Monday, December 13, 2010

204. அதனினும் உயர்ந்தது

பாடியவர்: கழைதின் யானையார். மூங்கிலைத் தின்னும் யானையைப் பற்றி நயமாக உவமித்து கவிதை பாடியதால் இவர் இப்பெயர் பெற்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இவர் இயற்பெயர் தெரியவில்லை. புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே.
பாடப்பட்டோன்: வல்வில் ஓரி. இவனைப் பற்றிய குறிப்புகளை 152-ஆம் பாடலில் காண்க.
பாடலின் பின்னணி: வல்வில் ஓரி கொல்லிமலைப் பகுதியை ஆண்ட குறுநில மன்னன். அவன் கடையெழு வள்லல்களில் ஒருவன். அவனை வன்பரணர் என்ற புலவர் புகழ்ந்து பாடியதை பாடல்கள் 152 மற்றும் 153 ஆகியவற்றில் காணலாம். ஒருகால், கழைதின் யானையார் வல்வில் ஓரியைக் காணவந்தார். அச்சமயம் வல்வில் ஓரி அவருக்குப் பரிசு அளிக்கவில்லை. அவன் பரிசளிக்கவிட்டாலும் அவருக்கு அவன் மீது வெறுப்பில்லை என்பதை இப்பாடலில் கூறுகிறார். மற்றும், இரப்போர்க்கும் அளிப்போர்க்கும் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும் இப்பாடலில் குறிப்பிடுகிறார்.

திணை: பாடாண். ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் துறை. புரவலன் முன் இரவலர் தாம் பெற விரும்பியது இது எனக் கூறுதல்

ஈஎன இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள்எனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதன்எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று;
5 தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப நீர்வேட் டோரே;
ஆவும் மாவும் சென்றுஉணக் கலங்கிச்
சேறொடு பட்ட சிறுமைத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்
10 புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால்
புலவேன் வாழியர் ஓரி; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் நின்னே.

அருஞ்சொற்பொருள்:
1. இழிந்தன்று = இழிந்தது. 3. உயர்ந்தன்று = உயர்ந்தது. 5. இமிழ் = ஒலி. 6. வேட்டல் = விரும்பல். 7. ஆ = பசு; மா = விலங்கு. 8. அதர் = வழி. 10. புள் = பறவை. 12. புலத்தல் = வெறுத்தல். கருவி வானம் = கரிய நிறமுடைய மேகம்.

கொண்டு கூட்டு: ஓரி, வள்ளியோய், பரிசிலர் புள்ளும் பொழுதும் பழித்தலல்லது உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனால் யானும் நின்னைப் புலவேன், வாழியர் எனக் கூட்டுக.

உரை: ஒருவனிடம் சென்று இரத்தல் இழிந்தது. அவ்வாறு ஒருவன் கேட்ட பிறகு, கொடுக்கமாட்டேன் என்று மறுப்பது அதைவிட இழிந்தது. ஒருவன் இரப்பதன்முன் இப்பொருளை எடுத்துக்கொள் என்று கொடுப்பது உயர்ந்தது. அப்படிக் கொடுத்த பிறகு அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று கூறுவது அதைவிட உயர்ந்தது. நீர் வேட்கை (தாகம்) எடுத்தால் தெளிந்த நீர் பரப்பையுடைய கடல் நீரைக் குடிக்க முடியாது. பசுக்களும் மற்ற விலங்குகளும் உண்ணுவதால் சேறுடன் கலங்கிய நீர் சிறிதளவே இருந்தாலும் அதைத் தேடிப் பல வழிகளில் பலரும் செல்வர்.
உன்னைப் போன்றவர்களிடத்துப் பரிசில் பெறச் செல்பவர்கள் தமக்குப் பரிசில் கிடைக்காவிட்டால், தாம் புறப்பட்ட நேரத்தையும் சகுனத்தையும் பழிப்பார்களே அன்றி, உன்னைப்போல் வரையாது கொடுக்கும் வள்லல்களைப் பழிக்க மாட்டார்கள். ஆகவே, நீ எனக்குப் பொருள் வழங்கவில்லை என்றாலும் நான் உன்னை வெறுக்க மாட்டேன். ஓரி, நீ வாழ்க! வானத்தில் உள்ள கரிய மேகம் மழைபொழிவதுபோல் குறையாது பரிசளிக்கும் வள்ளலே!

No comments: