Thursday, December 2, 2010

186. வேந்தர்க்குக் கடனே!

பாடியவர்: மோசிகீரனார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 154-இல் காணலாம்.
பாடலின் பின்னணி: உடல் இயங்குவதற்கு உயிர் எவ்வளவு இன்றியமையாததோ அது போல் இவ்வுலகுக்கு மன்னன் இன்றையமையாதவன் என்பதை அறிந்து கொள்வது மன்னனின் கடமை என்று இப்பாடலில் மோசிகீரனார் வலியுறுத்துகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

நெல்லும் உயிர் அன்றே; நீரும் உயிர் அன்றே;
மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்;
அதனால், யான்உயிர் என்பது அறிகை
வேன்மிகு தானை வேந்தற்குக் கடனே.

அருஞ்சொற்பொருள்:
2. உயிர்த்து = உயிரை உடையது; மலர்தல் = விரிதல்
உரை: இவ்வுலகுக்கு நெல்லும் நீரும் உயிரல்ல. இவ்வுலகம் மன்னனையே உயிராக உடையது. அதனால், தான் இந்தப் பரந்த உலகுக்கு உயிர் (போன்றவன்) என்பதை அறிந்து கொள்வது (மிகுந்த வேல்களுடன் கூடிய படைகளையுடைய) மன்னனுக்கு கடமையாகும்.

சிறப்புக் குறிப்பு: ஒருநாட்டில் எல்லா வளங்களும் நிறைந்திருந்தாலும், சிறப்பாக ஆட்சி புரியும் மன்னன் இல்லாவிட்டால், அந்த வளங்களால் பயனொன்றுமில்லை என்ற கருத்தைத் திருவள்ளுவர்,

ஆங்கமைவு எய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமைவு இல்லாத நாடு. (குறள் - 740)
என்ற குறளில் கூறுகிறார். மோசிகீரனாரின் கருத்தும் திருவள்ளுவர் கருத்தும் ஒப்பு நோக்கத்தக்கவை.

No comments: