Thursday, December 2, 2010

196. குறுமகள் உள்ளிச் செல்வல்

பாடியவர்: ஆவூர் மூலங்கிழார்.
பாடப்பட்டோன்: பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன். இலவந்திகை என்ற சொல்லுக்கு நீர்நிலையைச் சார்ந்த சோலை என்று பொருள். இப்பாண்டிய மன்னன் ஒருஇலவந்திகையில் இருந்த பள்ளியறையில் இறந்ததால் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்று அழைக்கப்பட்டான். இவன் கொடையிலும் வீரத்திலும் சிறந்தவன். இவனைப் பாடிய புலவர்கள்: மதுரை மருதன் இளநாகனார், மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார், ஆவூர் மூலங்கிழார், வடம வண்ணக்கன் பேரி சாத்தனார்.

பாடலின் பின்னணி: ஆவூர் மூலங்கிழார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனிடம் பரிசு பெறுவதற்காகச் சென்றார். அவனைக் காண்பது அரிதாக இருந்தது. பலநாட்களுக்குப் பிறகு, அவனைக் காணும் வாய்ப்பு கிடைத்தது. ஆவூர் மூலங்கிழார் பாண்டியனைப் புகழ்ந்து பாடினார். அவன், ஆவூர் மூலங்கிழாருக்குப் பரிசு கொடுக்காமல் காலம் தாழ்த்தினான். அவன் பரிசு கொடுப்பானா அல்லது கொடுக்க மறுத்துவிடுவானா என்று புலவருக்கு ஐயம் எழுந்தது. அதனால் மிகவும் கோபமடைந்த ஆவூர் மூலங் கிழார், இப்பாடலில் தன் கோபத்தை மறைமுகமாக வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது இல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே;
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
5 இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டல் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை;
அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது கண்டனம் அதனான்
10 நோயிலர் ஆகநின் புதல்வர்; யானும்
வெயிலென முனியேன்; பனியென மடியேன்;
கல்குயின் றன்னஎன் நல்கூர் வளிமறை
நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்லியல் குறுமகள் உள்ளிச்
15 செல்வல் அத்தை; சிறக்க நின்நாளே.

அருஞ்சொற்பொருள்:
1. ஒல்லுதல் = இயலுதல். 3. ஆள்வினை = முயற்சி; மருங்கு = பக்கம், கண்ணோட்டம்; கேண்மை = நட்பு, இயல்பு. 7. வாயில் = வழி; அத்தை - அசை. 11. முனிதல் = வெறுத்தல்; மடி = சோம்பல். 12. குயிறல் = செய்தல்; நல்கூர்தல் = வறுமைப்படுதல். 14. முனிவு = வெறுப்பு.

உரை: தம்மால் கொடுக்க முடிந்ததைப் பிறர்க்கு அளித்தலும், தம்மால் கொடுக்க முடியாததைக் கொடுக்க மறுத்தலும் ஆகிய இரண்டும் முயற்சியும் கண்ணோட்டமும் உடையவர்களின் இயல்பு. தம்மால் கொடுக்க முடியாததை கொடுக்க முடியும் என்று கூறுவதும், கொடுக்க முடிந்ததை கொடுக்காமல் மறுப்பதும் ஆகிய இரண்டும் இரவலரை விரைவில் வருத்துவதோடு மட்டுமல்லாமல் புரவலர்களின் புகழையும் குறைக்கும் வழியாகும். இப்பொழுது என்னிடம் நீ நடந்துகொண்ட விதமும் அதுவே. இது போன்ற செயல்களை இதுவரை நான் கண்டதில்லை; இப்பொழுதுதான் கண்டேன்.

உன் புதல்வர்கள் நோயில்லாமல் வாழ்வராக! நான் வெயிலின் வெம்மையை வெறுக்காமலும், பனியின் குளிரைக் கண்டு சோம்பாமலும், கல்போன்று தங்கியிருக்கும் என் வறுமையுடன், காற்றைத் தடுக்கும் சுவர்கள் மட்டுமே உள்ள என் வீட்டிற்குச் செல்கிறேன். அங்கே, நாணத்தைத் தவிர வேறு அணிகலன்கள் அணியாத, கற்பிற் சிறந்தவளும் ஒளிபொருந்திய நெற்றியை உடைவளுமாகிய மெல்லியல்புகளுடைய என் மனைவியை நாடிச் செல்கிறேன். உன் வாழ்நாள்கள் பெருகட்டும்!

சிறப்புக் குறிப்பு: இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனின் செயலால் ஆவூர் மூலங் கிழார் மிகவும் மனவருத்தமும் கோபமும் கொண்டார். அவன் தீய செயலால் அவன் புதல்வர்கள் நோயுடன் வருந்துவதையும் அல்லது அவன் வாழ்நாள்கள் குறைவதையும் அவர் விரும்பினாலும் அதை நேரிடையாகக் கூறாது எதிர்மறைக் குறிப்பாகக் கூறுகிறார். இவ்வாறு எதிர்மறைக் குறிப்பாக மொழிவதைத் தொல்காப்பியம்,

எழுத்தொடும் சொல்லொடும் புணரா தாகிப்
பொருட் புறத்ததுவே குறிப்புமொழி யென்ப” (தொல்காப்பியம் - செய்யுளியல் 177)

என்று கூறுகிறது. இப்பாடலில் ஆவூர் மூலங் கிழாரின் கூற்று குறிப்புமொழிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

”வளிமறை” என்பது ஆவூர் மூலங்கிழாரின் வீட்டில் வெயில், மழை போன்றவற்றிலிருந்து அவரைக் காப்பாற்றுவதற்குத் தேவையான கூரை இல்லை என்பதைக் குறிக்கிறது.

“நாணலது” என்பது, மிகுந்த வறுமையின் காரணத்தால், ஆவூர் கிழாரின் மனைவி, அணிகலன்கள் எதுவும் இல்லாமல் நாணம் ஒன்றையே தன் அணிகலனாகக் கொண்டவள் என்பதைக் குறிக்கிறது.

2 comments:

Unknown said...

Thank you sir 🙏
Now I understand the correct meaning..
Thank you very much

முனைவர். பிரபாகரன் said...

Thank you for your comments. Please continue to read Puranaanuuru, kurunthokai, and other classics of Tamil literature.

anbudan,
Prabhakaran