பாடியவர்: கபிலர். இவரைப் பற்றிய குறிப்புகளை பாடல் 105-இல் காண்க.
பாடப்பட்டோன்: இருங்கோவேள். இவனைப் பற்றிய செய்திகளைப் பாடல் 201-இல் காண்க.
பாடலின் பின்னணி: பாரி மகளிரை மணந்துகொள்ளுமாறு கூறிய கபிலரின் வேண்டுகோளுக்கு இருங்கோவேள் இணங்க மறுத்தான். அதனால் கோபமடைந்த கபிலர், “வேளே! உன் நாட்டில் சிற்றரையம், பேரரையம் என்று இரண்டு சிறப்பான ஊர்கள் இருந்தன. இன்று அவ்வூர்கள் அழிந்துவிட்டன. உன் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையார் என்னும் புலவரை இகழந்தான். அதனால்தான் அவ்வூர்கள் அழிந்தன. நான் இவர்களின் சிறப்பைக் கூறி இவர்களை மணந்துகொள்ளுமாறு உன்னை வேண்டினேன். நீ என் சொல்லை இகழ்ந்தாய்; நான் செல்கிறேன்; உன் வேல் வெற்றி பெறட்டும்” என்று இப்பாடலில் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.
வெட்சிக் கானத்து வேட்டுவர் ஆட்டக்
கட்சி காணாக் கடமா நல்லேறு
கடறுமணி கிளரச் சிதறுபொன் மிளிரக்
கடிய கதழும் நெடுவரைப் படப்பை
5 வென்றி நிலை இய விழுப்புகழ் ஒன்றி
இருபால் பெயரிய உருகெழு மூதூர்க்
கோடிபல அடுக்கிய பொருள்நுமக்கு உதவிய
நீடுநிலை அரையத்துக் கேடும் கேளினி
நுந்தை தாயம் நிறைவுற எய்திய
10 ஒலியற் கண்ணிப் புலிகடி மாஅல்
நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்
புகழ்ந்த செய்யுள் கழாஅத் தலையை
இகழ்ந்ததன் பயனே; இயல்தேர் அண்ணல்!
எவ்வி தொல்குடிப் படீஇயர், மற்றுஇவர்
15 கைவண் பாரி மகளிர் என்றஎன்
தேற்றாப் புன்சொல் நோற்றிசிற் பெரும!
விடுத்தனென்; வெலீஇயர்நின் வேலே; அடுக்கத்து
அரும்புஅற மலர்ந்த கருங்கால் வேங்கை
மாத்தகட்டு ஒள்வீ தாய துறுகல்
20 இரும்புலி வரிப்புறம் கடுக்கும்
பெருங்கல் வைப்பின் நாடுகிழ வோயே!
அருஞ்சொற்பொருள்:
1.வெட்சி = ஒருசெடி; கானம் = காடு. 2. கட்சி = புகலிடம்; கடமா = காட்டுப் பசு, மத யானை. 3. கடறு = காடு; கிளர்தல் = எழுதல். 4. கடி = மிகுதி; கதழ்தல் = விரைதல்; படப்பை = தோட்டம், பயிர் நிலம், நாடு. உரு = அச்சம். 9. தாயம் = உரிமை. 10. ஒலியல் = தழைக்கை. 14. மா = கறுப்பு. 17 . அடுக்கம் = மலைச்சாரல். 19. மா = கரிய; தகடு = பூவின் புறவிதழ்; வீ = மலர்; துறுகல் = பாறை. 20. கடுக்கும் = போலும். 21 கல் = மலை.
கொண்டு கூட்டு: புலிகடிமாஅல், அண்ணல், நாடு கிழவோயே, அரையத்துக் கேடும் கேள் இனி; அது கழாஅத்தலையை இகழ்ந்ததன் பயன்; இப்பொழுது, எவ்வி தொல்குடிப் படீஇயர்; இவர் பாரி மகளிர் என்றஎன் புன்சொல்லைப் பொறுப்பாயாக; பெருமானே, நின்னை விடுத்தனென்; வெலீஇயர் நின் வேலே எனக் கூட்டுக.
உரை: வெட்சிச் செடிகள் நிறைந்த காட்டில் வேடர்களால் விரட்டப்பட்ட மதங்கொண்ட யானை புகலிடம் இல்லாமல், காட்டில் மணியோசையை எழுப்பி, பொன்னின் தூள்கள் சிதறி மிளிருமாறு, வெகு விரைவாக ஓடும் நெடிய மலைப் பக்கத்தில் உள்ள நாட்டில் வெற்றி நிலைபெற்ற, சிறந்த புகழ் பொருந்திய சிற்றரையம், பேரரையம் என்று அஞ்சத்தக்க இரண்டு பழைய ஊர்கள் இருந்தன. கோடிக்கணக்கில் பொருள் கொடுத்து உன் முன்னோர்களுக்கு உதவி, உயர்ந்த நிலையில் இருந்த அந்த அரையம் ஏன் அழிந்தது என்று கூறுகிறேன்; கேட்பாயாக. உன் தந்தையாரிடமிருந்து உரிமையாகப் பெருமளவில் செல்வங்களைப் பெற்று, தழைத்த மாலையுடன் உள்ள புலிகடிமால்! உன்னைப்போன்ற அறிவுடைய உன் முன்னோருள் ஒருவன், புகழ் மிக்க செய்யுள் இயற்றும் கழாத்தலையாரை இகழ்ந்ததின் விளைவுதான் அரையத்தின் அழிவு. நன்கு செய்யப்பட்ட தேர்களை உடையவனே! ”இவர்கள் எவ்வி என்னும் பழங்குடியைச் சார்ந்தவர்கள்; வள்ளன்மை மிகுந்த பாரியின் மகளிர்” என்ற என் தெளிவில்லாத சொற்களைப் பொறுத்துக்கொள்வாயாக!
மலைச்சாரலில், அரும்புகள் அனைத்தும் மலர்ந்த, கரிய அடிமரத்தையுடைய வேங்கையின் கரிய புறவிதழ்களையுடைய ஒளிபொருந்திய பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை கரிய வரிகளையுடைய புலியின் முதுகைப்போல் உள்ளது. அத்தகைய பெரிய மலைகளுள்ள இடங்களில் ஊர்களையுடைய நாட்டுக்கு உரியவனே! நான் செல்கிறேன். உன் வேல் வெற்றி பெறட்டும்!
சிறப்புக் குறிப்பு: இப்பாடலில், கபிலர் பல கருத்துகளை மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். இருங்கோவேளின் முன்னோர்களில் ஒருவன் கழாத்தலையாரை இகழ்ந்ததால் அரையம் அழிந்தது என்பதைச் சுட்டிக்காட்டி, தன் சொல்லைக் கேளாமல் தன்னை இகழ்ந்ததால் இருங்கோவேளின் நாட்டுக்குக் கேடு வரும் என்று கூறாமல் கூறுகிறார். அடுத்து, அரையத்தின் அழிவைப் பற்றிக் கூறும்பொழுது, “நும்போல் அறிவின் நுமருள் ஒருவன்” என்று இருங்கோவேளின் முன்னோர்களின் ஒருவன் இருங்கோவேளைப்போல் அறிவில்லாதவன் என்று மறைமுகமாகக் குறிப்பிடுகிறார். ”நுந்தை தாயம் நிறைவுற எய்திய” என்று அவனுடைய நாடு மற்றும் செல்வம் அனைத்தும் அவன் தந்தையால் அவனுக்கு அளிக்கப்பட்டதே ஒழிய அவன் தன் சொந்த முயற்சியால் எதையும் பெறவில்லை என்று மறைமுகமாகக் கூறுகிறார். தன்னுடன் வந்த பெண்கள் பாரியின் மகளிர் என்பதால் அவர்களை மணந்தால் மூவேந்தருடன் பகை வரக்கூடும் என்ற அச்சத்தால் இருங்கோவேள் அவர்களை மணக்க மறுக்கிறான் என்று கபிலர் கருதுகிறார். அஞ்ச வேண்டாதவற்றை எண்ணி அவன் அஞ்சுகிறான் என்பதை, வேங்கைப் பூக்கள் பரவிக் கிடக்கும் பாறை, புலியின் முதுகுபோல் இருக்கிறது என்று மறைமுகமாக அவன் அச்சத்தைச் சுட்டிக் காட்டுகிறார். கடைசியாக, “வெலீயர் நின் வேல்” என்று கபிலர் கூறுவது, வாழ்த்துவதுபோல் இருந்தாலும், அது “கெடுக உன் வேல்” என்ற எதிர்மறைப் பொருளில் ”குறிப்பு மொழி”யாகக் கூறியதுபோல் (பாடல் 196-இல் குறிப்பு மொழி என்பதற்கு விளக்கம் இருப்பதைக் காண்க.) தோன்றுகிறது.
Monday, December 13, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment