319. முயல் சுட்டவாயினும் தருவேம்!
பாடியவர்: ஆலங்குடி வங்கனார் (319). இவரது இயற்பெயர் வங்கன். இவர் சோழ நாட்டிலுள்ள ஆலங்குடி என்னும் ஊரைச் சார்ந்தவராதலால் ஆலங்குடி வங்கனார் என்று அழைக்கபட்டார். இவர் அகநானூற்றில் ஒருபாடலும் (106), குறுந்தொகையில் இரண்டு பாடல்களும் (8,45), புறநானூற்றில் ஒருபாடலும் (319) இயற்றியுள்ளார்.
பாடலின் பின்னணி: தலைவன் ஒருவன் போருக்குப் போயிருக்கிறான். அவனுடைய மனைவி வீட்டில் தனியாக இருக்கிறாள். ஒருநாள் இரவு நேரத்தில் பாணன் ஒருவன் தன் மனைவியோடு அத்தலைவனின் வீட்டிற்கு வருகிறான். இரவு நேரமாகையால் புறா, காடை, கெளதாரி போன்ற பறவைகளைப் பிடித்துச் சமைப்பதற்கு நேரமில்லை. அதனால், முன்பே சமைத்து வைத்திருந்த முயல்கறியை உண்டு, தங்கியிருந்து, தலைவன் வந்தவுடன் பரிசு பெற்றுச் செல்லுமாறு தலைவனின் மனைவி பாணனிடம் கூறுகிறாள்.
திணை: வாகை. வாகைப் பூவைத் தலையில் சூடிப் பகைவரை வென்று ஆரவாரித்தல்.துறை : வல்லாண் முல்லை. ஒருவீரனுடைய வீட்டையும், ஊரையும், இயல்பினையும் சொல்லி அவனுடைய புகழ்மிக்க ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்.
பூவற் படுவிற் கூவல் தொடீஇய
செங்கண் சின்னீர் பெய்த சீறில்
முன்றில் இருந்த முதுவாய்ச் சாடி
யாங்கஃடு உண்டென அறிதும்; மாசின்று;
படலை முன்றிற் சிறுதினை உணங்கல் 5
புறவும் இதலும் அறவும் உண்கெனப்
பெய்தற்கு எல்லின்று பொழுதே; அதனால்,
முயல்சுட்ட வாயினும் தருகுவேம்; புகுதந்து
ஈங்குஇருந் தீமோ முதுவாய்ப் பாண!
கொடுங்கோட்டு ஆமான் நடுங்குதலைக் குழவி 10
புன்றலைச் சிறாஅர் கன்றெனப் பூட்டும்
சீறூர் மன்னன் நெருநை ஞாங்கர்,
வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; வந்துநின்
பாடினி மாலை யணிய
வாடாத் தாமரை சூட்டுவன் நினக்கே. 15
அருஞ்சொற்பொருள்: 1. பூவல் = செம்மண்; படு = குளம்; கூவல் = பள்ளம்; தொடீஇ = தோண்டி. 2. செங்கண் = சிவந்த இடம்; சின்னீர் = சிறிதளவு நீர்; சீறில் = சிறிய வீடு. 3. முன்றில் = முற்றம்; முதுமை = பழமை. 4. ஆங்கு – அசை நிலை; அஃடு = அகடு (அடிப்பகுதி). 5. உணங்கல் = உலர்தல். 6. புற = புறா; இதல் = காடை, கெளதாரி; அறவும் = முற்றிலும். 7. பெய்தல் = இடுதல், கொடுத்தல்; எல் = மாலை வெளிச்சம். 8. புகு தந்து = புகுந்து; 9. முது = பேரறிவு; வாய் = மொழி, வாக்கு. 10. கொடுங்கோடு = வளைந்த கொம்பு; ஆமான் = ஆமா = காட்டுப் பசு; குழவி = கன்று. 11. புந்தலை = இளந்தலை. 12. சீறூர் = சிறிய ஊர்; நெருநை = நெருநல் = நேற்று; ஞாங்கர் = முன். 15. வாடாத் தாமரை = பொற்றாமரை.
கொண்டு கூட்டு: பாண, மாசின்று; பொழுது எல்லின்று; அதனால், தருகுவேம்; புகுதந்து ஈங்கிருந்தீமோ; நெருநை வேந்துவிடு தொழிலொடு சென்றனன்; நாளை வந்து ; அணிய, சூட்டுவன் எனக் கூட்டுக.
உரை: செம்மண் நிலத்தில், பள்ளத்திலே இருக்கும் குளத்திலே தோண்டி எடுத்த சிவந்த நிறமுடைய நீர், எங்கள் சிறிய வீட்டின் முற்றத்தில் உள்ள பழைய சாடியின் அடியில் கொஞ்சம் கிடக்கிறது. அது குடிப்பதற்கேற்ற, குற்றமற்ற நல்ல நீர். படல் வேலியோடு கூடிய முற்றத்தில், உலர்ந்த தினையை வீசி, அதை உண்ண வரும் புறா, காடை, கெளதாரி போன்ற பறைவைகளைப் பிடித்துச் சமைத்து உங்களுக்கு உணவு அளிக்கலாம் என்றால், இப்போது மாலை நேரம் கழிந்து இரவு வந்துவிட்டது. அதனால், முயலைச் சுட்டுச் சமைத்த கறியைத் தருகிறோம். அறிவிற் சிறந்த பாணரே! எம் இல்லத்திற்குள் வந்து அதை உண்ணுங்கள்; இங்கே தங்குக. எங்கள் ஊரில், வளைந்த கொம்புகளையுடைய காட்டுப் பசுவின், அசையும் தலையையுடைய இளம் கன்றுகளைச் சிறுவர்கள் தம்முடைய சிறுதேர்களில் பூட்டி விளையாடுவார்கள். என் கணவன் அத்தகைய சிற்றூருக்குத் தலைவன். நேற்றைக்கு முதல்நாள், வேந்தனின் கட்டளைப்படி அவன் போருக்குச் சென்றான். அவன் நாளை வந்துவிடுவான். அவன் வந்ததும், உன் மனைவிக்குப் பொன்மாலை அணிவிப்பான்; உனக்குப் பொற்றாமரைப் பூவைச் சூட்டுவான்.
சிறப்புக் குறிப்பு: சிறுவர்கள் காட்டுப் பசுக்களின் கன்றுகளைத் தங்கள் தேர்களில் பூட்டி விளையாடுகிறார்கள் என்பது அச்சிறுவர்களின் அச்சமின்மையையும் வீரத்தையும் குறிக்கிறது. தலைவன் வீட்டில் இல்லாத பொழுதும், தலைவனின் மனைவி விருந்தோம்பலில் சிறந்தவளாகத் திகழ்ந்தாள் என்பதும், தலைவன் வள்ளல் தன்மையில் சிறந்தவனாக இருந்தான் என்பதும் இப்பாடலிலிருந்து தெரிகிறது.
No comments:
Post a Comment