பவரின் மகனாதலால் இவ்வாறு அழைக்கப்பட்டார். இவர் இயற்பெயர் இளநாகன். மதுரை மருதன் இளநாகனார் என்ற புலவரிடமிருந்து இவரை வேறுபடுத்துவதற்காக, இவர் மதுரைப் பூதன் இளநாகனார் என்று அழைக்கப்பட்டார். இவர் இயற்றியதாக சங்க இலக்கியத்தில் உள்ள பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணி: ஒருகால், இரு வேந்தர்களிடையே போர் நடைபெற்றது. அப்போரில், ஒரு படைவீரன், பகைவருடைய படை முழுவதையும் கலக்கிப் போரில் வெற்றி பெற்றுக்கொண்டிருப்பதைக் கண்ட புலவர் மதுரைப் பூதன் இளநாகனார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: தானை நிலை. இரு திறத்தாரும் தன் வீரத்தைப் புகழுமாறு ஒரு வீரன் போர்க்களத்தில் சிறப்பெய்துதல்.

நறுவிரை துறந்த நரைவெண் கூந்தல்
இரங்காழ் அன்ன திரங்குகண் வறுமுலைச்
செம்முது பெண்டின் காதலஞ் சிறாஅன்
மடப்பால் ஆய்மகள் வள்உகிர்த் தெறித்த
5 குடப்பால் சில்லுறை போலப்
படைக்குநோய் எல்லாம் தான்ஆ யினனே.

அருஞ்சொற்பொருள்

1. நறுமை = நன்மை; விரை = மணமுள்ள பொருள்; துறந்த = நீங்கிய. 2. காழ் = விதை; இரங்காழ் = இரவ மரத்தின் விதை; திரங்குதல் = சுருங்குதல்; உலர்தல்; வறு = வற்றிய. 4. மடம் = இளமை; பால் = இயல்பு; ஆய் = இடையர்; வள் = வளம்; உகிர் = நகம். 5. உறை = பிரைமோர். 6. நோய் = துன்பம்.

கொண்டு கூட்டு: முதுபெண்டின் சிறாஅன், குடப்பால் சில்லுறைபோலத் தானாயினன் எனக் கூட்டுக.

உரை: நல்ல மணமுள்ள பொருள்களைப் பயன்படுத்தாத, நரைத்த, வெண்மையான கூந்தலையும், இரவமரத்தின் விதைபோன்ற வற்றிய முலையையும் உடைய சிறந்த முதியவளுடைய அன்புச் சிறுவன், இளம் இடைக்குலப் பெண் ஒருத்தி ஒரு குடப்பாலில் தன் (சிறிய) நகத்தால் தெளித்த சிறிய உறைபோலப் பகைவரின் படைக்குத் தானே துன்பம் தருபவனாயினன்.

சிறப்புக் குறிப்பு: ஓரு குடம் பாலில் சிறிதளவே பிரைமோர் இட்டாலும், பால் தன் நிலையிலிருந்து மாறிவிடும். அதுபோல், இவ்வீரன், தனி ஒருவனாகவே, பகைவரின் படையை நிலைகலங்கச் செய்தான் என்று புலவர் கூறுவதாகத் தோன்றுகிறது.

No comments: