Thursday, December 2, 2010

194. படைத்தோன் பண்பிலாளன் !

பாடியவர்: பக்குடுக்கை நன்கணியார். இவர் இயற்பெயர் நன்கணியார் என்று சிலர் கூறுவர். வேறு சிலர், இவர் கணிதத்துறையில் ஆற்றல் பெற்றதால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கூறுவர். மற்றும் சிலர், இவர் பக்குடுக்கை என்ற ஊரைச் சார்ந்தவராதலால் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் கூறுவர். பக்கு என்ற சொல்லுக்குப் பை என்று பொருள். ஆகவே, இவர் உடுத்திருந்த ஆடை பை போன்றதாக இருந்ததால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்றும் சிலர் கருதுகின்றனர்.
பாடலின் பின்னணி: வாழ்வில் இன்பமும் துன்பமும் கலந்திருப்பதைக் கண்டு வெறுப்படைந்த நன்கணியார் இன்ப துன்பங்களுக்கு அப்பால், நிரந்தரமான ஒன்று இருக்குமானால், அதை அடையவேண்டும் என்ற கருத்தில் இப்பாடலை இயற்றியிருக்கிறார் என்று தோன்றுகிறது.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

ஓரில் நெய்தல் கறங்க, ஓரில்
ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,
புணர்ந்தோர் பூவணி அணியப் பிரிந்தோர்
பைதல் உண்கண் பனிவார்பு உறைப்பப்;
5 படைத்தோன் மன்றஅப் பண்பி லாளன்;
இன்னாது அம்ம இவ் வுலகம்;
இனிய காண்கஇதன் இயல்புணர்ந் தோரே.

அருஞ்சொற்பொருள்:
1. நெய்தல் = இரங்கற் பறை (சாப்பறை); கறங்கல் = ஒலித்தல். 2. ஈர் = இனிமை; தண் = அருள்; பாணி = (இனிய) ஓசை. 4. பைதல் = துன்பம்; உண்கண் = மை தீட்டிய கண்; வார்ப்பு = வார்த்தல் = ஊற்றுதல்; உறைத்தல் = சொரிதல், உதிர்த்தல்; மன்ற - அசைச் சொல். 6. அம்ம - அசைச் சொல்

உரை: ஒரு வீட்டில் சாவைக் குறிக்கும் பறை ஒலிக்கிறது. மற்றொரு வீட்டில், திருமணத்திற்குரிய இனிய ஓசை அன்புடன் ஒலிக்கிறது. தலைவனோடு கூடிய பெண்கள் பூவும் அணிலன்களும் அணிந்திருக்கிறார்கள். தலைவனைப் பிரிந்த மகளிர், தங்கள் மை தீட்டிய கண்களில் நீர் பெருகி வருந்துகின்றனர். இவ்வாறு இன்பமும் துன்பமும் கலந்திருக்குமாறு இவ்வுலகைப் படைத்தவன் பண்பில்லாதவன். இந்த உலகம் கொடியது. ஆகவே, இந்த உலகத்தின் தன்மையை உணர்ந்தவர்கள் இன்பம் தருவனவற்றைத் தேடிக் கண்டுகொள்க.

1 comment:

திருமந்திரம் உபதேசம் விளக்கம் said...

நன்றி தங்களுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கருத்துக்களை மேலும் தெரிவிக்க வேண்டும்