Thursday, December 2, 2010

198. மறவாது ஈமே

பாடியவர்: வடமவண்ணக்கன் பேரி சாத்தனார். பேரி என்ற சொல்லுக்கு முரசு என்று பொருள். இவரது இயற்பெயர் சாத்தனார். இவர், ஒருபாடலில் கடலலையின் ஒலிக்கு முரசின் ஒலியை உவமையாகக் கூறியதால் பேரி சாத்தனார் என்று அழைக்கப்பட்டார். தங்கத்தைப் பரிசோதனை செய்பவர்களுக்கு வண்ணக்கன் என்பது தொழிற்பெயர். மற்றும், இவர் வட நாட்டிலிருந்து தமிழகத்தில் குடியேறியதால் வடம என்ற அடைமொழியும் இவர் பெயரோடு சேர்க்கப்பட்டுள்ளது. இவர் புறநானூற்றில் இயற்றிய இந்தப் ஒருபாடல் மட்டுமல்லாமல் அகநானூற்றில் 5 செய்யுள்களையும் , நற்றிணையில் 8 செய்யுள்களையும், குறுந்தொகையில் 5 செய்யுள்களையும் இயற்றியுள்ளார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன்.
பாடலின் பின்னணி: ஒருசமயம், வடமவண்ணக்கன் பேரி சாத்தனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் பரிசில் பெறலாம் என்ற எண்ணத்தோடு அவனைக் காணச் சென்றார். அவன் பரிசில் அளிக்காமல் காலத்தைப் போக்கினான். அதனால் ஏமாற்றமடைந்த வடமவண்ணக்கன் பேரி சாத்தனார் அவனை வாழ்த்தி விடைபெறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

அருவி தாழ்ந்த பெருவரை போல
ஆரமொடு பொலிந்த மார்பின் தண்டாக்
கடவுள் சான்ற கற்பின் சேயிழை
மடவோள் பயந்த மணிமருள் அவ்வாய்க்
5 கிண்கிணிப் புதல்வர் பொலிகஎன்று ஏத்தித்
திண்தேர் அண்ணல்! நிற்பா ராட்டிக்
காதல் பெருமையின் கனவினும் அரற்றும்என்
காமர் நெஞ்சம் ஏமாந்து உவப்ப
ஆல்அமர் கடவுள் அன்னநின் செல்வம்
10 வேல்கெழு குருசில்! கண்டேன்; ஆதலின்,
விடுத்தனென்; வாழ்க நின் கண்ணி! தொடுத்த
தண்டமிழ் வரைப்புஅகம் கொண்டி யாகப்
பணித்துக்கூட் டுண்ணும் தணிப்பருங் கடுந்திறல்
நின்னோர் அன்னநின் புதல்வர் என்றும்
15 ஒன்னார் வாட அருங்கலம் தந்துநும்
பொன்னுடை நெடுநகர் நிறைய வைத்தநின்
முன்னோர் போல்க இவர் பெருங்கண் ணோட்டம்;
யாண்டும் நாளும் பெருகி ஈண்டுதிரைப்
பெருங்கடல் நீரினும் அக்கடல் மணலினும்
20 நீண்டுஉயர் வானத்து உறையினும் நன்றும்
இவர்பெறும் புதல்வர்க் காண்தொறும் நீயும்
புகன்ற செல்வமொடு புகழ்இனிது விளங்கி
நீடு வாழிய நெடுந்தகை! யானும்
கேளில் சேஎய் நாட்டின்எந் நாளும்
25 துளிநசைப் புள்ளின்நின் அளிநசைக்கு இரங்கிநின்
அடிநிழல் பழகிய வடியுறை;
கடுமான் மாற! மறவா தீமே.

அருஞ்சொற்பொருள்:
1. வரை = மலை. 2. ஆரம் = மாலை (முத்து மாலை). 4. மணி = பவழ மணி. 5. கிண்கிணி = காலணி. 7. அரற்றுதல் = கதறுதல், அழுதல். 9. ஆல் = ஆல்மரம். 12. வரைப்பு = எல்லை; கொண்டி = கொள்ளை, பிறர் பொருள் முதலியவற்றைக் கொள்ளுதல். 16. நெடுநகர் = பெரிய அரண்மணை.

உரை: அருவி வீழும் பெரிய மலைபோல் ஆரத்தோடு விளங்கும் மார்பையுடையவனே! கடவுள் தன்மை அமைந்த கற்புடைய உன் மனைவி உன் மீது குறையாத அன்புடையவள். அவள் பெற்ற உன் புதல்வர்கள் சிறப்புடன் வாழ்க என வாழ்த்துகிறேன். வலிய தேரையுடைய தலைவ! உன்னைப் பாராட்டுகிறேன். பரிசில் மீது மிகுந்த விருப்பம் உள்ளதால், கனவிலும் உன் புகழையே கூறிக்கொண்டிருக்கிறேன். வேலையுடய வேந்தே! அப்பரிசிலின் மீது எனக்குள்ள விருப்பத்தால் என் நெஞ்சம் இன்புற்று மகிழுமாறு, ஆலமரத்தில் அமர்ந்த கடவுள் போன்ற உன் பெருஞ்செல்வத்தைக் கண்டேன். ஆதலால், நான் விடைபெறுகிறேன்.

உன் தலையில் அணிந்துள்ள மாலை வாழ்க! நீ தமிழகம் முழுவதும் கொள்ளைகொண்டு உன் பகைவரை வென்று அவர் பொருள்களைக் கொள்ளை கொள்ளும் மிக்க வலிமையையுடையவன். உன் புதல்வரும் உன்னைப் போன்ற மிக்க வலிமை உடையவர்கள்.எந்நாளும் பகைவர்களை அழித்து அவர்களுடைய அரிய அணிகலன்களைக் கொண்டுவந்து உன்னுடைய பொன்னாலான பொருள்கள் நிறைந்த பெரிய அரண்மனையில் உன் முன்னோர்கள் வைத்தார்கள். அந்த முன்னோர்களைப் போலவே உன் புதல்வரின் கருணை நிரம்பிய உள்ளமும் உள்ளது. (முன்னோர்க்கும் கண்ணோட்டம் இல்லை; உன் புதல்வருக்கும் கண்ணோட்டம் இல்லை).

எப்பொழுதும் அலையுடன் கூடிய கடல் நீரினும், அக்கடல் மணலினும், மழைத்துளிகளினும் அதிக நாட்கள் உன் புதல்வரின் பிள்ளைகளோடும் நீ விரும்பிய செல்வத்தோடும் வாழ்க! பெருந்தகையே! நான் உறவினர் இல்லாத தொலைவில் உள்ள ஊரில் மழைத்துளிக்கு ஏங்கி இருக்கும் வானம்பாடிப் பறவையைப் போல் உனது பரிசிலை விரும்பி உன் நிழலில் வாழ்ந்து பழகிய அடியேனாகவே வாழ்வேன். விரைவாகச் செல்லும் இயல்புடைய குதிரைகளையுடைய பாண்டியனே! நீ செய்த செயலை மறவாதே!

சிறப்புக் குறிப்பு: பாண்டியன் செய்த தீய செயலால் அவனுக்குத் தீங்கு வரும் என்று உணர்ந்த பேரி சாத்தனார், அவனுக்கு அத்தகைய தீங்குகள் வராமல் இருக்க வேண்டுமென்று எண்ணி அவனை வாழ்த்தி விடைபெறுகிறார்.

No comments: