Monday, December 13, 2010

203. இரவலர்க்கு உதவுக

பாடியோர்: ஊன்பொதி பசுங்குடையார் (10, 203, 370, 378). இப்புலவரின் இயற்பெயர் தெரியவில்லை. பனையோலையால் குடை போல் செய்து அதை உணவு உண்பதற்கும், பூப்பறிப்பதற்கும் பழங்காலத்தில் மக்கள் பயன்படுத்தினர். பனையோலையில் ஊன் கொண்டு செல்வதை இவர் “ ஊன்பொதி பசுங்குடை” என்று பாடியதால் இவருக்கு இப்பெயர் வந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
பாடப்பட்டோன்: சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி(10, 203, 370, 378).நெய்தலங்கானல் என்பது இச்சோழன் பிறந்த ஊராகும். இவன் தென்னாட்டுப் பரதவரையும் வடநாட்டு வடுகரையும் வென்று புகழ் கொண்டவன். இவன் பாமுளூர் என்னுமிடத்தும் செருப்பாழி என்னுமிடத்தும் பகைவரை வென்றதால் முறையே பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி என்றும் அழைக்கப்பட்டான். நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, பாமுளூர் எறிந்த இளஞ்சேட் சென்னி, செருப்பாழி எறிந்த இளஞ்சேட் சென்னி ஆகியோர் ஒருவர் அல்ல; அவர் வேறு வேறு மன்னர்கள் என்று கூறுவாரும் உளர்.
பாடலின் பின்னணி: ஊன்பொதி பசுங்குடையார் முன்பு ஒருமுறை சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியைக் கண்டு பரிசில் பெற்றார். அவர் மீண்டும் அவனைக் காண வந்தார். இம்முறை, சோழன் அவருக்கும் மற்ற புலவர்களுக்கும் பரிசில் அளிக்கக் கால தாமதமாக்கினான். அதனால் அவனை நாடி வந்த புலவர்கள் வருத்தமடைந்தனர். இவ்வாறு பரிசில் அளிக்காமல் நீட்டிப்பது சோழன் பாமுளூரெறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னியின் இயல்பு அல்ல என்பதை ஊன்பொதி பசுங்குடையார் அறிந்திருந்தார். “முன்பே மழை பொழிந்தோம் என்று நினைத்து மேகங்கள் மழை பொழியாமல் இருந்தாலோ அல்லது முன்பே விளைச்சலை அளித்தோம் என்று நிலம் மீண்டும் பயிர்களை விளைவிக்காமல் இருந்தாலோ உலகில் உயிர்களுக்கு வாழ்க்கை இல்லை. அதுபோல், முன்பே பரிசளித்ததால் இப்போது நீ பரிசளிக்காமல் இருப்பது முறையன்று . நீ இரவலர்க்குக் கொடுக்காமல் இருப்பவன் அல்லன். இரவலரைப் பாதுகாப்பது உன் கடமையாகும் “ என்று இப்பாடலில் சோழனுக்கு ஊன்பொதி பசுங்குடையார் அறிவுரை கூறுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.

கழிந்தது பொழிந்ததென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் கரப்பினும்
எல்லா உயிர்க்கும் இல்லால் வாழ்க்கை
இன்னும் தம்மென எம்மனோர் இரப்பின்
5 முன்னும் கொண்டிர்என நும்மனோர் மறுத்தல்
இன்னாது அம்ம; இயல்தேர் அண்ணல்!
இல்லது நிரப்பல் ஆற்றா தோரினும்
உள்ளி வருநர் நசையிழப் போரே
அனையையும் அல்லை நீயே, ஒன்னார்
10 ஆர்எயில் அவர்கட் டாகவும் நுமதுஎனப்
பாண்கடன் இறுக்கும் வள்ளியோய்!
பூண்கடன் எந்தை நீஇரவலர் புரவே.

அருஞ்சொற்பொருள்:
1. வான் = மேகம். 2. கரத்தல் = மறைத்தல், கொடாது இருத்தல். 3. ஆல் - அசைச் சொல். 4. தம் = தருக. 6. அம்ம = கேளாய் (கேட்டற்பொருளைத் தழுவி வரும் இடைச்சொல்). 8. நசைதல் = விரும்ம்புதல், அன்பு செய்தல். 10. ஆர் = அரிய; எயில் = மதில். 11. இறுத்தல் = செலுத்துதல், கடமை ஆற்ருதல். 12. புரவு = பாதுகாப்பு.

உரை:கடந்த காலத்தில் பொழிந்தோம் என்று மேகங்கள் மழை பொழியாமல் இருந்தாலோ முற்காலத்தில் விளைச்சலை அளித்தோம் என்று எண்ணி நிலம் விளைச்சலை அளிக்காமல் இருந்தாலோ உயிர்களுக்கு எல்லாம் வாழ்க்கை இல்லை. அதுபோல், மீண்டும் எமக்குப் பரிசில் அளிக்குமாறு எங்களைப் போன்றவர்கள் கேட்டால், “நீங்கள் முன்பே பரிசில் பெற்றுக்கொண்டீர்கள்” என்று மறுத்தல் கொடியது. நான் சொல்வதைக் கேள்! நன்கு செய்யப்பட்ட தேர்களையுடைய தலைவ! தம்மிடத்துள்ள வறுமையினால் தம்மை நாடி வந்தவர்க்குப் பரிசளிக்க இயலாதவர்களைவிட, தம்மை நாடிவந்தவர்களுக்குப் பரிசளிக்கக் கூடிய செல்வம் இருந்தும் பரிசளிக்காதவர்கள், தம்மை நாடிவந்தவர்களால் விரும்பப்படுவதை இழந்தவர்களாவார்கள். ஆனால், நீ அத்தகையவன் அல்லன். நீ, பகைவருடைய அரண்கள் அவர்களிடம் இருக்கும்பொழுதே அவர்களின் பொருளைப் பாணர்களுக்கு கொடுப்பதைக் கடமையாகக்கொண்ட வள்ளன்மை உடையவன். எம் தலைவ! இரப்போரைப் பாதுகாத்தலை நீ கடமையாகக் கொள்வாயாக.

No comments: