Tuesday, October 4, 2011

281. நெடுந்தகை புண்ணே!

281. நெடுந்தகை புண்ணே!

பாடியவர்: அரிசில் கிழார். இவரைப்பற்றிய குறிப்புக்களைப் பாடல் 146-இல் காண்க.
பாடலின் பின்னணி: ஒருகால், அரிசில் கிழார், போரில் புண்பட்ட தலைவன் ஒருவனைக் காணச் சென்றார். அங்கே, அத்தலைவனின் மனைவி, அவனுடைய புண்களை ஆற்றுவதற்கு பல செயல்களைச் செய்கிறாள். மற்றும், தலைவனின் புண்களை ஆற்றுவதற்குத் துணைபுரியுமாறு அவள் தன் தோழிகளைத் அழைக்கிறாள். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சிகளை அரிசில் கிழார் இப்பாடலில் தொகுத்துக் கூறுகிறார்.

காஞ்சித்திணை: பகையரசன் போருக்கு வந்துவிட ஓரரசன் காஞ்சிப் பூவைச் சூடித் தன்னிடத்தைப் பாதுகாத்தல்.

துறை: தொடாக் காஞ்சி. பேய்கள் அஞ்சி நீங்குமாறு புண்பட்டு வீழ்ந்த வீரனுடைய மனைவி அவனைக் காத்தல்.

தீங்கனி இரவமொடு வேம்புமனைச் செரீஇ
வாங்குமருப் பியாழொடு பல்இயம் கறங்கக்
கைபயப் பெயர்த்து மைஇழுது இழுகி
ஐயவி சிதறி ஆம்பல் ஊதி
5 இசைமணி எறிந்து, காஞ்சி பாடி
நெடுநகர் வரைப்பின் கடிநறை புகைஇக்
காக்கம் வம்மோ காதலந் தோழி
வேந்துறு விழுமம் தாங்கிய
பூம்பொறிக் கழற்கால் நெடுந்தகை புண்ணே.

அருஞ்சொற்பொருள்:

1. தீ = இனிமை; இரவம் = ஒருமரம்; வேம்பு = வேப்ப மரம்; செரீஇ = செருகி. 2. வாங்கு = வளைவு; மருப்பு = யாழ்க்கோடு (யாழின் தணு); இயம் = இசைக் கருவி; கறங்க = ஒலிக்க. 3. பயப்பய = பைய = மெல்ல; இழுது = நெய், வெண்ணெய், குழம்பு; இழுகுதல் = பூசுதல். 4. ஐயவி = சிறுவெண்கடுகு. காஞ்சி = நிலையாமையைக் குறிக்கும் பண். 5. எறிதல் = அடித்தல். 6. வரைப்பு = இடம்; கடி = மிகுதி; நறை = மணம். 8. விழுமம் = துன்பம்.

கொண்டு கூட்டு: நகர் வரைப்பின் இரவமொடு வேம்பு மனைச் செரீஇ, கறங்கி, இழுகி, சிதறி, ஊதி, எறிந்து, பாடி, புகைஇக் நெடுந்தகை புண்ணை, தோழி, காக்கம் வம்மோ என மாறிக் கூட்டுக.

உரை: அன்புடைய தோழிகளே வாருங்கள்! இனிய கனியைத் தரும் இரவமரத்தின் இலையையும் வேப்பிலையையும் சேர்த்து வீட்டில் செருகுவோம்; வளைந்த தண்டையுடைய யாழோடு பலவகை இசைக்கருவிகளும் ஒலிப்போம்; கையால் மெல்ல எடுத்து மைபோன்ற சாந்தைத் தலைவனின் புண்களில் மெழுகுவோம்; சிறுவெண்கடுகுகளைத் தூவி, ஆம்பல் தண்டை ஊதி, ஓசையைச் செய்யும் மணியை ஒலித்து, காஞ்சிப் பண்ணைப் பாடி, நெடிய அரண்மனை முழுதும் நல்ல மணமுள்ள புகையை எழுப்புவோம். வேந்தனுக்கு உண்டாகிய துன்பத்தைத் தான் தாங்கிய, பூ வேலைப்பாடுகள் அமைந்த கழல் பூண்ட பெருந்தகையாகிய தலைவனுக்கு உண்டாகிய புண்களை ஆற்றி அவனைக் காப்போம்.

சிறப்புக் குறிப்பு: போரில் புண்பட்டவர்களுக்கு மருத்துவம் செய்வோர், புண்பட்டோர் இருக்கும் வீடுகளைத் தூய்மையாக வைத்துக் கொள்வதும், இனிய இசை பாடுவதும், நறுமணமுள்ள பொருட்களைத் தீயிலிட்டுப் புகையை எழுப்புவதும் பழங்காலத்தில் வழக்கிலிருந்ததாக இப்பாடலிலிருந்து தெரியவருகிறது.

No comments: