Sunday, April 1, 2012

312. காளைக்குக் கடனே!

312. காளைக்குக் கடனே!

பாடியவர்: பொன்முடியார். இவரைப் பற்றிய குறிப்புக்களைப் பாடல் 299-இல் காண்க.

பாடலின் பின்னணி: இப்பாடலில், பொன்முடியார் ஒரு ஆண்மகனின் கடமையையும், அவனுடைய தாய், தந்தை, கொல்லர், அரசன் ஆகியோரின் கடமைகளையும் குறிப்பிடுகிறார்.

திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.

துறை: மூதின் முல்லை. வீரர்க்கல்லாமல் அம்மறக்குடியிற் பிறந்த மகளிர்க்கும் சினமுண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்.

ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே;

சான்றோன் ஆக்குதல் தந்தைக்குக் கடனே; 

வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே; 

நன்னடை நல்கல் வேந்தற்குக் கடனே; 

ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக் 5

களிறுஎறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே.

அருஞ்சொற்பொருள்: 1. புறந்தருதல் = பாதுகாத்தல்; கடன் = கடமை; தலை = இடம்; முதன்மை. 2. சான்றோன் = அறிஞன், வீரன். 3. வடித்தல் = உருவாக்கல். 4. நன்மை = மிகுதி; நடை = செல்வம், ஒழுக்கம், நடத்தை; நல்கல் = அளித்தல். 5. ஒளிறுதல் = விளங்குதல்; சமம் = போர்; முருக்குதல் = அழித்தல், முறித்தல். 6. எறிதல் = வெல்லுதல்; பெயர்தல் = மீளல்.

உரை: மகனைப் பெற்று வளர்த்துப் பாதுகாத்தல் என் (தாயின்) தலையாய கடமை. அவனை நற்பண்புகள் நிறையப் பெற்றவனாக்குதல் அவன் தந்தையின் கடமை. அவனுக்குத் தேவையான வேலை (படைக் கருவிகளை) உருவாக்கிக் கொடுத்தல் கொல்லரின் கடமை. அவனுக்கு நல்லொழுக்கத்தைக் கற்பிப்பது அரசனின் கடமை. ஓளியுடன் விளங்கும் வாளைக் கையில் ஏந்தித் தடுத்தற்கரிய போரைச் செய்து, பகைவரின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் மீள்வது அம்மகனின் கடமை.

சிறப்புக் குறிப்பு: ’சான்றோன்’ என்ற சொல்லுக்கு ‘வீரன்’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, தன் மகனை வீரனாக்குவது தந்தையின் கடமை என்றும் பொன்முடியார் கூறுவதுபோல் தோன்றுகிறது. அவனுக்கு வேல் வடித்துக் கொடுத்தல் கொல்லரின் கடமை. போருக்குச் சென்று பகைவர்களின் யானைகளைக் கொன்று வெற்றியுடன் திரும்பி வருதல் அவ்விளைஞனின் கடமையாகும். ‘நடை’ என்ற சொல்லுக்கு ‘செல்வம்’ என்றும் பொருள் கொள்ளலாம். ஆகவே, யானைகளைக் கொன்ற இளைஞனுக்குப் பரிசாகச் செல்வம் அளிப்பது வேந்தனின் கடமை என்றும் பொருள் கூறலாம். ‘நன்னடை’ என்பதின் பாடபேதமாக “தண்ணடை” என்று சிலநூல்களில் காணப்படுகிறது. ‘தண்ணடை’ என்பதற்கு ‘மருத நிலத்து ஊர்’ என்று பொருள். சிறப்பாகப் போர் புரிந்த வீரர்களுக்கு அரசர்கள் ’தண்ணடை’ அளித்ததாக பாடல் 297-இல் காணலாம்.

5 comments:

vivek said...

When I read the last two lines, it conveys

With glowing sword - in the battle field - kill

The word முருக்கிக் - ends the action there.

In the following line

winning over the elephant and getting away safely is the duty of warrior


I couldn't get the meaning of 'kill elephants' from the sentence structure, please correct me if I'm wrong

முனைவர். பிரபாகரன் said...


Dear Vivek,

Sorry for the delayed response. I happened to see your comments only yesterday. As you mentioned, the action does not end with the penultimate line. The idea is that the young man should fight hard in the war and also kill the enemy’s elephant and return triumphantly. It was always considered that killing the enemy’s elephant was a challenging and difficult task and a real hero would be capable of accomplishing the difficult task.

As per your suggestion, I have made a small change in my commentary.
If you have any questions or comments, please respond to my email (prabu0111@gmail.com).
I appreciate your interest in my blogs and your keen observation.

anbudan,
Prabhakaran

Muthuraman said...

I love to see your English translations. Very nice work sir.

முனைவர். பிரபாகரன் said...

Dear Mr. Muthuraman,

Thank you for your comments. Others have already translated Puranaanuuru into English. For example, Prof. George Hart has done an excellent job of translating Puranaanuuru into English. So also, Mrs. Vaidhehi Herbert. Prof. George Hart's translation is available from amazon.com

Regards,
Prabhakaran

linza said...

Glad to see your excellent post sir. Thank you so much.