Monday, October 10, 2011

283. அழும்பிலன் அடங்கான்!

283. அழும்பிலன் அடங்கான்!

பாடியவர்: அண்டர் நடுங்கல்லினார் (283, 344, 345). அண்டர் என்ற சொல்லுக்கு ஆயர் (இடையர்) என்று பொருள். ஒருகால், ஓரூரில் ஆநிரைகளை மீட்பதற்காகப் போரிட்ட வீரன் ஒருவன் இறந்தான். அவனை ஆயர்கள் நடுகல் நாட்டிச் சிறப்பித்தனர். அதைப் புகழ்ந்து பாடியதால் இப்புலவர் அண்டர் நடுங்கல்லினார் என்று அழைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் பெயர் அடைநெடுங்கல்லியார் என்றும் அடைநெடுங்கல்வியார் என்றும் காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: பகைவர்கள் எய்த அம்புகள் ஒரு வீரனின் உடலில், வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் செருகி இருப்பதைப் போல் செருகி இருந்தன. அவனைச் சில சிறுமிகள் பாதுகாத்துவந்தனர். அவ்வீரனைக் காணவந்த நண்பன் ஒருவன், வீரனின் நிலையைக் கண்டு, சினத்துடன் போருக்குப் புறப்பட்டான். இப்பாடலின் சில பகுதிகள் கிடைக்கவில்லை. பாடல் சிதைந்துள்ளதால், தெளிவான பொருள் காண்பது அரிதாக உள்ளது.

திணை: தும்பை. தும்பைப் பூவைச் சூடிப் பகைவரோடு போர் செய்தல்.

துறை: பாண்பாட்டு. பாடாண் பாட்டும் ஆம்

பாண்பாட்டு. பெரும்போர் செய்து இறந்த வீரனுக்கு சாப்பண்னைப் பாடிப் பாணர் தம் கடன் கழித்தலைக் கூறுதல்.

பாடாண் பாட்டு. ஒருவனது ஆற்றல், ஓளி, ஈகை, அருள் ஆகியவற்றை ஆராய்ந்து சொல்லுதல்.


ஒண்செங் குரலித் தண்கயம் கலங்கி
வாளை நீர்நாய் நாள்இரை பெறூஉப்
பெறாஅ உறையரா வராஅலின் மயங்கி
மாறுகொள் முதலையொடு ஊழ்மாறு பெயரும்
5 அழும்பிலன் அடங்கான் தகையும் என்னும்
வலம்புரி கோசர் அவைக்களத் தானும்
மன்றுள் என்பது கெட …...தானே பாங்கற்கு
ஆர்சூழ் குறட்டின் வேல்நிறத்து இங்க
உயிர்புறப் படாஅ அளவைத் தெறுவரத்
10 தெற்றிப் பாவை திணிமணல் அயரும்
மென்தோள் மகளிர் நன்று புரப்ப
இமிழ்ப்புறம் நீண்ட பாசிலைக்
கமழ்பூந் தும்பை நுதலசைத் தோனே.

அருஞ்சொற்பொருள்:

1. குரலி = நீரில் உள்ள ஒருவகைச் செடி; தண்கயம் = குளிர்ந்த நீர்நிலை. 2. வாளை = வாளைமீன். 3. அரா = பாம்பு; வராஅல் = வரால்மீன். 4. ஊழ் = முறை; மாறு = பகை. 5. அழும்பிலன் = அழும்பில் என்னும் ஊரின் தலைவன்; தகைத்தல் = தடுத்தல். 6. வலம் = வெற்றி; புரிதல் = விரும்புதல். 7. பாங்கன் = தோழன். 8. ஆர் = ஆரக்கால்; குறடு = மரத்துண்டு. அச்சுக் கோகும் இடம் ( வண்டிச் சக்கரத்தின் குடம்); நிறம் = மார்பு; இங்கல் = ஊடுருவுதல், நுழைதல். 9. அளவை = அளவு; தெறு = சினம். 10. தெற்றி = திண்ணை; பாவை = பதுமை (பொம்மை); அயர்தல் = விளையாடுதல். 11. புரப்ப = பாதுகாக்க (காக்க). 12. இமிழ்தல் = தழைத்தல், மிகுதல்; பாசிலை = பசிய இலை. 13. நுதல் = நெற்றி; அசைத்தல் = கட்டுதல்.

கொண்டு கூட்டு: நீர்நாய் நாள் இரை பெற்று மயங்கி முதலையொடு ஊழ்மாறு பெயரும்; வேல் நிறத்து இங்க பாங்கற்கு உயிர் புறப்படாஅ அளவைத் தும்பையை நுதலசைத்தான் எனக் கூட்டுக.

உரை: ஒளிபொருந்திய செங்குரலிக்கொடி நிறைந்த குளிர்ந்த நீர்நிலை கலங்க, வாளைமீனை நீர்நாய் தனக்கு அன்றைய உணவாகப் பெற்றுக்கொண்டு, உணவு இல்லாமல் அங்கே வாழும் பாம்புகளை வரால்மீன் எனக்கருதி மயங்கி முதலைகளோடு மாறிமாறி முறையாக நீர்நாய்களும் முதலைகளும் போரிடும் அழும்பில் என்னும் ஊருக்குத் தலைவன், அடங்காதவனாக எதிர்நின்று போரிடக்கருதி எழுந்தான். வெற்றியை விரும்பும் கோசருடைய அவைக்களமும் போர்க்களத்தின் நடுவிடமும் இல்லையாக … அவன் தோழனின் மார்பில் பகைவரின் அம்புகள் செருகி இருந்தன. அவை வண்டியின் குடத்தில் ஆரக்கால்கள் அமைந்திருப்பதுபோல் இருந்தன. தோழனின் உயிர் உடலிலிருந்து நீங்காமல் ஊசலாடிக்கொண்டிருந்தது. திண்ணையில் வைத்து விளையாட வேண்டிய மண்பாவைகளைத் திணிந்த மணலில் வைத்து விளையாடும் சிறுமிகள் அவன் புண்களை ஆற்றி அவனை நன்கு காத்துவந்தனர். இந்தக் காட்சியைக் கண்ட தலைவன், சினந்து, ஒளியுடன் விளங்கும் நீண்ட பசிய இலைகளையுடைய மணங்கமழும் தும்பைப் பூவால் தொடுக்கப்பட்ட மாலையை நெற்றியில் கட்டிக்கொண்டு போருக்குப் புறப்பட்டான்.

சிறப்புக் குறிப்பு: ஒரு நீர்நாய் ஒரு முதலையுடன் போரிட்டுத் தோற்றால், மற்றொரு நீர்நாய் வென்ற முதலையோடு போரிடும்; போரில் ஒரு முதலை தோற்றால் மற்றொரு முதலை வென்ற நீர்நாயோடு போர்புரியும். இவ்வாறு மாறிமாறி முறையாகப் போரிடுவதைத்தான் “ஊழ்மாறு பெயரும்” என்று புலவர் குறிப்பிடுவதாக ஒளவை சு. துரைசாமிப்பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.

பெரும்போர் செய்து இறந்த வீரனுக்கு சாப்பண்னைப் பாடிப் பாணர் தம் கடன் கழித்தலைக் கூறும் பாடல்கள் பாண்பட்டு என்னும் துறையைச் சார்ந்தவையாகும்.

இப்பாடலில் பாணர்கள் சாப்பண்ணைப் பாடி வீரன் ஒருவனின் சாவைக் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகக் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, இப்பாடல் பாண்பாட்டு என்ற துறையைச் சார்ந்ததாகத் தெரியவில்லை. இப்பாடலில், வீரன் ஒருவனின் செயலைப் புலவர் புகழ்ந்து கூறியிருப்பதால், இப்பாடல் பாடாண் பாட்டு என்னும் துறையைச் சார்ந்தது என்று முடிவு செய்வதுதான் பொருத்தமாகத் தோன்றுகிறது.

2 comments:

Ashraf, NVK said...

If I am not wrong, Thumbai thinai of Puram is equated with Neythal of Akam. All the references to the otter (நீர்நாய்) in Akam comes under Marutham (rarely Neythal). The vaalai fish has always been depicted as the prey of the otter in Marutham landscapes. That being the case, how come vaalai is mentioned in Puram 283 which is equated with Marutham thinai? Hope you understand my question. I would appreciate your view on this.
Thanks Ashraf (nvkashraf@gmail.com)

முனைவர். பிரபாகரன் said...

அன்புடையீர்,

உங்கள் கேள்வி மிகச் சிறப்பானது. உங்கள் கேள்வியிலிருந்து உங்களுக்கு சங்க இலக்கியத்தில் ஆர்வமும் புலமையும் இருப்பதாகத் தோன்றுகிறது.

தும்பைப் பூவைச் சூடி மாற்றரசனுடன் போர் செய்வது பற்றிய செய்திகள் தும்பைத் திணையில் அடங்கும். தும்பைத் திணை அகத்திணையாகிய நெய்தலுக்கேற்ற புறத்திணை. அகத்திணையில் காணப்படுவதுபோல் கருப்பொருள்கள் புறத்திணைகளுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. ஆகவே, நீர்நாயைப் பற்றிய செய்திகள் தும்பைத் திணைப பாடல்களில் வருவதில் தவறில்லை. அது மட்டுமல்லாமல், அகத்திணைப் பாடல்களில்கூட ஒரு திணைக்குரிய கருப்பொருள் மற்றொரு திணையைச் சார்ந்த பாடலில் வரலாம். அவ்வாறு வருவது ”திணை மயக்கம்” என்று கூறப்படுகிறது. ஆகவே மருதத்திணையைச் சார்ந்த நீர்நாயைப் பற்றிய செய்தி நெய்தலுக்குப் புறமான தும்பையில் வரலாம், அதில் தவறொன்றுமில்லை.

அன்புடன்,
பிரபாகரன்