Wednesday, September 29, 2010

185. ஆறு இனிது படுமே!

பாடியவர்: தொண்டைமான் இளந்திரையன் (185). இவன் காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த தொண்டைமான் மரபினன். இவன் கடியலூர் உருத்திரங்கண்ணனார் இயற்றிய பெரும்பாணாற்றுப்படைக்குப் பாட்டுடைத் தலைவன். இவன் சிறந்த அரசனாகவும், கொடை வள்ளலாகவும் இருந்தது மட்டுமல்லாமல் நல்ல தமிழ்ப்புலமை உடையனாகவும் விளங்கினான். இவன் நற்றிணையிலும் மூன்று பாடல்களை (94, 99, 106) இயற்றியுள்ளான்.

பாடலின் பின்னணி: இப்பாடலில், “அரசன் ஆட்சி புரியும் ஆற்றல் உடையவனாக இருந்தால் நாடு நலம் பெறும்; அவன் ஆற்றல் அற்றவனாக இருந்தால் பலவகையான துன்பங்கள் வந்து சேரும்” என்று தன் கருத்தைத் தொண்டைமான் இளந்திரையன் கூறுகிறான்.

திணை: பொதுவியல். எல்லாத் திணைகளுக்கும் பொதுவான செய்திகளைத் தொகுத்துக் கூறுவது.
துறை: பொருண்மொழிக் காஞ்சி . உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்.

கால்பார் கோத்து ஞாலத்து இயக்கும்
காவற் சாகாடு உகைப்போன் மாணின்
ஊறுஇன்றாகி ஆறுஇனிது படுமே;
உய்த்தல் தேற்றான் ஆயின் வைகலும்
5 பகைக்கூழ் அள்ளற் பட்டு
மிகப்பல் தீநோய் தலைத்தலைத் தருமே.

அருஞ்சொற்பொருள்:
1. கால் = வண்டிச் சக்கரம்; பார் = வண்டியின் அடிமரம் (அச்சு); ஞாலம் = உலகம். 2. சாகாடு = வண்டி; உகைத்தல் = செலுத்துதல்; மாண் = மாட்சிமை. 4. உய்த்தல் = செலுத்தல்; தேற்றான் = தெளியான்; வைகலும் = நாளும். 5. அள்ளல் = சேறு; கூழ் அள்ளல் = கலங்கிய சேறு. 6. தலைத்தலை = மேன்மேல்.
உரை: சக்கரத்தோடு அடிமரமும் சேர்ந்து இயங்கும் வண்டியைப் போன்றது இவ்வுலகம். வண்டியைச் செலுத்துபவன் திறமை உடையவனாக இருந்தால் வண்டி இடையூறு இல்லாமல் செல்லும். அவன் திறமை இல்லாதவனாக இருந்தால் வண்டி சேற்றில் சிக்கிக் கொள்ளும். அது போல், மன்னன் மாட்சிமை பொருந்தியவனாக இருந்தால் நாடு நலம் பெறும். மன்னன் தெளிவில்லாதவனாக இருந்தால், பகை என்னும் சேற்றில் நாடு மூழ்கி ஒவ்வொரு நாளும் பலவிதமான கொடிய துன்பங்கள் மேலும் மேலும் வந்து சேரும்.

No comments: