Thursday, December 2, 2010

197. நல்குரவு உள்ளுதும்

பாடியவர்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார்.
பாடப்பட்டோன்: சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் (58, 61, 167, 180, 197, 394). இச்சோழ மன்னன் குராப்பள்ளி என்னும் இடத்தில் இறந்ததால் சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் என்று அழைக்கப்பட்டான். இவன் காலத்தில், சேர நாட்டில் குட்டுவன் கோதையும் பாண்டிய நாட்டில் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதியும் ஆட்சி புரிந்தனர். இவனைப் பாடியவர்கள்: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக்கண்ணனார், மருத்துவன் உறையூர் தாமோதரனார்.
பாடலின் பின்னணி: கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறனைக் காணச் சென்றார். அவன் இப்புலவர்க்குப் பரிசளிப்பதற்குக் கால தாமதமாக்கினான். அதனால் கோபமடைந்த கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார், “அரசே, அரசர்களிடம் தேர்களும் படைகளும் மிகுதியாக இருப்பதாலோ, பல போர்களில் அவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதற்காகவோ நாங்கள் அவர்களை வியந்து பாராட்டுவதில்லை. சிறிய ஊரின் மன்னர்களாக இருந்தாலும் எங்கள் பெருமையை உணர்ந்தவர்களைத் தான் நாங்கள் பாராட்டுவோம். எத்துணைத் துன்பம் வந்தாலும் உண்மை உணர்வும் நல்லறிவும் இல்லாதவர்களின் செல்வத்தை விரும்பமாட்டோம். நல்லறிவு உடையவர்கள் வறுமையில் இருந்தாலும் அவர்களைப் பெரிதும் பாராட்டுவோம்” என்று இப்பாடலில் தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

வளிநடந் தன்ன வாஅய்ச் செலல் இவுளியொடு
கொடிநுடங்கு மிசைய தேரினர் எனாஅக்
கடல்கண் டன்ன ஒண்படைத் தானையடு
மலைமாறு மலைக்குங் களிற்றினர் எனாஅ
5 உரும்உடன் றன்ன உட்குவரு முரசமொடு
செருமேம் படூஉம் வென்றியர் எனாஅ
மண்கெழு தானை ஒண்பூண் வேந்தர்
வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே;
எம்மால் வியக்கப் படூஉ மோரே
10 இடுமுள் படப்பை மறிமேய்ந்து ஒழிந்த
குறுநறு முஞ்ஞைக் கொழுங்கண் குற்றடகு
புன்புல வரகின் சொன்றியடு பெறூஉம்
சீறூர் மன்னர் ஆயினும் எம்வயின்
பாடறிந்து ஒழுகும் பண்பி னாரே;
15 மிகப்பேர் எவ்வம் உறினும் எனைத்தும்
உணர்ச்சி யில்லோர் உடைமை யுள்ளேம்;
நல்லறி வுடையோர் நல்குரவு
உள்ளுதும்; பெரும யாம் உவந்துநனி பெரிதே.

அருஞ்சொற்பொருள்:
1. வளி = காற்று; வாவுதல் = தாவுதல்; இவுளி = குதிரை. 2. நுடங்குதல் = ஆடல், துவளல், முடங்குதல், தள்ளாடுதல், வளைதல்; எனா - இடைச்சொல். 5. உரும் = இடி; உட்கு = அச்சம். 6. செரு = போர். 10. படப்பை = தோட்டம்; மறி = ஆட்டுக்குட்டி. 11. அடகு = கீரை; முஞ்ஞை = முன்னை. 12. சொன்றி = சோறு. 14. பாடறிந்து ஒழுகும் பண்பு = பண்பாடு. 15. எவ்வம் = துன்பம். 17. நல்குரவு = வறுமை. 18. நனி = மிகவும்.

உரை: காற்றைப்போல் தாவிச்செல்லும் குதிரைகளும், கொடிகள் அசைந்தாடும் தேர்களும், கடல்போன்ற படையும், மலையையும் எதிர்த்துப் போர் புரியவல்ல களிறுகளும் உடையவர்கள் என்பதற்காகவோ, இடிபோல் ஒலிக்கும் அச்சம்தரும் முரசோடு போரில் வெற்றி பெற்றவர்கள் என்பதற்காகவோ, பெருநிலமாளும், ஒளிபொருந்திய அணிகலன்கள் அணிந்த அரசர்களின் வெண்கொற்றக்குடையுடன் விளங்கும் செல்வத்தை நாங்கள் மதிப்பது இல்லை. முள்வேலியுடைய தோட்டத்தில் ஆடு மேய்ந்தது போக மிஞ்சியுள்ள சிறிய இலையுள்ள, மணம் நிறைந்த முன்னைக் கீரையை புன்செய் நிலத்தில் விளைந்த வரகுச் சோற்றுடன் உண்ணும் மக்களுடைய சிறிய ஊர்க்கு அரசனாக இருந்தாலும் எம்மிடத்துப் பழகும் முறை அறிந்து நடக்கும் பண்பு உடையவர்களைத்தான் நாங்கள் மதிப்போம். மிகப்பெரிய துன்பமுற்றாலும், எங்களிடம் அன்பில்லாதவர்களின் செல்வத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். பெரும! நல்ல அறிவுடையவர்களின் வறுமையை மிகவும் மகிழ்வோடு பெருமையாகக் கருதுவோம்.

சிறப்புக் குறிப்பு:

பழிமலைந்து எய்திய ஆக்கத்தின் சான்றோர்
கழிநல் குரவே தலை. (குறள் - 657)
என்ற குறளில், பழியை மேற்கொண்டு செய்த செயல்களால் பெற்ற செல்வத்தைவிட, சான்றோர்களின் மிகுந்த வறுமையே சிறந்தது என்று திருவள்ளுவர் கூறுவது இப்பாடலில் கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் கூறும் கருத்தோடு ஒத்திருப்பதைக் காண்க.

1 comment:

Rekash S said...

ஐயா ஒரு புறநானூற்றுப் பாடலை பாடியவர் பாடப்பட்டோன் மற்றும் இப்பாடல் எந்தப் பின்னணியில் அமைந்துள்ளது என்பதையும் நீங்கள் குறிப்பிட்டது படிப்பதற்கு மிகவும் ஆர்வமாக உள்ளது.. அதுமட்டுமல்லாமல் பாடலும் அதற்கு பின்னே உரையையும் மீண்டும் அதன்பின் சொற் பொருள்களும் நீங்கள் கொடுத்து இருக்கிறார்கள் இது மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி ஐயா

ஒரே ஒரு வேண்டுகோள் நீங்கள் இங்கு குறிப்பிட்டுள்ளதை புத்தகமாக வெளியிட்டு இருந்தால் அதன் விவரத்தை கொஞ்சமும் கூறினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...

ஏனென்றால் எளிய நடையில் உரை அமைந்துள்ளது அதனை பள்ளி இறுதி ஆண்டு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை வாசித்தால் எளிதாகப் புரியும்படி உள்ளது நன்றி ஐயாஏனென்றா