Thursday, December 2, 2010

189. செல்வத்துப் பயனே ஈதல்!

பாடியவர்: மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் (56, 189, 395). இவர் மதுரைக் கணக்காயனாரின் மகன் என்பதனால் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் என்று அழைக்கப்பட்டார். இவர் கடைசங்கத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர் தெளிந்த அறிவும் சிறந்த புலமையும் உடையவர். இவர் புறநானூற்றில் மூன்று செய்யுள்களையும் (56, 189, 395), அகநானூற்றில் 17 செய்யுள்களையும், நற்றிணையில் 7 செய்யுள்களையும், குறுந்தொகையில் 8 செய்யுள்களையும் இயற்றியவர். மற்றும் பத்துபாட்டில் முதலாவதாகிய திருமுருகாற்றூப்படையையும் ஏழாவதாகிய நெடுநல்வாடையையும் இயற்றியவர் இவரே என்பது குறிப்பிடத்தக்கது. இறையனார் அகப்பொருளுக்கு இவர் எழுதிய உரை மிகவும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. குறுந்தொகையில், “கொங்குதேர் வாழ்க்கை” என்று தொடங்கும் பாடலை (குறுந்தொகை - 2) சிவபெருமான் இயற்றியதாகக் கருதப்படுகிறது. அப்பாடலில் பொருள் குற்றம் இருப்பதாக நக்கீரர் கூறியதாகவும், அப்பொழுது சிவபெருமான் நெற்றிக்கண்ணைத் திறந்து தான் யார் என்பதை நக்கீரருக்குத் தெரிவித்தாகவும், நக்கீரர், “நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே” என்று சொன்னதாகவும் திருவிளையாடல் புராணத்தில் கூறப்படுகிறது. (குறுந்தொகை, புலவர் துரை இராசாராம், திருமகள் நிலையம்)

பாடலின் பின்னணி: வேந்தனாக இருந்தாலும் வேடனாக இருந்தாலும் உணவு, உடை போன்ற அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் ஒன்றுதான். தேவைகளுக்கு மீறிய செல்வம் இருந்தால் அதைப் பயன்படுத்த முடியாது. ஆகவே, தன் செல்வத்தைப் பிறருடன் பகிர்ந்துகொள்வதுதான் செல்வத்தைப் பெற்றதின் பயன். தானே தன் செல்வம் முழுவதையும் அனுபவிக்கலாம் என்று எண்ணுபவர்கள் செல்வத்தின் பயனை இழந்தவர்களாவார்கள் என்ற சிறந்த கருத்தை இப்பாடலில் நக்கீரர் கூறுகிறார். 

  திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது. 

துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல். தெண்கடல் வளாகம் பொதுமை இன்றி வெண்குடை நிழற்றிய ஒருமை யோர்க்கும், நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான் கடுமாப் பார்க்கும் கல்லா ஒருவற்கும், 5 உண்பது நாழி; உடுப்பவை இரண்டே; பிறவும் எல்லாம் ஓரொக் கும்மே; செல்வத்துப் பயனே ஈதல், துய்ப்பேம் எனினே, தப்புந பலவே. 

அருஞ்சொற்பொருள்: 1. பொதுமை = பொதுத்தன்மை; வளாகம் = இடம் (வளைந்த இடம்). 3. யாமம் = நள்ளிரவு; துஞ்சல் = தூங்குதல். 4. கடு = விரைவு; மா = விலங்கு. 5. நாழி = ஒருஅளவு (ஒருபடி). 6. ஓர் - அசை. 8. துய்த்தல் = அனுபவித்தல் 

உரை: தெளிந்த கடலால் சூழப்பட்ட இவ்வுலகம் மற்றவர்களுக்கும் பொதுவானது என்று எண்ணாமல், தானே ஆட்சி செய்யும் ஒருவர்க்கும், பகலும் இரவு தூங்காமல், விரைந்து ஓடும் விலங்குகளை வேட்டையாடுபவனுக்கும் உணவு ஒருபடி அளவுதான்; அவர்கள் உடுப்பது இரண்டு ஆடைகள் தான். அதுபோல், மற்ற தேவைகளிலும் இருவரும் ஒப்பானவரரே ஆவர். ஆகவே, எவ்வளவு செல்வம் இருந்தாலும் ஓரளவுக்கு மட்டுமே அதை அனுபவிக்க முடியும். அதனால், செல்வத்தினால் ஒருவன் பெறக்கூடிய பயன் அதைப் பிறர்க்கு அளித்தலேயாகும். அவ்வாறு பிறர்க்கு அளிக்காமல் தானே அனுபவிக்கலாம் என்று ஒருவன் எண்ணினால் அவன் செல்வத்தினால் வரும் பயன்கள் பலவற்றையும் இழந்தவனாவான்.

4 comments:

கொழந்தவேல் இராமசாமி said...

ஐயா:
189 பாடல் பொரூளில் 11 வது வரியில் ஒரு பிழை உள்ளது. திருத்திய பின், பதில் எழுதவும்.

நன்றி,
வணக்கம்,
கொழந்தவேல் இராமசாமி

Unknown said...

தமிழனின் வாழ்வியல்,அறம் சார்ந்த வாழ்வு வாழ்ந்த்தற்க்கான ஆதாரம் இப்பாடல்

Unknown said...

ஈகை என்ற தலைப்பில்
ஈத்துவக்கும் இன்பம் அறியார்கொல் தாமுடைமை
வைத்திழக்கும் வன்க ணவர்
என்ற திருக்குறளை இதற்கு எ.கா ஆக கூறலாமா?

Nanthaipanalyst said...

சிறப்பு