Thursday, December 2, 2010

193. ஒக்கல் வாழ்க்கை தட்கும்

பாடியவர்: ஓரேருழவர். இவர் இயற்பெயர் தெரியவில்லை. இவர் இயற்றியதாகக் குறுந்தொகையில் ஒருபாடல் (பாடல் எண் 131) உள்ளது. அப்பாடலில், தன் வேலையை முடித்துவிட்டுத் தன் காதலியைக் காண்பதற்கு ஆவலுடன் காதலன் ஒருவன் தேரில் சென்றுகொண்டிருக்கும் காட்சியை இப்புலவர் அழகாகச் சித்திரிக்கிறார். அக்காதலன், தேர்ப்பாகனை நோக்கி, “ மழை பெய்து ஈரமுண்டாகிய நிலத்தை தன்னிடமுள்ள ஒரே ஏரால் உழும் உழவன் எப்படி விரைந்து உழ வேண்டும் என்று எண்ணுவானோ அதுபோல், என் நெஞ்சம் என் காதலியைக் காண விரைகிறது” என்று கூறுகிறான். “ஓரேர் உழவன் போல பெருவிதுப் பற்றன்றால் நோகோ யானே” என்று இப்புலவர் காதலனின் மனநிலையை ஓரே ஒருஏர் மட்டுமே வைத்துள்ள உழவனுக்கு அழகிய உவமையாகக் கூறியதால், இவர் ஓரேருழவர் என்ற பெயர் பெற்றதாகக் கருதப்படுகிறது.
பாடலின் பின்னணி: இப்பாடலின் ஆசிரியர், இல்வாழ்க்கை பல துன்பங்கள் உடையது என்பதை நன்கு உணர்ந்தவர். துன்பங்களால் வாடுங் காலத்து, இவர் உள்ளம் இல்வாழ்க்கையிலிருந்து தப்பியோட விழைந்தாலும், மனைவி, மக்கள் போன்ற சுற்றத்தாராடு கூடிய இல்வாழ்க்கை அதற்குத் தடையாக இருப்பதாகவும் இச்சிறிய பாடலில் நயம்படக் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

அதள்எறிந் தன்ன நெடுவெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே!

அருஞ்சொற்பொருள்:
1. அதள் = தோல்;எறிதல் = நீக்கல்; களர் = களர் நிலம். 2, புல்வாய் = மான். 3. உய்தல் = தப்பிப் பிழைத்தல்; மன் - அசைச் சொல். 4. ஒக்கல் = சுற்றம்; தட்கும் = தடுக்கும்.

உரை: தோலை உரித்துத் திருப்பிப் போட்டதுபோல் உள்ள வெண்மையான நெடிய நிலத்தில் வேட்டுவனிடமிருந்து தப்பியோடும் மான்போல் எங்கேயாவது தப்பியோடிப் பிழைத்துக்கொள்ளலாம் என்றால், அவ்வாறு தப்ப முடியாமல் சுற்றத்தாருடன் கூடிய இல்வாழ்க்கை காலைத் தடுத்து நிறுத்துகிறது.

2 comments:

Unknown said...

தெளிவான விளக்கம்.

முனைவர். பிரபாகரன் said...

நன்றி.
அன்புடன்,
பிரபாகரன்