Thursday, December 2, 2010

188. மக்களை இல்லோர்!

பாடியவர்: பாண்டியன் அறிவுடை நம்பி(188). இவன் பாண்டிய மன்னர்களுள் ஒருவன். புறநானூற்றில் இவன் இய்றிய பாடல் இது ஒன்றுதான். இவனைப் பிசிராந்தையார் பாடியுள்ளார் (184).
பாடலின் பின்னணி: மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை இப்பாடலில் பாண்டியன் அறிவுடை நம்பி சிறப்பித்துப் பாடுகிறான்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

படைப்புப்பல படைத்துப் பலரோடு உண்ணும்
உடைப்பெருஞ் செல்வர் ஆயினும் இடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
5 நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை இல்லோர்க்குப்
பயக்குறை இல்லைத் தாம்வாழும் நாளே.

அருஞ்சொற்பொருள்:
1. படைப்பு = செல்வம்; படைத்தல் = பெற்றிருத்தல். 4. துழத்தல் = கலத்தல் (துழாவல்). 5. அடிசில் = சோறு; விதிர்த்தல் = சிதறல். பயக்குறை = பயக்கு+உறை = பயன் அமைதல்

உரை: பலவகையான செல்வங்களையும் பெற்றுப் பலரோடு உண்ணும் பெருஞ்செல்வந்தராயினும், மெள்ள மெள்ள, குறுகிய அடிகளைவைத்து நடந்து, தன் சிறிய கையை நீட்டி, அதை உணவில் இட்டு, தொட்டு, வாயால் கவ்வி, கையால் துழாவி, நெய்யுடன் கலந்த சோற்றைத் தன் உடலில் பூசிப் பெற்றோரை இன்பத்தில் மயக்கும் குழந்தைகள் இல்லாதவர்களின் வாழ்நாள்கள் பயனற்றவையாகும்.

சிறப்புக் குறிப்பு: சிறுகுழந்தை நடக்கும் பொழுது, அது ஒருஅடி வைப்பதற்கும் அடுத்த அடி எடுத்து வைப்பதற்கும் சற்று கால தாமதாவதால், “இடைப்பட” என்று நயம்படக் கூறுகிறார் பாண்டியன் அறிவுடை நம்பி.

மக்கட்பேற்றால் வரும் இன்பத்தை பல குறட்பாக்களில் வள்ளுவர் கூறியிருப்பது இங்கு ஒப்பு நோக்கத்தக்கது.

அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ். (குறள் - 64)

மக்கள் மெய்தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர்
சொற்கேட்டல் இன்பம் செவிக்கு. (குறள் - 65)

குழலினிது யாழினிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர். (குறள் - 66)

1 comment:

Bessy Shiny said...

It's very useful for upsc examination..thank you