Thursday, December 2, 2010

199. கலிகொள் புள்ளினன்

பாடியவர்: பெரும்பதுமனார். புறநானூற்றில் இவர் இயற்றிய பாடல் இது ஒன்றே. இவர் குறுந்தொகையில் ஒரு செய்யுளும் (7), நற்றிணையில் இரண்டு செய்யுள்களும் (2, 109) இயற்ரியுள்ளார். இவருடைய பாடல்களில் உவமை நயம் மிகுந்து காணப்படுகிறது.
பாடலின் பின்னணி: பாணர், விறலியர், கூத்தர், பொருநர், புலவர் ஆகியோர் மீண்டும் மீண்டும் செல்வந்தர்களிடத்தே சென்று பரிசு பெறுவதைப் பற்றித் தன் கருத்தை இப்பாடலில் பெரும்பதுமனார் கூறுகிறார்.

திணை: பாடாண் திணை. ஒருவருடைய புகழ், வலிமை, கொடை, அருள் ஆகிய நல்லியல்புகளைச் சிறப்பித்துக் கூறுவது.
துறை: பரிசில் கடாநிலை. பரிசில் கடா நிலை என்பது “உன்னைப் பாடிய யாவரும் பரிசில் பெற்றனர்” என்று கூறித் தனக்கும் பரிசில் வேண்டும் என்று புரவலரிடம் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவது.

கடவுள் ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம்
நெருநல் உண்டனம் என்னாது பின்னும்
செலவுஆ னாவே கலிகொள் புள்ளினம்;
அனையர் வாழியோ இரவலர்; அவரைப்
5 புரவுஎதிர் கொள்ளும் பெருஞ்செய் ஆடவர்
உடைமை ஆகும்அவர் உடைமை;
அவர் இன்மை ஆகும் அவர் இன்மையே.

அருஞ்சொற்பொருள்:
1. தடவு = பெரிய; சினை = மரக்கொம்பு. 2. நெருநல் = நேற்று. 3. ஆனா = அமையாது; கலி = ஒலி. 4. வாழி, ஓ - அசைச் சொற்கள். 5. புரவு = பாதுகாப்பு. 7. இன்மை = வறுமை.

உரை: கடவுள் உறையும் ஆலமரத்தின் பெரிய கிளைகளில் இருந்த பழங்களை நேற்று உண்டோம் என்று நினைத்து ஆரவாரமாக ஒலிக்கும் பறவைகள் அம்மரத்தைவிட்டு விலகுவதில்லை. இரவலர்களும் அப்பறவைகள் போன்றவர்கள்தான். இரவலர்களை எதிர்பார்த்து அவர்களுக்கு ஆதரவு அளிக்கும் புரவலர்களின் செல்வம்தான் இரவலர்களின் செல்வம். புரவலர்கள் வறுமையுற்றால் இரவலர்களுக்கும் வறுமைதான்.

சிறப்புக் குறிப்பு: பறவைகள் ஆலமரத்தில் உள்ள பழங்களைத் தின்று, அப்பழங்களில் உள்ள விதைகளைத் தம் எச்சத்தின் மூலம் வெளிப்படுத்திப் பல்வேறு இடங்களில் புதிய ஆலமரங்கள் முளைத்துத் தழைக்க வழி செய்கின்றன. அதுபோல், இரவலர்கள் புரவலர்களிடம் பரிசுபெற்று, பல்வேறு ஊர்களுக்குச் சென்று பரிசளித்த இரவலர்களின் புகழைப் பரப்புவதால், ஆங்காங்கே, புதுப் புரவலர்கள் தோன்றக்கூடும். (அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை, புறநானூறு, பகுதி 1, பக்கம் 432-433)

No comments: