Thursday, December 2, 2010

191. நரையில ஆகுதல் யாங்கு ஆகியர்?

பாடியவர்: பிசிராந்தையர்
பாடலின் பின்னணி: தனக்கு வயதாகியும் நரையின்றி இளமையாக இருப்பதற்குரிய காரணங்களை இப்பாடலில் பிசிராந்தையார் தொகுத்துக் கூறுகிறார்.
திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுதல்.
துறை: பொருண்மொழிக் காஞ்சி. உயிருக்கு உறுதியளிக்கும் இம்மை மறுமைக் கடன்களை எடுத்துக் கூறுதல்.

“யாண்டுபல வாக நரையில ஆகுதல்
யாங்கு ஆகியர்?” என வினவுதிர் ஆயின்,
மாண்டஎன் மனைவியோடு மக்களும் நிரம்பினர்;
யான்கண் டனையர்என் இளையரும்; வேந்தனும்
5 அல்லவை செய்யான் காக்கும்; அதன்தலை,
ஆன்றுஅவிந்து அடங்கிய கொள்கைச்
சான்றோர் பலர்யான் வாழும் ஊரே.

அருஞ்சொற்பொருள்:
1. யாண்டு = ஆண்டு. 2. யாங்கு = எவ்வாறு, எங்ஙனம். 3. மாண்ட = மாட்சிமைப் படுதல். 4. இளையர் = வேலையாட்கள்.

உரை: “தங்களுக்கு இவ்வளவு வயதாகியும் தாங்கள் எப்படி நரையில்லாமல் இருக்கிறீர்கள்?” என்று கேட்பீர்களானால், சொல்கிறேன். “சிறப்பான என் மனைவியோடு, என்னுடைய மக்களும் அறிவு நிரம்பப் பெற்றவர்கள். நான் எண்ணுவது போலவே, என்னிடம் பணிபுரிபவர்களும் எண்ணிப் பணியாற்றுகிறார்கள். என் வேந்தன் முறையல்லாதவற்றைச் செய்யாமல் நாட்டை ஆட்சி செய்கிறான். நான் வாழும் ஊரில், மாட்சிமைக்குரிய நற்குணங்களும் நல்லொழுக்கங்களும் நிறைந்து ஐம்புலன்களையும் வென்று, பணிவோடும் சிறந்த கொள்கைகளோடும் வாழும் சான்றோர்கள் பலர் உள்ளனர்.”