பாடியவர்: கபிலர்.
பாடப்பட்டவன்: விச்சிக்கோ. இளவிச்சிக்கோ என்பவன் பெண்கொலை புரிந்த நன்னன் என்பவனின் வழித்தோன்றல் என்ற காரணத்தால் அவனைப் பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர் தழுவாது, அவனுடன் இருந்த இளங்கண்டிராக்கோ என்பவனை மட்டும் தழுவியதாகப் புறநானூற்றுப் பாடல் 151 கூறுகிறது. இப்பாடலில் பாடப்பட்ட விச்சிக்கோ அந்த இளவிச்சிக்கோவின் தமையன்.
படலின் பின்னணி: பாரி இறந்த பிறகு கபிலர், பாரியின் மகளிர் இருவரையும் தகுந்த அரசர்க்குத் திருமணம் செய்விக்க விரும்பினார். அவர் பாரியின் மகளிரோடு விச்சிக்கோவைக் கண்டு, அவர்களைத் திருமணம் செய்துகொள்ளுமாறு அவனை வேண்டுவதாக இப்பாடல் அமைந்துள்ளது. ஆனால், விச்சிக்கோ பாரி மகளிரைத் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று கருதப்படுகிறது.
திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்.
பனிவரை நிவந்த பாசிலைப் பலவின்
கனிகவர்ந் துண்ட கருவிரல் கடுவன்
செம்முக மந்தியொடு சிறந்து சேண்விளங்கி
மழைமிசை அறியா மால்வரை அடுக்கத்துக்
5 கழைமிசைத் துஞ்சும் கல்லக வெற்ப,
நிணம்தின்று செருக்கிய நெருப்புத்தலை நெடுவேல்
களங்கொண்டு கனலும் கடுங்கண் யானை
விளங்குமணி கொடும்பூண் விச்சிக் கோவே,
இவரே, பூத்தலை அறாஅப் புனைகொடி முல்லை
10 நாத்தழும்பு இருப்பப் பாடாஅது ஆயினும்
கறங்குமணி நெடுந்தேர் கொள்கெனக் கொடுத்த
பரந்துஓங்கு சிறப்பிற் பாரி மகளிர்
யானே, பரிசிலன் மன்னும், அந்தணன்; நீயே,
வரிசையில் வணக்கும் வாள்மேம் படுநன்;
15 நினக்கியான் கொடுப்பக் கொண்மதி; சினப்போர்
அடங்கா மன்னரை அடக்கும்
மடங்கா விளையுள் நாடு கிழவோயே!
அருஞ்சொற்பொருள்:
1. நிவத்தல் = படர்தல், அலர்தல், உயர்தல்; பாசிலை = பசுமையான இலை, பல = பலா. 3. சேண் = தொலைதூரம். 4. மழை = மேகம்; மால் = மலை; அடுக்கம் = பக்க மலை. 5. கழை = மூங்கில்; கல்லகம் = மலை; வெற்பு = மலை. 6. செரு = போர். 11. கறங்கல் = ஒலித்தல். 17. மடங்கா = குறையாத.
உரை: உன் நாட்டில், மேகங்கள்கூட எட்ட முடியாத அளவுக்கு உயரமான மலைகள் உள்ளன. அம்மலைகளின் உச்சியில் மூங்கில் காடுகள் உள்ளன. அந்தக் குளிர்ந்த மலைகளில் வளர்ந்த பசுமையான இலையையுடைய பலாவின் பழத்தைக் கவர்ந்து உண்ட கரிய விரலுடைய ஆண்குரங்கு, சிவந்த முகத்தையுடைய பெண்குரங்கோடு, மலைச் சிகரத்தில் உள்ள மூங்கிலின் மேல் உறங்கும். அத்தகைய மலைநாட்டுத் தலைவா! போரில் பகைவரைத் தாக்கியதால் புலால் மற்றும் குருதிக் கறைபடிந்து நெருப்பைப்போல் சிவந்த நிறமுடைய வேலையையும், போர்க்களத்தைத் தனதாக்கிக்கொண்ட யானைகளையும் ஒளிரும் மணிகளுடைய அணிகலன்களையும் உடைய விச்சிக்கோவே!
பூவைத் தலையில் வைத்ததைப்போல் உள்ள முல்லைக் கொடி ஒன்று படர்வதற்குக் கொழுக்கொம்பின்றி இருந்ததைக் கண்ட பாரி, அம்முல்லைக்கொடி தன்னைப் புகழந்து பாடாது என்பதை அறிந்திருந்தும், அக்கொடி படர்வதற்கு ஒலிக்கும் மணிகள் பொருந்திய தன் தேரைக் கொழுகொம்பாகக் கொடுத்தான். இவர்கள் அத்தகைய பரந்த புகழுடைய பாரியின் சிறப்புடைய மகளிர். நான் பாடிப் பரிசுபெறும் அந்தணன். நீயோ, பகைவருடன் போர் செய்யும் முறைகளை நன்கு அறிந்து வாளால் மேம்பட்டவன். இவர்களை மணமகளிராகத் தருகிறேன். நீ இவர்களை ஏற்றுக்கொள்வாக.
அடங்காத அரசர்களைச் சினத்தோடு போர்புரிந்து, அடக்கும் குறையாத விளைவுடைய வளமான நாட்டுக்கு உரிமை உடையவனே!
Thursday, December 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
You have done great work here sir....i must thank you for providing such a wonderful and useful site.,,
Great Keep up up your work!!!
Post a Comment