Tuesday, December 28, 2010

210. நினையாதிருத்தல் அரிது

பாடியவர்: பெருங்குன்றூர் கிழார். இவரைப் பற்றிய குறிப்புகளைப் பாடல் 147-இல் காண்க.
பாடப்பட்டோன்: சேரமான் குடக்கோச் சேரல் இரும்பொறை. சேர நாடு முழுதும் ஆண்ட மன்னர்களில் இவன் சிறப்பான ஒருஅரசன் என்று கருதப்படுகிறான். இவன் தம்பி சேரன் குடக்கோ இளஞ்சேரலிரும்பொறையும் மிகச் சிறந்த சேரமன்னர்களில் ஒருவன். பெருங்குன்றூர் கிழார் இளஞ்சேரலிரும்பொறையைப் பதிற்றுப்பத்தில் உள்ள ஒன்பதாம் பத்தில் பாடிப் பெருமளவில் பரிசு பெற்றதாக வரலாறு கூறுகிறது.

பாடலின் பின்னணி: சேரன் குடக்கோச் சேரலிரும்பொறையின் கொடைப் புகழைக் கேள்வியுற்ற பெருன்குன்றூர் கிழார் அவனைக் காணச் சென்றார். சேரலிரும்பொறை பெருங்குன்றூர் கிழாருக்குப் பரிசளிக்கக் கால தாமதாக்கினான். அதனால், பெருங்குன்றூர் கிழார் கோபமடைந்தார். “உன்னைப்போல் புலவர்களுக்கு ஆதரவு அளிக்காத வேந்தர்கள் இருந்தால் புலவர்களுக்கு வாழ்வே இல்லை. வறுமையோடு இருந்தாலும் என் மனைவி கற்புடையவள்; ஒருகால் அவள் உயிரிழந்திருக்கலாம்; இறவாது இருந்தால் என்னையே நினைத்துக் கொண்டிருப்பாள். அவளைப் பிரிந்து வாழும் நான் இறந்தேனோ என்று எண்னித் தானும் சாக வேண்டும் என்று தன்னை வருத்திக்கொள்வாள். அவள் வருத்தத்தை தீர்த்தல் வேண்டி நான் அவளை நாடிச் செல்கிறேன்” என்று இப்பாடலில் பெருங்குன்றூர் கிழார் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ் வலிமை கொடை அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

மன்பதை காக்கும்நின் புரைமை நோக்காது
அன்புகண் மாறிய அறனில் காட்சியொடு
நும்ம னோரும்மற்று இனையர் ஆயின்,
எம்மனோர் இவண் பிறவலர் மாதோ;
5 செயிர்தீர் கொள்கை எம்வெம் காதலி
உயிர்சிறிது உடையள் ஆயின், எம்வயின்
உள்ளாது இருத்தலோ அரிதே; அதனால்,
அறனில் கூற்றம் திறனின்று துணியப்
பிறனா யினன்கொல் இறீஇயர் என் உயிர்என
10 நுவல்வுறு சிறுமையள் பலபுலந்து உறையும்
இடுக்கண் மனையோள் தீரிய இந்நிலை
விடுத்தேன்; வாழியர் குருசில்! உதுக்காண்
அவல நெஞ்சமொடு செல்வல்; நிற் கறுத்தோர்
அருங்கடி முனையரண் போலப்
15 பெருங்கை யற்றஎன் புலம்புமுந் துறுத்தே.

அருஞ்சொற்பொருள்:
1.மன்பதை = மக்கள் கூட்டம்; புரைமை = உயர்வு. 2. காட்சி = பார்வை. 5. செயிர் = குற்றம்; வெம் = விருப்பம். 6. வயின் = இடம். 8. திறன் = காரணம். 9. இறீஇயர் = கெடுவதாக. 10. சிறுமை = துன்பம்; புலந்து = வெறுத்து. 11. தீரீஇய = தீர்க்க. 12. உது - அருகிலிருப்பதைக் குறிக்கும் சொல் ”இது”; தொலைவில் இருப்பதைச் சுட்டிக் காட்டப் பயன்படுத்தப்படும் சொல் ”அது”; அருகிலும் இல்லாமல் தொலைவிலும் இல்லாமல் இடைப்பட்ட தூரத்தில் உள்ள பொருளைச் சுட்டிக்காட்டப் பயன்படும் சொல் ”உது”. ”உது” என்னும் சொல் தற்பொழுது வழக்கில் இல்லை. 13. அவலம் = வரித்தம்; கறுத்தோர் = பகைவர். 14. முனை = போர்முனை. 15 கையற்ற = செயலற்ற; புலம்பு = வறுமை; முந்துறுத்து = முன்னே போகவிட்டு.

கொண்டு கூட்டு: குரிசிலே, நும்மனோரும் இனையராயின், எம்மனோர் இவண் பிறவார்; என் காதலி உயிர் சிறிது உடையள் ஆயின் நினையாது இருத்தல் அரிது; அதனால் மனையோள் இடுக்கண் தீர்க்க வேண்டி இப்பொழுதே விடுத்தேன்; நிற்கறுத்தோர் முனையரண்போலக் கையற்ற என் புலம்பு முந்துறுத்துச் செல்வேன்; வாழியர் எனக் கூட்டுக.

உரை: உலகத்து மக்களைக் காக்கும் உயர்ந்த நிலையில் உள்ள உன் போன்றவர்கள் தங்கள் நிலையைக் கருதாமல், அன்பில்லாமலும், அறத்தோடு பொருந்தாத பார்வையோடும் இருந்தால் என் போன்றவர்கள் இவ்வுலகத்தில் பிறவாமல் இருப்பார்களாக. என் மனைவி குற்றமற்ற கற்புடையவள்; என்னை விரும்புபவள். அவள் உயிருடன் இருந்தால் என்னை நினையாது இருக்கமாட்டாள். அதனால், அறமற்ற கூற்றுவன் காரணமின்றி முடிவெடுத்ததால், நான் இறந்ததாக எண்ணித் தன் உயிர் ஒழியட்டும் என்று சொல்லி வருத்தத்துடனும் பலவகையிலும் வெறுப்போடும் வாழ்ந்துகொண்டிருக்கும் என் மனைவியின் துன்பம் தீர்க்க விரும்பி, இப்பொழுதே செல்கிறேன். இதோ பார்! நான் வருந்திய மனத்தோடு செல்கிறேன். உன்னால் தாக்கப்பட்ட உன் பகைவர்களின் அரண்கள் அழிவதைப்போல், என்னை நிலைகலங்கவைக்கும் என் வறுமையை முன்னே போகவிட்டு நான் பின்னே செல்கிறேன். அரசே, நீ வாழ்க!

No comments: