Monday, October 10, 2011

284. பெயர்புற நகுமே!

284. பெயர்புற நகுமே!

பாடியவர்: ஓரம்போகியார்(284). ஐங்குறுநூற்றில் மருதம் பற்றிய நூறு செய்யுட்களையும் இயற்றியவர் இவர். மற்றும், இவர் அகநானூற்றில் இரண்டு செய்யுட்களையும் ( 286, 316), குறுந்தொகையில் ஐந்து செய்யுட்களையும் ( 10, 70, 122, 177, 384), நற்றிணையில் இரண்டு செய்யுட்களையும்( 20, 360) இயற்றியுள்ளார். இவர் சேரமான் ஆதன் அவினி, சோழன் கடுமான் கிள்ளி, பாண்டியன், மத்தி, விராஅன் ஆகியோரைப் பாடியுள்ளார்.

பாடலின் பின்னணி: ஒருகால், ஒருவேந்தன் வீரர்கள் பலரையும் போருக்கு வருமாறு அழைத்தான். அப்போரில், வீரன் ஒருவன் சிறப்பாகப் போர் புரிந்தான். அவனுடைய வீரச் செயல்களைப் புலவர் ஓரம்போகியார் கண்டார். அவ்வீரன் ஓர் யானையைக் கொன்று வீழ்த்தினான். அவன் யானையுடன் போரிட்டதால் அவனுடைய வாள் கோணியது. அந்த வாளை இறந்த யானையின் தந்தத்தில் தீட்டிக்கொண்டிருந்தான். அதைப்பார்த்த பகைவரின் வீரன் ஒருவன் புறமுதுகுகாட்டி ஒடினான். அதைக் கண்ட அவ்வீரன் சிரித்தான். இக்காட்சியை இப்பாடலில் புலவர் ஓரம்போகியார் குறிப்பிடுகிறார்.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: பாண்பாட்டு. பெரும்போர் செய்து இறந்த வீரனுக்கு சாப்பண்னைப் பாடி ப் பாணர் தம் கடன் கழித்தலைக் கூறுதல்.

வருகதில் வல்லே வருகதில் வல்என
வேந்துவிடு விழுத்தூது ஆங்காங்கு இசைப்ப
நூலரி மாலை சூடிக் காலின்
தமியன் வந்த மூதி லாளன்
5 அருஞ்சமம் தாங்கி முன்நின்று எறிந்த
ஒருகை இரும்பிணத்து எயிறு மிறையாகத்
திரிந்த வாய்வாள் திருத்தாத்

தனக்குஇரிந் தானைப் பெயர்புறம் நகுமே.

அருஞ்சொற்பொருள்:

1. தில் = விழைவைக் குறிக்கும் அசைச்சொல்; வல் = விரைவு. 2. விழு = சிறந்த. 3. அரி = அறுத்தல். 5. சமம் = போர். 6. ஒருகை = யானை; மிறை = வளைவு. 7. வாய்வாள் = குறிதவறாத வாள். 8. இரிதல் = ஓடுதல்.

கொண்டு கூட்டு: இசைப்ப சூடி, வந்த மூதிலாளன் திருத்தா, நகும் எனக் கூட்டுக.

உரை: “விரைந்து வருக, விரைந்து வருக” என்று வேந்தனின் சிறந்த தூதுவர் ஆங்காங்கு சென்று தெரிவிக்க, நூலால் தொடுக்கப்பட்ட மாலையைச் சூடிக்கொண்டு, காலால் நடந்து தனியனாய் வந்த மறக்குடி மறவன், கடுமையான போரில் பகைவரை மேலே செல்லாதவாறு தடுத்துப் பகைவரின் யானையொன்றை வெட்டி வீழ்த்தினான். தான் வெட்டி வீழ்த்திய யானையின் தந்தத்தில் தனது வளைந்த வாளைத் தீட்டிக்கொண்டிருந்தான். அப்பொழுது பகைவரின் வீரன் ஒருவன் அவனைக்கண்டு புறமுதுகுகாட்டி ஒடினான். அதைக்கண்டு இவ்வீரன் சிரித்தான்.

சிறப்புக் குறிப்பு: இறந்த வீரனுக்குத் தம் கடன் ஆற்றுவதற்காகப் பாணர்கள் சாப்பண்ணில் யாழிசைப்பது பாண்பாட்டு. இப்பாடல், வீரன் யானையைக் கொன்று வீழ்த்தியதைப்பற்றிக் கூறுகிறது. ஆனால் இப்பாடலில் வீரன் இறந்ததாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்னும் துறையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது.

1 comment:

S Natarajan said...

ஐயா, அருமையான விளக்கம். ஒரு சிறிய எண்ணம்.

1) யானையின் தந்தத்தில் வாளை வைத்து நிமிர்த்திக் கொண்டிருந்த வீரனைக் கண்டு பயந்து ஓடியவன், அந்த யானையின் மேல் அமர்ந்து வந்த வீரனாக ஏன் இருக்கக் கூடாது?

2) நூலால் அணிந்த மாலை என்றால் என்ன?