Monday, October 3, 2011

265. வென்றியும் நின்னோடு செலவே!

265. வென்றியும் நின்னோடு செலவே!

பாடியவர்: சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 181-இல் காண்க.
பாடலின் பின்னணி: தலைவன் ஒருவன் பரிசிலர்க்குப் பெருமளவில் உதவி செய்து அவர்களைப் பாதுகாத்துவந்தான். அவன், தன் வேந்தர்களுக்குத் துணையாகப் போர்புரிந்து அவர்களை வெற்றிபெறச் செய்தான். இவ்வாறு பரிசிலர்களைப் பாதுகாத்து, வேந்தர்களுக்கு உறுதுணையாக இருந்த, வண்மையும் வலிமையும் மிகுந்த தலைவன் இறந்து இப்பொழுது நடுகல்லாகிய நிலையைக் கண்டு மனங்கலங்கி சோணாட்டு முகையலூர்ச் சிறுகருந்தும்பியார் இப்பாடலை இயற்றியுள்ளார்.

திணை: கரந்தை. பகைவரால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல்.

துறை: கையறு நிலை. தலைவன் இறந்த பின்னர் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்; கழிந்து போன பொருளைக் குறித்து வருந்துதல்.

ஊர்நனி இறந்த பார்முதிர் பறந்தலை
ஓங்குநிலை வேங்கை ஒள்ளிணர் நறுவீப்
போந்தைஅம் தோட்டின் புனைந்தனர் தொடுத்துப்
பல்லான் கோவலர் படலை சூட்டக்
5 கல்ஆ யினையே கடுமான் தோன்றல்!
வான்ஏறு புரையும்நின் தாள்நிழல் வாழ்க்கைப்
பரிசிலர் செல்வம் அன்றியும் விரிதார்க்
கடும்பகட்டு யானை வேந்தர்
ஒடுங்க வென்றியும், நின்னொடு செலவே.

அருஞ்சொற்பொருள்:

1. நனி = மிக; இறந்த = கடந்த; பார் = நிலம், பாறை; முதிர்தல் = சூழ்தல்; பறந்தலை = பாலை நிலம், பாழிடம். 2. வேங்கை = வேங்கை மரம்; ஒள் = ஒளி; இணர் = பூங்கொத்து; நறுமை = மணம்; வீ = பூ. 3. போந்தை = பனை; தோடு = இளம் குருத்து ஓலை; புனைதல் = அலங்கரித்தல், செய்தல். 4. பல்லான் = பல்+ஆன்; ஆன் = பசு; கோவலர் = இடையர்; படலை = மாலை. 5. கல் = நடுகல்; கடு = விரைவு; மான் = குதிரை; தோன்றல் = தலைவன். 6. வான் = மழை, ஆகாயம்; ஏறு = இடி; புரை – ஓர் உவமை உருபு; தாள் = கால் அடி. 7. தார் = மாலை. 8. பகடு = வலிமை; கடு = விரைவு. 9. வென்றி = வெற்றி; ஒடுங்கா வென்றி = குறையாத வெற்றி.

கொண்டு கூட்டு: தோன்றல், பரிசிலர் செல்வம் அன்றியும் வேந்தர் வென்றியும், நின்னொடு செலவே எனக் கூட்டுக.

உரை: விரைந்து செல்லும் குதிரைகளையுடைய தலைவனே! ஊரிலிருந்து வெகு தொலைவில், பாறைகள் சூழ்ந்த பாழிடத்தில், ஓங்கி உயர்ந்த வேங்கை மரத்தின் ஒளிபொருந்திய பூங்கொத்துகளைப் பனங்குருத்துக்களோடு சேர்த்துத் தொடுத்த மாலையைப் பல பசுக்களையுடைய இடையர்கள் சூட்டி வழிபடும் நடுகல்லாயினாயே! மழையுடன் தோன்றும் இடிபோன்ற வலிமையும், வண்மையும் உடைய உன் அடி நிழலில் வாழும் பரிசிலர்களின் செல்வம் மட்டுமல்லாமல் மலர்ந்த மலர்களாலாகிய மாலையணிந்த, விரைந்து செல்லும் வலிமையுடைய யானைகளையுடைய வேந்தர்களின் குறையாத வெற்றியும் உன் இறப்பால் உன்னுடன் மறைந்தனவே.

No comments: