Thursday, December 2, 2010

190. எலியும் புலியும்

பாடியவர்: சோழன் நல்லுருத்திரன் (190). இவன் சங்க காலத்துச் சோழர்களுள் காலத்தாற் பிற்பட்டவன் என்பது இவன் பெயரிலிருந்து தெரிய வருகிறது. புறநானூற்றில் இவன் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடலின் பின்னணி: பிறருடைய முயற்சியால் வாழ்பவர்களின் நட்பைத் தவிர்த்து, நல்ல கொள்கை உடையவர்களின் நட்பைக்கொள்ள வேண்டும் என்று இப்பாடலில் சோழன் நல்லுருத்திரன் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

விளைபதச் சீறிடம் நோக்கி, வளைகதிர்
வல்சி கொண்டு, அளை மல்க வைக்கும்
எலிமுயன் றனைய ராகி, உள்ளதம்
வளன்வலி உறுக்கும் உளம் இலாளரோடு
5 இயைந்த கேண்மை இல்லா கியரோ;
கடுங்கண் கேழல் இடம்பட வீழ்ந்தென,
அன்று அவண் உண்ணா தாகி, வழிநாள்
பெருமலை விடரகம் புலம்ப, வேட்டெழுந்து
இருங்களிற்று ஒருத்தல் நல்வலம் படுக்கும்
10 புலிபசித் தன்ன மெலிவில் உள்ளத்து
உரனுடை யாளர் கேண்மையொடு
இயைந்த வைகல் உளவா கியரோ.

அருஞ்சொற்பொருள்:
1. பதம் = பருவம்; சீறிடம் = சிறிய இடம். 2. வல்சி = உணவு; அளை = வளை; மல்கல் = நிறைதல். 4. உறுத்தல் = இருத்தல். 5. கேண்மை = நட்பு. 6. கேழல் = பன்றி. 7. அவண் = அவ்விடம், அவ்விதம்; வழிநாள் = மறுநாள். 8. விடர் = குகை; புலம்பு = தனிமை; வேட்டு = விரும்பி. 9. இரு = பெரிய; ஒருத்தல் =ஆண் விலங்குக்குப் பொதுப்பெயர். 10. மெலிவு = தளர்ச்சி. 11. உரன் = வலிமை, அறிவு, ஊக்கம். 12. வைகல் = நாள்.

உரை: நெல் விளைந்த சமயத்தில், சிறிய இடத்தில், கதிர்களைக் கொண்டுவந்து உணவுப்பொருட்களை சேகரித்துவைக்கும் எலி போன்ற முயற்சி உடையவராகி, நல்ல உள்ளம் இல்லாமல், தம்முடைய செல்வத்தை இறுகப் பிடித்துக் கொள்பவர்களுடன் நட்பு கொள்வதைத் தவிர்க. கொடிய பார்வையையுடைய பன்றி, தன்னால் தாக்கப்பட்டவுடன் இடது பக்கமாக விழுந்தது என்பதால் அதை உண்ணாது, பெரிய குகையில் தனித்திருந்து, பின்னர் வேட்டையாட விரும்பி, எழுந்து, பெரிய யானையைத் தாக்கி வலப்பக்கம் வீழ்த்தி அதை உண்ணும் பசியுடைய புலிபோல் தளராத கொள்கையையுடைய வலியவர்களோடு நட்பு கொள்க.

சிறப்புக் குறிப்பு: தன்னால் தாக்கப்பட்ட விலங்கு இடப்பக்கமாக வீழ்ந்தால் அதைப் புலி உண்ணாது என்ற கருத்து சங்க காலத்தில் நிலவியது என்பதற்குச் சான்றாக அகநானூற்றிலும் ஒருபாடல் காணப்படுகிறது.

தொடங்குவினை தவிரா அசைவுஇல் நோன்தாள்
கிடந்துஉயிர் மறுகுவது ஆயினும் இடம்படின்
வீழ்களிறு மிசையாப் புலி…… (அகநானூறு, 29, 1-3)

No comments: