325. வேந்து தலைவரினும் தாங்கும்!
பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார் (27 – 30, 325). இவர் உறையூரைச் சார்ந்தவர். இவர் தந்தையாரின் பெயர் முதுகண்ணன். இவர் சோழன் நலங்கிள்ளியைப் புகழந்து பாடியவர். இவர் இயற்றிய பாடல் குறுந்தொகையிலும் ஒன்று உண்டு (133). புறநானூற்றுப் பாடல் 29 -இல் “நல்லதன் நலனும் தீயதன் தீமையும் இல்லை என்போர்க்கு இனன் ஆகிலியர்” என்று சோழன் நலங்கிள்ளிக்கு அறிவுரை கூறுகிறார். மற்றும், அதே பாடலில், உலகம் தோன்றி நின்று மறைவதைக் கூத்தர்களின் கோலத்திற்கு உவமையாகக் கூறுகிறார்.
பாடலின் பின்னணி: ஒருகால் உறையூர் முதுகண்ணன் சாத்தனார் போரில் வெற்றிபெற்ற வீரன் ஒருவனைக் காணச் சென்றார். அவனது ஊரையும், ஊர் மக்களையும், அவர்களது ஈகையையும் இப்பாடலில் அவர் புகழ்ந்து பாடுகிறார்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.
துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும் ஊரையும் இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
களிறுநீ றாடிய விடுநில மருங்கின்
வம்பப் பெரும்பெயல் வரைந்துசொரிந்து இறந்தெனக்
குழிகொள் சின்னீர் குராஅல் உண்டலின்
சேறுகிளைத் திட்ட கலுழ்கண் ஊறல்
முறையின் உண்ணும் நிறையா வாழ்க்கை 5
முளவுமாத் தொலைச்சிய முழுச்சொல் ஆடவர்
உடும்பிழுது அறுத்த ஒடுங்காழ்ப் படலைச்
சீறில் முன்றில் கூறுசெய் திடுமார்
கொள்ளி வைத்த கொழுநிண நாற்றம்
மறுகுடன் கமழும் மதுகை மன்றத்து 10
அலந்தலை இரத்தி அலங்குபடு நீழல்
கயந்தலைச் சிறாஅர் கணைவிளை யாடும்
அருமிளை இருக்கை யதுவே வென்வேல்
வேந்துதலை வரினும் தாங்கும்
தாங்கா ஈகை நெடுந்தகை ஊரே. 15
அருஞ்சொற்பொருள்: 1. களிறு = கருநிறப்பன்றி; நீறு = புழுதி; விடுநிலம் = தரிசு நிலம்; மருங்கு = பக்கம். 2. வம்பு = புதுமை; பெயல் = மழை; வரைதல் = தனக்குரியதாக்கல். 3. சின்னீர் = சிறிதளவு நீர்; குரால் = கன்றையுடைய பசு (அல்லது ஒருவகைப் பசு). 4. கிளைத்தல் = நீக்குதல்; கலுழ்தல் = கலங்கல். 6. முளவு =முள்ளம் பன்றி. 7. இழுது = தசை; ஒடு = ஒடுமரம்; காழ் = வயிரம், உறுதி; படலை = கட்டுக்கதவு (படல்). 10. மறுகு = தெரு; மதுகை = வலிமை. 11. அலந்த = வாடிய (உலர்ந்த); அலந்தலை = அலந்த தலை; இரத்தி = ஒருவகை மரம்; அலங்குதல் = அசைதல். 12. கயம் = இளமை. 13. மிளை = காவற்காடு; இருக்கை = இருப்பிடம், குடியிருப்பு, ஊர். 14. தலைவருதல் = தோன்றுதல்; தாங்குதல் = தடுத்தல். 15. தாங்கா = குறையாத.
கொண்டு கூட்டு: ஆடவர், முன்றில் கூறுசெய்திடுமார் வைத்த நிணம் கமழும் மன்றத்து நீழல் சிறார் விளையாடும் இருக்கையது நெடுந்தகை ஊர்.
உரை: பன்றிகளால் புழுதியாக்கப்பட்ட தரிசு நிலத்தில் புதிதாக வந்த பெருமழை அளவு கடந்து பெய்து அவ்விடத்தைவிட்டு நீங்கியது. அதனால், பள்ளங்களில் தங்கிய சிறிதளவு நீரை, கன்றையுடைய பசு குடித்து முடித்தது. அங்குள்ள மக்கள், சேற்றைத் தோண்டியதால் தோன்றிய கலங்கிய நீரை முறையாகப் பகிர்ந்து குடிப்பவர்கள்; வறுமையில் வாழ்பவர்கள். அங்குள்ள ஆடவர்கள் முள்ளம்பன்றியைக் கொல்பவர்கள். அவர்கள் சொல்லியதைச் சொல்லியவண்ணம் செய்து முடிப்பவர்கள். அவர்கள் அறுத்தெடுத்த உடும்பின் தசையை ஒடுமரத்தின் வலிய கழிகளால் செய்யப்பட்ட படல் சார்த்திய சிறிய வீட்டின் முற்றத்தில் எல்லாரும் பகிர்ந்து உண்ணுவதற்காக நெருப்பில் வாட்டுவர். அப்பொழுது, நெருப்பில் வாட்டிய புலாலின் மணம் தெருவெங்கும் கமழும். ஊர் மன்றத்தில் நிற்கும் உலர்ந்த தலையையுடைய மரத்தின் நிழலில், இளஞ்சிறுவர்கள் அம்பெய்தி விளையாடுவர். அவ்வூர் கடத்தற்கரிய காவற்காடுகள் உள்ள நாட்டில் உள்ளது. குறையாத ஈகையையுடைய இத்தலைவனுடைய ஊருக்கு, வெற்றி பயக்கும் வேலையுடைய வேந்தன் தன் படையுடன் வந்தாலும் அவ்வூரில் உள்ளவர்கள் அவனை எதிர்த்துப் போரிடும் ஆற்றல் உடையவர்கள்.
சிறப்புக் குறிப்பு: ’விடு நிலம்’ என்பது ஆநிரைகள் மேய்வதற்காக ஊரால் பொதுவாக விடப்பட்ட நிலம். ’வம்பு’ என்ற சொல்லுக்கு புதுமை என்று பொருள். ‘வம்பப் பெரும்புயல்’ என்பது, எதிர்பாராமல் பெய்த பெருமழையைக் குறிக்கிறது.
No comments:
Post a Comment