பாடியவர்: பெருஞ்சித்திரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 158-இல் காண்க.
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி. இவனைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 87-இல் காண்க.
பாடலின் பின்னணி: அதியமான் நெடுமான் அஞ்சியைக் கண்டு பரிசில் பெறலாம் என்று பெருஞ்சித்திரனார் சென்றார். எக்காரணத்தினாலோ, அதியமான் அவரைக் காணாது, அவர் தகுதிக்கேற்ற பரிசிலை மற்றவர்களிடத்துக் கொடுத்துப் பெருஞ்சித்திரனாரிடம் கொடுக்குமாறு செய்தான். அதியமான் தன்னை காணாது அளித்த பரிசிலை பெருஞ்சித்திரனார் ஏற்றுக்கொள்ள மறுத்தார். “குன்றுகளையும் மலைகளையும் கடந்து நான் பரிசு பெறுவதற்காக மட்டும்தான் வந்தேன் என்று அதியமான் எண்ணினா? சரியான முறையில் என்னை அவன் வரவேற்றிருக்க வேண்டும். என்னைக் காணாமல் அவன் அளித்த பரிசிலை ஏற்றுக்கொள்வதற்கு, நான் ஒரு வாணிகப் பரிசிலன் அல்லேன். என்னை விரும்பி வரவேற்று, ”வருக” என்று எதிர்கொண்டு அழைத்து, என் புலமையைக் கண்டு, பாராட்டி, எனக்கு அளிக்கும் பரிசு மிகச்சிறியதானாலும் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வேன்” என்று இப்பாடலில் கூறுகிறார். பெருஞ்சித்திரனார் இவ்வாறு பாடிய பிறகு, அதியமான் தன் பிழையை உணர்ந்து, அவரை நேரில் கண்டு தன் பிழையைப் பொறுத்தருளுமாறு வேண்டியதாகவும், அதன் பின்னர், பெருஞ்சித்திரனார் அதியமான் அளித்த பரிசிலை ஏற்றுக்கொண்டதாகவும் அவ்வை. சு. துரைசாமிப் பிள்ளை தம் நூலில் கூறுகிறார்.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.
குன்றும் மலையும் பலபின் ஒழிய
வந்தனென் பரிசில் கொண்டனென் செலற்குஎன
நின்ற என்நயந்து அருளி இதுகொண்டு
ஈங்கனம் செல்க தான்என என்னை
5 யாங்குஅறிந் தனனோ தாங்கரும் காவலன்?
காணாது ஈத்த இப்பொருட்கு யானோர்
வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித்
தினையனைத்து ஆயினும் இனிதுஅவர்
துணைஅளவு அறிந்து நல்கினர் விடினே.
அருஞ்சொற்பொருள்:
1. பின் ஒழிதல் = கடத்தல். 4. ஈங்கனம் = இங்ஙனம், இவ்வாறு. 5. யாங்கு = எவ்வாறு; தாம்க்குதல் = தடுத்தல்; காவலன் = மன்னன். 7. பேணல் = விரும்பல். துணை = அளவு.
உரை: நான் பல குன்றுகளையும் மலைகளையும் கடந்து பரிசில் கொண்டு செல்வதற்கு வந்தேன் என்று கூறிய என் மீது அன்புகொண்டு, “இப்பொருளைக் கொண்டு இவ்வாறு செல்க” என்று பகைவரால் தடுத்தற்கரிய அரசன் அதியமான் கூறுகின்றானே! என்னைப் பற்றி அவனுக்கு என்ன தெரியும்? என்னைக் காணாமல் அவன் அளித்த பொருளை ஏற்றுக்கொள்வதற்கு நான் ஊதியம் மட்டுமே கருதும் வாணிகப் பரிசிலன் அல்லேன். என்னை விரும்பி, என் புலமை, கல்வி முதலியவற்றின் அளவை அறிந்து, திணை அளவே பரிசளித்தாலும் நான் அதை இனியதாகக் கருதுவேன்.
Tuesday, December 28, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment